‘பிக்பாஸ்’ பிரபலம் வர்ஷினி வெங்கட் கைது
வர்ஷினி வெங்கட்
இது குறித்து காவல் துறை தரப்பில் இருந்து வெளியான தகவல்கள்: ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்தவர் தருண் (29). குறும்பட தயாரிப்பாளரான இவர், பைனான்ஸ் மற்றும் பங்குச்சந்தை தொழில்களைச் செய்து வருகிறார். தொழில் காரணமாக கடந்த 6 மாதங்களாக சென்னை கிண்டியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்கி வந்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி ஓட்டல் பாருக்கு தனது நண்பர்களுடன் வந்த வர்ஷினி, வெளியே சென்றுவிட்டுத் திரும்பிய தருணைப் பேசுவதற்காக வெளியே அழைத்துள்ளார். ஓட்டல் அருகே தருண் பேசிக்கொண்டிருந்தபோது, வர்ஷினியுடன் வந்த அவரது நண்பர் சஞ்சய் மற்றும் சிலர் தருணைத் தாக்கி அவரிடமிருந்த ரூ.50 ஆயிரத்தைப் பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, சஞ்சய், தருணைத் தொடர்புகொண்டு, ‘உன்னால் வர்ஷினியின் வாழ்க்கை வீணாகிவிட்டது, அவருக்கு உடனடியாக ரூ.3 லட்சம் வழங்க வேண்டும்’ என மிரட்டியுள்ளார்.
இதனால் அச்சமடைந்த தருண், வர்ஷினியின் வங்கிக் கணக்குக்கு ரூ.3 லட்சத்தை அனுப்பியுள்ளார். பின்னர் மீண்டும் மிரட்டிய சஞ்சய், ‘சமாதானம் செய்த எனக்கு ரூ.2 லட்சம் தர வேண்டும், இல்லையென்றால் வர்ஷினியை வைத்து உன் மீது காவல் நிலையத்தில் புகார் அளிப்பேன்’ என்று கூறி மேலும் ரூ.2 லட்சத்தைப் பெற்றுள்ளார்.
இந்நிலையில், கடந்த செப்டம்பர் 16-ம் தேதியன்று மீண்டும் தருணைத் தொடர்புகொண்ட சஞ்சய், ‘மேலும் ரூ.27 லட்சம் தர வேண்டும்; இல்லையெனில் சுட்டுக் கொன்றுவிடுவேன்’ என மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த தருண், தனது வழக்கறிஞருடன் சென்று கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.