📅 Wednesday, 23 September 2026 IST | புரட்டாசி 7, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 23, 2026 04:03 AM

மண்டாடி மெகா வெற்றி.. சூரியுடன் இரா.சரவணன் சந்திப்பு.. இன்னும் மாறவில்லையாம்

மண்டாடி மெகா வெற்றி.. சூரியுடன் இரா.சரவணன் சந்திப்பு.. இன்னும் மாறவில்லையாம்

சென்னை: சூரி நடிப்பில் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் உருவாகியிருக்கும் மண்டாடி திரைப்படம் சில வாரங்களுக்கு முன்பு ரிலீஸானது. விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்ற படம்; வசூலிலும் நூறு கோடி ரூபாயை அள்ளியிருக்கிறது. இந்நிலையில் இயக்குநர் இரா.சரவணன் சமீபத்தில் சூரியை சந்தித்தது குறித்து நெகிழ்ச்சியோடு முகநூலில் பகிர்ந்திருக்கிறார்.

விடுதலை படத்திலிருந்து கதையின் நாயகனாக பயணப்படுகிறார் சூரி. அப்படி அவர் நடித்த படங்களில் மாமன் மட்டும்தான் நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்தன. மற்ற படங்கள் எல்லாம் சூப்பர் ரெஸ்பான்ஸ்தான். இப்போது அவர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் மண்டாடி படத்தில் நடித்திருக்கிறார். இதில் அவருடன் சத்யராஜ், மஹிமா நம்பியார், சுஹாஸ் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். எல்ரெட் குமார் தயாரிப்பில் ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.

படம் மெகா ஹிட்: படம் ரிலீஸான முதல் நாளிலேயே பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ்களை பெற்றது. சூரியின் நடிப்பெல்லாம் அனைவராலும் கொண்டாடப்பட்டது. விமர்சன ரீதியாக ஒர்க் அவுட் ஆன படம்; வசூலிலும் கெத்து காண்பித்திருக்கிறது. இதுவரை மொத்தம் நூறு கோடி ரூபாய்க்கும் மேல் வசூலை அள்ளியிருக்கிறதாம். இதுதான் சூரிக்கு முதல் நூறு கோடி ரூபாய் வசூல் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சூரியை சந்தித்தது குறித்து இயக்குநர் இரா.சரவணன் முகநூலில் நெகிழ்ச்சியோடு பகிர்ந்திருக்கிறார்.

இரா.சரவணன் பதிவு: அவர் தன்னுடைய பதிவில், "அலுவலகக் கதவு தட்டப்பட்டது. திறந்தால் எதிரே சூரி அண்ணன். 'மண்டாடி' சுனாமியாய் சுழற்றி அடித்துக் கொண்டிருக்கையில், அவரிடம் போனில் பேசவே அவகாசம் கிடைக்க வாய்ப்பில்லை. அப்படியிருக்க எப்படி நேரில்? அதிர்ச்சியும் வியப்புமாய் அண்ணனுக்கு வாழ்த்துச் சொன்னோம். அவருடைய போன் அலறிக்கொண்டே இருந்தது. விமான நிலையத்தில் இருந்தே நேரே வந்திருப்பார் போல... உதவியாளர் சுரேஷ் ஓடிவந்து, "அண்ணன், உங்களைச் சந்திக்க ஆபிஸ்ல நிறைய பேர் வெயிட் பண்றாங்க..." என்றார்.

எதையும் சட்டை செய்யாமல் சூரி அண்ணன் அரை மணி நேரத்துக்கும் மேல் அலுவலகத்தில் அமர்ந்து, உரையாடி, சிரித்து, நெகிழ்ந்து கிளம்ப மனமே இல்லாமல் காருக்கு போனார். அப்போதும் போக விரும்பாமல் ரோட்டிலேயே கையைப் பிடித்தபடி பேசிக்கொண்டே நின்றார். கூட்டம் கூடிவிட்டது. "அண்ணா, மண்டாடி சூப்பர்..." எனக் கோஷம் கிளம்பியது. புகைப்படம் எடுக்க ஆட்கள் முட்டி மோதினார்கள்.

"அண்ணே, நிறைய பேசனும்ணே... நேரமே இல்ல... ஓடிக்கிட்டே இருக்கேன். குடும்பத்தை பார்த்தே பல நாளாச்சுண்ணே..." கும்பிட்டபடி அண்ணன் கிளம்பினார். எத்தகைய உயரம் எட்டினாலும் இந்தத் தன்மையும் எளிமையும் சூரி அண்ணனைவிட்டு எப்போதுமே போகாது போலிருக்கிறது. ஒரு மின்னல்போல் வந்து இந்தளவுக்கு நெகிழ்த்திவிட்டுப் போன அண்ணனின் திசை பார்த்து நின்றேன். பரிபூரண அன்பின் அடையாளமாய் அந்த கருப்பு நிற கார் போய்க்கொண்டிருந்தது" என குறிப்பிட்டிருக்கிறார்.