நடிகர் தனுஷுக்கு தேசிய விருது வழங்கினார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றுக்கொண்டார் தனுஷ்; ஜி.வி. பிரகாஷுக்கு சிறந்த இசையமைப்பாளர் விருது
72-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார், சண்டை பயிற்சியாளர் அனல் அரசு ஆகியோர் தேசிய விருதை பெற்றனர்.
Published : September 22, 2026 at 5:44 PM IST
Updated : September 22, 2026 at 6:12 PM IST
குஜராத்: சிறந்த நடிகருக்கான தேசிய விருதினை, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவிடம் இருந்து நடிகர் தனுஷ் பெற்றுக்கொண்டார். ஜி.வி. பிரகாஷுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது வழங்கப்பட்டது.
72-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா குஜராத் மாநிலம் கெவாடியா பகுதியில் இன்று (செப்.22) நடைபெற்றது. இதுவரை டெல்லியில் மட்டுமே நடைபெற்று வந்த தேசிய விருது வழங்கும் விழா, முதன்முறையாக இந்த ஆண்டு குஜராத்தில் நடத்தப்பட்டுள்ளது.
’ஏக் பாரத் ஷ்ரேஷ்ட பாரத்’ என்ற கருப்பொருளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், இனிவரும் தேசிய விருதுகள் வழங்கும் விழாவை ஒவ்வொரு வருடமும், பல்வேறு மாநிலங்களில் நடத்த மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
இந்த நிகழ்வில், தேசிய விருதுகள் வென்ற திரைக் கலைஞர்களுக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு விருதுகளை வழங்கி கௌரவித்தார். அப்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான 'ராயன்' திரைப்படத்திற்காக நடிகர் தனுஷ் சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதை பெற்றார். ராயன் திரைப்படத்தை தனுஷ் எழுதி இயக்கியுள்ளார்.
மேலும், அருண் மாதேஸ்வரன் இயக்கிய கேப்டன் மில்லர் படத்திற்காக நடிகர் தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான (சிறப்பு விருது) தேசிய விருது வழங்கப்பட்டது. இதன்மூலம் தனுஷ் தனது 6வது தேசிய விருதை பெற்றுள்ளார்.
தொடர்ந்து, சினிமாவிற்கு ஆற்றிய பங்களிப்பை கௌரவிக்கும் வகையில், இந்திய திரைப்பட துறையின் உயரிய விருதான 'தாதா சாகேப் பால்கே' விருது கன்னட நடிகர் ஆனந்த் நாக்கிற்கு வழங்கப்பட்டது. கன்னட நடிகர் மறைந்த ராஜ்குமாருக்கு பிறகு, இந்த விருது ஆனந்த் நாக்-க்கு வழங்கப்பட்டுள்ளது.
சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருதை 'அமரன்' படத்திற்காக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் பெற்றார். தொடர்ந்து அமரன் படத்திற்காக சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதை ராஜ்குமார் பெரியசாமியும், சிறந்த படத்தொகுப்பிற்கான தேசிய விருதை கலைவாணன் ஆகியோரும் ஜனாதிபதி திரௌபதி முர்முவிடம் பெற்றுக் கொண்டனர்.
அதேபோல், மகாராஜா படத்திற்காக சிறந்த சண்டை பயிற்சியாளருக்கான தேசிய விருதை அனல் அரசு பெற்றார்.
மேலும், மகாராஜா படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதை சாச்சனா நமிதாஸ் பெற்றார். தொடர்ந்து, சிறந்த நடிகருக்கான தேசிய விருதை 'பிரம்மயுகம்' படத்திற்காக மம்மூட்டி பெற்றுக் கொண்டார். அதேபோல, 'சந்து சாம்பியன்' படத்திற்காக சிறந்த நடிகர் தேசிய விருதினை கார்த்திக் ஆர்யன் பெற்றுக் கொண்டார்.