📅 Saturday, 17 October 2026 IST | புரட்டாசி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu October 17, 2026 05:03 AM

பொள்ளாச்சியில் வடகிழக்கு பருவமழை ஆரம்பமே அமர்க்களம்! தொடர்ந்து பெய்தால் வறட்சி நீங்கும்

பொள்ளாச்சியில் வடகிழக்கு பருவமழை ஆரம்பமே அமர்க்களம்! தொடர்ந்து பெய்தால் வறட்சி நீங்கும்

பொள்ளாச்சி: தென்மேற்கு பருவமழை போதிய அளவில் பெய்யாததால் வறட்சியின் பிடியில் சிக்கிய பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில், வடகிழக்கு பருவமழை தொடக்கத்திலேயே தீவிரம் காட்டியுள்ளது. ஒரே நாளில் 149 மி.மீ., மழை பதிவானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு பெய்யாததால், பி.ஏ.பி., திட்டத்தில் உள்ள ஒரு அணை கூட நிரம்பவில்லை. குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகள் நீரின்றி வறண்டன. இதனால், பாசனத்துக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டதுடன், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, கிணறு மற்றும் போர்வெல் பாசனமும், குடிநீர் ஆதாரங்களிலும் சிக்கல் ஏற்பட்டது.

மேலும், எல்–நினோ பாதிப்பு காரணமாக, பகலில் அதீத வெயில் நிலவியது. இதனால், சீதோஷ்ண நிலையில் மாற்றம் ஏற்பட்டது. குறிப்பாக, பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில் பிரதான விவசாயமாக விளங்கும் தென்னை சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டது.

தென்னைக்கு முறையாக தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை ஏற்பட்டதால், மரங்களின் வளர்ச்சி மற்றும் காய்ப்புத் திறன் பாதிக்கப்பட்டதால், விவசாயிகள் கவலையடைந்தனர்.

தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க பல பகுதிகளில், தென்னை விவசாயிகள் விலைக்கு தண்ணீர் வாங்கி மரங்களுக்கு பாய்ச்சி வருகின்றனர். இதனால், சாகுபடி செலவும் அதிகரித்து, விவசாயிகளுக்கு கூடுதல் பொருளாதார சுமை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், வானிலை ஆய்வு மையம், 15ம் தேதி வடகிழக்கு பருவமழை துவங்கும். கோவை மாவட்டத்தில் இயல்பை விட அதிக மழை பெய்யும் என, அறிவித்துள்ளது.

அதேபோன்று, வடகிழக்கு பருவமழை நேற்று மாநிலம் முழுவதும் பரவலாக பெய்தது. வடகிழக்கு பருவமழை தொடக்கத்திலேயே பொள்ளாச்சி பகுதியில் கனமழையாக பெய்துள்ளது. இடி, மின்னலுடன், நேற்று முன்தினம் மாலை முதல், இரவு வரை மழை கொட்டித்தீர்த்தது. அதிவேக காற்று இன்று மழை பெய்ததால் பாதிப்புகள் தவிர்க்கப்பட்டது.

கடந்த இரு மாதங்களாக, மழை பொழிவின்றி வெயில் நிலவியதால், வெயிலால் காய்ந்திருந்த நிலத்தில் மழை நீர் கொட்டியதும், நீரை உள்வாங்கி குளிர்ந்தது. விவசாய நிலங்களில், மழை நீர் தேங்கியது.

விவசாயிகள் கூறியதாவது:

தற்போது பெய்துள்ள மழையால், தென்னை மரங்களுக்கு பாசன நீர் கிடைப்பதுடன், தண்ணீரை விலைக்கு வாங்குவது தவிர்க்கப்படும். கால்நடைகளுக்கான தண்ணீர் தேவையை சமாளிக்கலாம்.

ஒரே நாளில் பெய்யும் கனமழையால் வறட்சி நீங்காது. மழை தொடர்ந்து பெய்ய வேண்டும். மழை நீரை சேமிக்க வேண்டும் அப்போது தான் நிலத்தடி நீர்மட்டம் உயரும். ஆனால், நேற்று பெய்த மழை பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. ஓரிரு நாட்களில் பெய்ய வேண்டிய மழை, சில மணி நேரத்தில் பெய்துள்ளது. இதனால், மழைநீர் வீணாகும்.

வடகிழக்கு பருவமழை தொடக்கத்திலேயே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. மழை தொடர்ந்தால், வறண்ட குளம், குட்டைகள், பிற நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்கும்.

இவ்வாறு, கூறினர்.

பொள்ளாச்சி பகுதியில் பெய்த கனமழையால், உடுமலை ரோட்டில், ஊஞ்சவேலம்பட்டி, திப்பம்பட்டி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளம் கரைபுரண்டு சென்றது. மையத்தடுப்பை அகற்றி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. அப்பகுதியில், வாகனங்கள் அனைத்து சிறிது நேரம் நிறுத்தம் செய்யப்பட்டன.பாலக்காடு ரோடு மேம்பாலம் கீழ் மழை நீர் தேங்கி உள்ளதால், வாகன ஓட்டுநர்கள் சிரமப்பட்டனர். மரப்பேட்டை தன்னாசியப்பன் வீதியில் குடியிருப்பு பகுதியில் மழை நீர் தேங்கியது.கிணத்துக்கடவு பகுதியில் மின்வாரிய அலுவலகத்தில் இருந்து அரசம்பாளையம் செல்லும் ரோட்டில் முக்கிய வளைவு பகுதிகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி, சேறும், சகதியுமாக உள்ளதால், பைக் ஓட்டுநர்கள் சிரமப்படுகின்றனர். இதே ரோட்டில் ரயில்வே கேட் அருகே லே–அவுட் சுற்று சுவரில் ஒரு பகுதி சரிந்தது.

நேற்று காலை, 8:00 மணி வரை பதிவான மழையளவு (மி.மீ.,) வருமாறு:பொள்ளாச்சி தாலுகா அலுவலகம் – 153, பொள்ளாச்சி பி.ஏ.பி., அலுவலகம் – 149, சோலையாறு – 24, பரம்பிக்குளம் – 7, ஆழியாறு – 41.8, வால்பாறை – 18, மேல்நீராறு – 28, கீழ்நீராறு – 24, காடம்பாறை – 33, சர்க்கார்பதி – 13, வேட்டைக்காரன்புதுார் – 30.8, துாணக்கடவு – 14, பெருவாரிப்பள்ளம் – 11, மேல்ஆழியாறு – 30, நெகமம் – 19.2, பெதப்பம்பட்டி – 26, சுல்தான்பேட்டை – 32, பொங்கலுார் – 160 என்ற அளவில் மழை பெய்தது.