ஃப்ராங்க்பர்ட்டில் ஒலித்த தமிழின் குரல்
ஃப்ராங்க்பர்ட் புத்தகக் காட்சியில், ஜெர்மனிக்கான இந்திய துணைத் தூதர் (பொறுப்பு) தீபக் பன்சால், ஜெர்மனி தமிழ்ச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பாலாஜி ஹரிதாஸ், தமிழக அரசின் பிரதிநிதிகள் மற்றும் தமிழ்ப் பதிப்பாளர்கள் முன்னிலையில், உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 'தி ஏசியாடிக்' பதிப்பகத்தின் நிர்வாகிகள், திருக்குறளின் உக்ரைனிய மொழிபெயர்ப்பு நூலை, தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் ஆர்.வி.ஷஜீவனாவிடம் வழங்கினர்.
உலகின் பல பகுதிகளில் பன்னாட்டுப் புத்தகக் காட்சிகள் நடைபெற்றாலும், ஜெர்மனி நாட்டின் ஃப்ராங்க்பர்ட் நகரில் நடைபெறும் புத்தகக் காட்சி தனித்துவம் வாய்ந்தது. 500 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் இந்தப் புத்தகக் காட்சி, உலகின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், இலக்கிய முகவர்கள் எனப் பல தரப்பினரையும் தொடர்ந்து ஈர்த்து வருகிறது.
இவ்வாண்டு பார்வையாளர்களின் எண்ணிக்கை சற்று குறைந்திருந்தாலும், பங்கேற்ற பதிப்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இது முழுக்க முழுக்க பதிப்பாளர்கள் மற்றும் இலக்கிய முகவர்களுக்கான வணிகச் சந்தை என்பதால், ஜெர்மனிய அரங்குகளைத் தவிர மற்ற இடங்களில் நேரடியாகப் புத்தக விற்பனை நடைபெறுவதில்லை. வழக்கம் போல எண்ணற்ற கருத்தரங்குகளாலும் சுவாரசியமான விவாதங்களாலும் புத்தகக் காட்சி களைகட்டியது.
செயற்கை நுண்ணறிவினால் ஏற்படும் தாக்கம், அறிவுசார் காப்புரிமை மீறல், டிஜிட்டல் சூழலில் குறைந்து வரும் வாசிப்புப் பழக்கம் உள்ளிட்ட தலைப்புகளில் கருத்தரங்குகள் நடைபெற்றன. இன்றைக்கு வளரும் சமூகத்தினர், குறிப்பாகக் குழந்தைகளிடம் டிஜிட்டல் போதை அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. அதிலிருந்து அவர்களை மீட்டுப் புத்தக வாசிப்பை மேம்படுத்தப் பல எண்ணங்களும் ஆலோசனைகளும் விதைக்கப்பட்டன. குறிப்பிட்ட வயது வரை சிறுவர்கள் திறன்பேசிகளைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிப்பது குறித்து நாடுகள் தீவிரமாகப் பரிசீலிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.