📅 Friday, 11 September 2026 IST | ஆவணி 26, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
World News September 10, 2026 11:33 PM

முடிவுக்கு வரும் ஈரான்

முடிவுக்கு வரும் ஈரான்

முடிவுக்கு வரும் ஈரான் - அமெரிக்கா மோதல்? ட்ரம்ப் சொன்ன பரபரப்பு தகவல்.. காரணம் என்ன?

செய்தியாளர் - ராஜ்குமார். ர

ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபடுவதாகக் கூறி, அமெரிக்காவும் இஸ்ரேலும் கடந்த ஏழு மாதத்திற்கும் மேலாக ஈரான் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. ஈரானையே அமெரிக்கா அழித்துவிடும் எனப் பேச்சுகள் அடிபட்டு வந்த நிலையில், பல மாதங்களாக ஈரானும் தொடர்ந்து பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தப் போர்ப் பதற்றத்திற்கு மத்தியில், ஈரான் தனது கட்டுப்பாட்டில் இருந்த ஹார்முஸ் நீரிணையை மூடியது. இதன் காரணமாக சர்வதேச அளவில் எண்ணெய் வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்பட்டு, கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்தது.

இதனால் உலக நாடுகள் அனைத்தும் இந்தப் போர் எப்போது முடிவடையும் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன. அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், விரைவில் போர் முடிவடைய உள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசியிருக்கிறார். அமெரிக்காவில் இடைக்கால நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், குடியரசுக் கட்சியின் பிரசாரத்திற்காகச் செல்வதற்கு முன்பு செய்தியாளர்களை ட்ரம்ப் சந்தித்தார். அப்போது, கச்சா எண்ணெய் மற்றும் பிற பொருட்களின் விலை எப்போது குறையும் எனக் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்குப் பதிலளித்த ட்ரம்ப், தேர்தல் முடிந்த உடனேயே எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையப் போவதாகவும், தேர்தலுக்குப் பிறகு போர் உடனடியாக முடிவுக்கு வரும் என தான் நினைப்பதாகவும் தெரிவித்தார். மேலும், ஈரானால் இனிமேல் இந்தப் போரைத் தாக்குப்பிடிக்க முடியாது என்றும் ட்ரம்ப் பேசி இருப்பது மீண்டும் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது. அமெரிக்காவில் நவம்பர் 3ஆம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற இடைக்காலத் தேர்தல் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஏனெனில், அமெரிக்க அதிபருக்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள காங்கிரஸின் ஒப்புதல் மற்றும் சட்டமன்ற ஆதரவு தேவைப்படும் சூழல்கள் உள்ளன.

தற்போது ட்ரம்பின் ஆதரவு கட்சியான குடியரசுக் கட்சியே காங்கிரஸில் பெரும்பான்மையைப் பெற்றுள்ளதால், ட்ரம்ப் நிர்வாகம் தனது கொள்கைகள் மற்றும் சட்ட முன்மொழிவுகளை முன்னெடுத்துச் செல்ல சாதகமான சூழல் உள்ளது. ஆனால், இந்த இடைக்காலத் தேர்தலில் குடியரசுக் கட்சி தனது பெரும்பான்மையை இழந்தாலோ ஜனநாயகக் கட்சி பெரும்பான்மையைப் பெற்றாலோ, ட்ரம்பின் நிர்வாகத்திற்கு அரசியல் ரீதியாக பல்வேறு சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.