ஒளவையார் விழா: திரையிசைப் பாடல்களின் தமிழ் இனிமை
தமிழ்மொழிப் பண்பாட்டுக் கழகத்தில் ஒளவையார் விழா இவ்வாண்டு மீண்டும் நடந்தேறியது.
இம்முறை ‘திரையிசை வளர்த்த தமிழ்’ என்கிற இசை வடிவ நிகழ்ச்சி படைக்கப்பட்டது.
இவ்விழா ஆகஸ்ட் 23ஆம் தேதி உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய அரங்கில் நடைபெற்றது.
விழாவின் தொகுப்பாளர்கள் கவிஞர் கேத்திரபாலன் மூக்காண்டியும் திருவாட்டி ஜெயலட்சுமி முத்துக்குமாரும் தமிழ்த்தாய் வாழ்த்தோடு விழாவினைத் தொடங்கினர். அதன்பின், மகிஷா முத்துக்குமாரின் நடன அங்கம் இடம்பெற்றது.
நிகழ்ச்சியின் விருந்தினர்கள், புரவலர்கள், பார்வையாளர்கள் ஆகியோரை தமிழ்மொழி பண்பாட்டுக் கழகத்தின் தலைவர் ஹரிகிருஷ்ணன் முத்துசாமி வரவேற்றார்.
எம்இஎஸ் குழும நிறுவனங்களின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான திரு முகமது அப்துல் ஜலீல் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
மலேசியப் புகழ் எஸ்.பாண்டிதுரையின் சிறப்பு இசை நிகழ்ச்சியும் இடம்பெற்றது. ‘அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது’, ‘ஆறோடும் மண்ணில் எங்கும் நீரோடும்’, ‘அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே’, ‘இறைவனிடம் கையேந்துங்கள்’ உள்ளிட்ட பாடல்கள் நிகழ்ச்சியில் இசைக்கப்பட்டன.
விழாவின் ஏற்பாட்டை தலைமையேற்று வெற்றிகரமாக்கிய ஏற்பாட்டுக் குழுத் தலைவர் திருவாட்டி அகிலா முத்துக்குமார் நன்றியுரை வழங்கினார்.