📅 Wednesday, 08 July 2026 IST | ஆனி 24, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News July 08, 2026 07:00 PM

கங்குலி பிறந்தநாளில் இரட்டை மகிழ்ச்சி.. தேடி வரும் பெரும் கௌரவம்.. 'ஹால் ஆஃப் பேம்' பட்டம்

கங்குலி பிறந்தநாளில் இரட்டை மகிழ்ச்சி.. தேடி வரும் பெரும் கௌரவம்.. 'ஹால் ஆஃப் பேம்' பட்டம்

கங்குலி பிறந்தநாளில் இரட்டை மகிழ்ச்சி.. தேடி வரும் பெரும் கௌரவம்.. 'ஹால் ஆஃப் பேம்' பட்டம்

கொல்கத்தா: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் மதிப்புமிக்க 'ஹால் ஆஃப் பேம்' பட்டியலில் சேர்க்கப்படவுள்ளார். இன்று (ஜூலை 8) அவர் தனது 54-வது பிறந்தநாளைக் கொண்டாடும் வேளையில் இந்த மகிழ்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.

வரும் ஜூலை 11 அன்று நடைபெறும் ஐசிசி-யின் வருடாந்திர கூட்டத்தின் முடிவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவுள்ளது. இதன் மூலம் 'ஹால் ஆஃப் பேம்' பட்டியலில் இணையும் 12-வது இந்திய வீரர் என்ற பெருமையை கங்குலி பெறவுள்ளார். கடந்த 2009-ல் தொடங்கப்பட்ட இந்த அமைப்பில் இதுவரை 11 இந்தியர்கள் உட்பட மொத்தம் 122 வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு எம்.எஸ். தோனி உட்பட 7 வீரர்கள் இதில் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த கேப்டன்களில் ஒருவரான கங்குலி, சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் 5-வது இடத்திலும், அதிக போட்டிகளில் வழிநடத்திய கேப்டன்கள் பட்டியலில் 4-வது இடத்திலும் உள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் தொடக்க வீரராக 9,000 ரன்களைக் கடந்த 6 வீரர்களில் இவரும் ஒருவர்.

கடந்த 1990-களின் இறுதியிலும் 2000-களின் தொடக்கத்திலும் ஒருநாள் போட்டிகளில் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாகத் திகழ்ந்த கங்குலி, 1999-ல் 41 போட்டிகளில் விளையாடி 1767 ரன்கள் குவித்தார். இது சச்சின் டெண்டுல்கரின் 1894 ரன்களுக்குப் பிறகு ஒரு காலண்டர் ஆண்டில் ஒரு வீரர் எடுத்த இரண்டாவது அதிகபட்ச ரன்களாகும். அதேபோல் 2000-ல் அவர் விளாசிய 7 சதங்களும், சச்சினின் 9 சதங்களுக்குப் பிறகு இரண்டாவது அதிகபட்ச சாதனையாக இன்றும் நீடிக்கிறது.

இந்திய அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்ட கங்குலி, பின்னர் இந்திய கிரிக்கெட்டை நிர்வகிக்கும் பிசிசிஐ அமைப்பின் தலைவராகவும் செயல்பட்டார். தற்போது சவுரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் உருவாகி வரும் நிலையில், அவரது பிறந்தநாளை முன்னிட்டு இன்று அந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் கங்குலியின் ரசிகர்கள் இரட்டை மகிழ்ச்சியில் திளைத்து வருகின்றனர்.