📅 Saturday, 19 September 2026 IST | புரட்டாசி 3, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 19, 2026 07:33 PM

பயிர்க்கடன் தள்ளுபடி போராட்டத்துக்கு வந்த விவசாயி திடீரென உயிரிழந்ததால்

பயிர்க்கடன் தள்ளுபடி போராட்டத்துக்கு வந்த விவசாயி திடீரென உயிரிழந்ததால்

பயிர்க்கடன் தள்ளுபடி போராட்டத்துக்கு வந்த விவசாயி திடீரென உயிரிழந்ததால் அதிர்ச்சி

அவருக்கு திடீரென கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த உடன் வந்தவர்கள், அவரை உடனடியாக நம்பர் 1 டோல்கேட் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்

திருச்சி: பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக்கோரி திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தொடர்ந்து 5-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், போராட்டத்தில் பங்கேற்பதற்காக கரூரில் இருந்து திருச்சி நோக்கி வந்த விவசாயி ஒருவர் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சக விவசாயிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

5-வது நாளாக போராட்டம்

விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும், விவசாயிகளின் கடன் சுமையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த போராட்டம், 5-வது நாளை எட்டியுள்ளது. பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.

அமைச்சர்கள் பேச்சுவார்த்தை

இந்நிலையில் போராட்டம் நடைபெறும் இடத்துக்கு அமைச்சர்கள் வினோத், ரமேஷ் மற்றும் காந்திராஜ் ஆகியோர் நேரில் வந்தனர். அங்கு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகளுடன் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, விவசாயிகளின் கோரிக்கைகள் தொடர்பாக அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்வதாக அமைச்சர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இடைத்தேர்தல் விதிமுறைகள் தற்போது அமலில் இருப்பதால், புதிய அறிவிப்புகளை உடனடியாக வெளியிட முடியாத நிலை இருப்பதாக அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார்.

மேலும், விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்க 20 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.

அவகாசம் ஏற்க மறுப்பு

ஆனால், அமைச்சர்கள் கேட்டுக்கொண்ட 20 நாள் அவகாசத்தை ஏற்க விவசாயிகள் மறுத்தனர். தங்களது கோரிக்கைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்றும், அதுவரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்றும் விவசாயிகள் தெரிவித்தனர். இதையடுத்து போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் சமயபுரம் பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

போராட்டத்துக்கு வந்த விவசாயிக்கு திடீர் மூச்சுத்திணறல்

இந்த நிலையில், கரூர் மாவட்டம் வாங்கல் அருகே உள்ள முனியப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த கந்தசாமி என்ற விவசாயி, போராட்டத்தில் பங்கேற்பதற்காக வாகனம் மூலம் திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த உடன் வந்தவர்கள், அவரை உடனடியாக நம்பர் 1 டோல்கேட் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

மேல் சிகிச்சைக்காக திருச்சி மருத்துவமனை

முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டபோதும் கந்தசாமியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. மாறாக அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் மேல் சிகிச்சைக்காக திருச்சி பால்பண்ணை அருகே உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இருப்பினும், மருத்துவர்களின் தீவிர சிகிச்சையும் பலனளிக்காமல் கந்தசாமி பரிதாபமாக உயிரிழந்தார்.

சக விவசாயிகள் அதிர்ச்சி

பயிர்க்கடன் தள்ளுபடி கோரி நடைபெற்று வரும் போராட்டத்தில் பங்கேற்பதற்காக புறப்பட்டு வந்த விவசாயி, வழியிலேயே திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் போராட்டத்தில் பங்கேற்றுள்ள விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

போராட்டத்தில் பங்கேற்கும் விவசாயிகளுக்கு தேவையான மருத்துவ மற்றும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும், உடல்நலக்குறைவு ஏற்படும் விவசாயிகளுக்கு உடனடியாக மருத்துவ உதவி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சக விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இதனிடையே, பயிர்க்கடன் தள்ளுபடி கோரிக்கை தொடர்பான போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருவதால், அடுத்தகட்டமாக அரசு தரப்பில் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு விவசாயிகள் மத்தியில் அதிகரித்துள்ளது.

தலைப்பு செய்திகள்

ஃபோட்டோ கேலரி