கால்பந்து உலகக்கோப்பையில் மேட்ச்
கால்பந்து உலகக்கோப்பையில் மேட்ச்-பிக்சிங் அச்சம் அதிகரிப்பு.. பில்லியன் டாலர்களை எட்டிய சூதாட்டம்
நியூயார்க்: நடப்பு 2026 ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் போது ஆன்லைன் கணிப்பு மற்றும் சூதாட்ட சந்தைகளின் அசுர வளர்ச்சி, விளையாட்டு உலகிற்குப் புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. பில்லியன் கணக்கிலான டாலர்கள் இந்த தளங்களில் முதலீடு செய்யப்படுவதால், போட்டிகளின் நேர்மைத்தன்மை மற்றும் மேட்ச்-பிக்சிங் குறித்த அச்சங்கள் மீண்டும் வலுவடைந்துள்ளன.
கல்ஷி மற்றும் பாலிமார்க்கெட் போன்ற கணிப்புச் சந்தை நிறுவனங்கள், விளையாட்டு சூதாட்டத்தை ஒரு பெரிய நிதி வர்த்தகம் போல விளம்பரப்படுத்தி வருகின்றன. பாரம்பரிய சூதாட்டத்தைப் போல அல்லாமல், இங்கு பயனர்கள் தங்களுக்குள் பந்தயம் கட்டிக் கொள்கின்றனர். உலகக்கோப்பையின் ஒரு சில குறிப்பிட்ட முக்கிய போட்டிகளுக்கு மட்டுமே 100 மில்லியன் டாலருக்கும் அதிகமாகப் பந்தயம் கட்டப்பட்டுள்ளது. மொத்த உலகக்கோப்பை பந்தய வர்த்தகம் 5.5 பில்லியன் டாலரைத் தாண்டியுள்ளதாக கல்ஷி நிறுவனம் தெரிவித்துள்ளது.
விளையாட்டுடன் சேர்த்து அரசியல், பிரபலங்களின் திருமணங்கள் போன்ற பிற நிகழ்வுகளுக்கும் இங்கு கணிப்புகள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில், ஃபிஃபா அமைப்பு தனது வணிக உறவுகளை விரிவுபடுத்தும் விதமாக, 'ஏடிஐ பிரிடிக்ட்ஸ்ட்ரீட்' என்ற கணிப்பு சந்தை தளத்துடன் 100 மில்லியன் முதல் 150 மில்லியன் டாலர் மதிப்பிலான உலகளாவிய கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
ஃஃபிஃபா அமைப்பின் இந்த நடவடிக்கை கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இத்தகைய கணிப்புச் சந்தைகள் சூதாட்டத்தை நிதி வர்த்தகம் போலக் காட்டி சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிப்பதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. மேலும், அணியின் ரகசியத் தகவல்களை முன்கூட்டியே அறிந்து கொண்டு பந்தயம் கட்டும் 'உள்விவரத் தகவல்' மற்றும் மேட்ச்-பிக்சிங் போன்ற முறைகேடுகளுக்கு இது வழிவகுக்கும் என்று அஞ்சப்படுகிறது.
கால்பந்து போட்டிகள் தொடர்பான எந்தவொரு சூதாட்டத்திலும் வீரர்கள், அதிகாரிகள் மற்றும் முகவர்கள் ஈடுபடக் கூடாது என்று ஃபிஃபா அமைப்பின் சொந்த நெறிமுறை விதிகள் இருக்கும் நிலையில், ஃபிஃபா சூதாட்ட நிறுவனங்களுடன் பில்லியன் கணக்கில் ஒப்பந்தம் செய்வது பெரும் முரண்பாடாகப் பார்க்கப்படுகிறது.