📅 Wednesday, 08 July 2026 IST | ஆனி 24, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu June 22, 2026 08:01 AM

நீட் எதிர்ப்புப் போராட்டத்தில் மாணவர்கள் மீது காவல் துறை அராஜக தாக்குதல்: பெ.சண்முகம் கண்டனம்

நீட் எதிர்ப்புப் போராட்டத்தில் மாணவர்கள் மீது காவல் துறை அராஜக தாக்குதல்: பெ.சண்முகம் கண்டனம்

சென்னை: நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீது காவல் துறையினர் அராஜக தாக்குதல் நடத்தியுள்ளனர். ஜனநாயக ரீதியிலான போராட்டங்களுக்கு உரிய முறையில் அனுமதி வழங்கிட வேண்டும் என மார்க்​சிஸ்ட் மாநில செய​லா​ளர் பெ.சண்முகம் தெரி​வித்​தார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒன்றிய பாஜக அரசின் நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்தும், தமிழகத்தில் தொடரும் நீட் தேர்வு தற்கொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நீட் தேர்வை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டுமென வலியுறுத்தியும் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் நேற்றைய தினம் போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் ஈடுபட முயன்ற மாணவர்களை ஒன்றுசேர விடாமல் ஆங்காங்கே கைது செய்தும், காட்டுமிராண்டித்தனமாக தாக்கியும் தமிழக காவல்துறையினர் அத்துமீறிய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஜனநாயக விரோத நடவடிக்கையினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

காவல் துறையினர் நடத்திய இந்த கொடூர தாக்குதலில் ஒரு மாணவரின் தோள்பட்டை இறங்கியுள்ளது. அதைவிட அநாகரீகமாக மாணவிகளை ஆண் காவலர்கள் தகாத முறையில் ஆடையைப் பிடித்து இழுத்தும், தள்ளியும், அடித்தும் கைது செய்துள்ளனர். மேலும் சட்டத்திற்கு புறம்பாக காவலர்கள் தங்களது சீருடையில் பெயர் வில்லைகளை அணியாமல் தங்களின் அடையாளத்தை மறைத்துக் கொண்டு அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஜனநாயக உரிமைகளை காலில் போட்டு மிதிக்கும் வகையில் காவல்துறையினரின் இந்த நடவடிக்கைகள் அமைந்துள்ளன. இந்திய சட்டங்கள் படியும் (பி.என்.எஸ். தேசிய மனித உரிமை ஆணைய வழிகாட்டுதல் படியும்) இவை குற்றங்களாகும். மேலும், அரசமைப்பு சட்ட உரிமைகள் மற்றும் கண்ணியத்துக்கு எதிரானதாகும்.

எனவே, நியாயமான கோரிக்கைகளுக்காக போராடிய மாணவர்கள் மீது வன்முறையை ஏவி தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதோடு, மாணவியர்களை தகாத முறையில் நடத்திய ஆண் காவலர்கள் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும், ஜனநாயக ரீதியிலான போராட்டங்களுக்கு உரிய முறையில் அனுமதி வழங்கிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது" என்று அவர் தெரிவித்துள்ளார்.