புதிய பஸ்கள் தொடக்க விழாவுக்காக 2 நாட்களாக 600 ஊழியர்கள் காத்திருப்பு
சென்னை: அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில், 300 புதிய பஸ்களை, முதல்வர் விஜய் இன்று தொடங்கி வைக்க உள்ளார். வெளியூரில் இருந்து, வந்த பஸ் டிரைவர்கள், நடத்துநர்கள், இரண்டு நாட்களாக, தொடக்க விழாவுக்காக காத்திருக்கின்றனர்.
அரசு போக்குவரத்து கழகங்களுக்கு, 300 புதிய பஸ்கள் வாங்க, கடந்த ஆட்சியில் 'டெண்டர்' வெளியிடப்பட்டது.
இதற்கான, பணிகள் முடிந்துள்ள நிலையில், புதிய பஸ்கள் தயாரிக்கப்பட்டு, கடந்த மாதம் அரசு போக்குவரத்துக் கழகங்களிடம் ஒப் படைக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே, மாநகர போக்குவரத்துக் கழகம், விரைவு போக்குவரத்துக் கழகத்தை தவிர, விழுப்புரம், கும்பகோணம் உள்ளிட்ட இதர அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு, 300 புதிய பஸ்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
புதிய பஸ்கள் இயக்கம் தொடக்க விழாவை, சென்னையில் நடத்த திட்டமிடப்பட்டது. தேதி முடிவாகாத நிலையில், வெளியூரில் இருந்த, 300 புதிய பஸ்களும், கடந்த 22ம் தேதி சென்னை கொண்டு வரப்பட்டன.
கோயம்பேடில் 120, கிளாம்பாக்கத்தில் 180 என, 300 பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
விழா தேதி முடிவாகாத நிலையில், பஸ்களை ஓட்டி வந்த டிரைவர்கள், நடத்துனர்கள், 600 பேர் கடந்த இரு நாட்களாக, சென்னையில் காத்திருக்கின்றனர். விழா முடிந்த பின், அந்த பஸ்களை எடுத்து செல்ல உத்தர விடப்பட்டுள்ளது.
புதிய பஸ் சேவை துவக்க விழாவின்போது, கணிசமான பஸ்களை வைத்து, முதல்வர் கொடியசைத்தால் போதுமானது. முன்பெல்லாம் இந்த முறையை தான் கடைபிடிப்பர்.
அனைத்து பஸ்களும், சென்னை வர வேண்டிய அவசியம் இல்லை. இம்முறை தேவையின்றி, அனைத்து பஸ்களையும் சென்னை கொண்டு வர உத்தரவிட்டுள்ளனர் என, ஊழியர்கள் தெரிவித்தனர்.
அரசு பஸ்களை சீரமைப்பது குறித்து, எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், ஏற்கனவே ஓடிக் கொண்டிருக்கும் பஸ்களை சென்னைக்கு வரவழைத்து நிறுத்தி வைத்திருப்பது கண்டனத்திற்குரியது. சென்னைக்கு வரவழைக்கப்பட்ட பஸ்களை, உடனடியாக புதிய வழித்தடங்களில் இயக்க வேண்டும். போக்குவரத்துக் கழகத்துக்கு, கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தும் வகையிலான இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்ட அதிகாரிகள் மீது, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தினகரன், அ.ம.மு.க., பொதுச்செயலர்