📅 Tuesday, 14 July 2026 IST | ஆனி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics July 14, 2026 07:33 AM

புதிய அரசியல் அத்தியாயத்தை எழுதுகிறாரா அண்ணாமலை

புதிய அரசியல் அத்தியாயத்தை எழுதுகிறாரா அண்ணாமலை

- அஸ்பயர் கே. சுவாமிநாதன் -

அரசியல் ஆய்வாளர்

இந்தியாவில் உள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகள் உறுப்பினர்களைச் சேர்க்கின்றன. சில கட்சிகள் தொண்டர்களை உருவாக்குகின்றன. ஆனால், 'நாங்கள் தலைவர்களை உருவாக்கப் போகிறோம்' என்ற தத்துவத்தை, அரசியலின் மையக் கருத்தாக முன்வைத்த இயக்கங்கள் மிகவும் அரிது.

அண்ணாமலை உருவாக்கி இருக்கும் 'வீ தி லீடர்ஸ்' என்ற பெயரே, ஒரு வித்தியாசமான சிந்தனையை வெளிப்படுத்துகிறது. 'எங்களைப் பின்தொடருங்கள்' என்று அது சொல்லவில்லை. 'நீங்களே தலைவராகுங்கள்' என்ற மனநிலையை உருவாக்க முயல்கிறது.

அண்ணாமலை தொடர்ந்து ஒரு விஷயத்தை வலியுறுத்தி வருகிறார். முதலில் 50 லட்சம் உறுப்பினர்களை உருவாக்க வேண்டும். அதன் பிறகே அரசியல் கட்சி. ஆனால், இங்கே இன்னும் முக்கியமான கேள்வி ஒன்று இருக்கிறது. 50 லட்சம் உறுப்பினர்களை உருவாக்குவது மிகப்பெரிய சாதனையாக இருக்கலாம்.

ஆனால், அந்த 50 லட்சத்தில் இருந்து எத்தனை பேர் நாளைய சமூகத் தலைவர்களாக, உள்ளாட்சித் தலைவர்களாக, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களாக, மக்கள் இயக்கத் தலைவர்களாக உருவாகப் போகின்றனர்?

ஏனெனில், ஒரு இயக்கத்தின் வலிமை அதன் உறுப்பினர் எண்ணிக்கையில் இல்லை. அது உருவாக்கும் தலைவர்களின் எண்ணிக்கையிலும் தரத்திலும்தான் இருக்கிறது.

பொள்ளாச்சியில் நடைபெற்ற முதல் மாநில மாநாடு, இந்த இயக்கம் தன்னை எப்படி அடையாளப்படுத்திக் கொள்ள விரும்புகிறது என்பதற்கான ஒரு அறிவிப்பாக இருந்தது.

அந்த மேடையில் தேர்தல் அரசியலை விட, 'போதைப்பொருள் இல்லா தமிழகம்' என்ற சமூக நோக்கம் முன்னிலைப்படுத்தப்பட்டது. அதேபோல், மதம் இந்த இயக்கத்தின் மையப் பொருள் அல்ல என்றும் அண்ணாமலை தெளிவுபடுத்தினார்.

அரசியலுக்கு முன்பாக சமூகத்தில் ஒரு பங்களிப்பை உருவாக்கும் இயக்கமாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் முயற்சி இது.

பொள்ளாச்சி மாநாட்டில் என்னை மிகவும் கவர்ந்தது, மேடையில் பேசப்பட்ட உரைகள் மட்டுமல்ல; அந்த அரங்கத்தை நிரப்பியிருந்த மக்களும் கூட. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்தவர்கள், இளைஞர்கள்; பெண்கள்; நடுத்தர வயதினர்கள்; மூத்த குடிமக்கள்; பல்வேறு தொழில்களைச் சேர்ந்தவர்கள்.

இது ஒரு வழக்கமான தேர்தல் பிரசாரக் கூட்டமோ, வேட்பாளர் அறிமுகக் கூட்டமோ அல்ல. ஒரு புதிய இயக்கத்தின் முதல் மாநில மாநாடு. அப்படியிருந்தும் அந்த அளவிற்கு மக்கள் தன்னார்வத்துடன் வந்து பங்கேற்றிருப் பது அரசியல் ரீதியாக கவனிக்கப்பட வேண்டிய நிகழ்வு.

இது ஒரு விஷயத்தை உணர்த்துகிறது...

தமிழகத்தில் இன்னும் ஒரு குறிப்பிடத்தக்க பகுதி மக்கள் மாற்று அரசியல் குறித்து சிந்தித்துக் கொண்டிருக்கின்றனர் என்பதே. அந்த எதிர்பார்ப்பை நம்பிக்கையாக மாற்ற வேண்டும்.

எதிர்காலத்தில் அரசியல் போட்டி, வெறும் ஓட்டுகளுக்காக மட்டும் இருக்குமா அல்லது தலைமைத்துவத்தை உருவாக்குவதற்கான போட்டியாக மாறுமா?

தமிழக மக்களில் பெரும்பாலானோர் தேர்தலில் போட்டியிட விரும்புவதில்லை. ஆனால், சமூகத்தில் ஒரு நல்ல மாற்றத்திற்கு தங்களால் முடிந்த பங்களிப்பை செய்ய விரும்புகின்றனர்.

அவர்களை ஒருங்கிணைத்து, பயிற்சி அளித்து, தலைமைப் பொறுப்புகளை வழங்கி, சமூகப் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் ஒரு தளமாக இந்த இயக்கம் மாற முடிந்தால், அது தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கக்கூடும். அதுவே இந்த இயக்கத்தின் மிகப்பெரிய போட்டி பலமாகவும் அமையக்கூடும். ஒரு இயக்கத்தின் வெற்றியை இனி உறுப்பினர் எண்ணிக்கையால் மட்டுமே அளவிட முடியாது.

அது எத்தனை தலைவர்களை உருவாக்கியது? எத்தனை இளைஞர்களை சமூகப் பணிக்குக் கொண்டு வந்தது? எத்தனை பெண்களுக்கு தலைமைப் பொறுப்புகளை வழங்கியது? எத்தனை கிராமங்களில் மக்கள் பங்கேற்பை உருவாக்கியது? எத்தனை சமூகப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண உதவியது?

இந்த கேள்விகளுக்கான பதில்கள்தான் நாளைய அரசியலின் உண்மையான அளவுகோல்களாக மாறலாம். நல்ல யோசனைகள் மட்டுமே அரசியலில் வெற்றியைத் தருவதில்லை. அவற்றைத் தொடர்ந்து செயல்படுத்தும் அமைப்பும், பொறுமையும், ஒழுக்கமும், சரியான தலைமைத்துவமும் அவசியம்.

'தொண்டர் அரசியல்' என்பதைத் தாண்டி, 'தலைமை உருவாக்கும் அரசியல்' என்ற சிந்தனையை, அண்ணாமலை வெற்றிகரமாக மக்களிடம் கொண்டு சேர்க்க முடிந்தால், அது அவரது தனிப்பட்ட வெற்றி மட்டு மல்ல; தமிழக அரசியலின் அடுத்த பரிணாமமாகவும் மாறக்கூடும்.

அப்படியான நாள் வந்தால், அண்ணாமலை ஒரு புதிய கட்சியைத் தொடங்கிய தலைவர் என்று மட்டும் அல்ல, தமிழக அரசியலில் ஒரு புதிய அரசியல் சிந்தனையை அறிமுகப்படுத்திய தலைவர் என்றும் நினைவு கூரப்படுவார்.