முதல்வர் விஜய் எந்த பங்களாவில் தங்குவார் என்பதையும் வேட்புமனுவில் குறிப்பிட வேண்டுமா? நீதிமன்றம் சரமாரி கேள்வி
முதல்வர் விஜய் எந்த பங்களாவில் தங்குவார் என்பதையும் வேட்புமனுவில் குறிப்பிட வேண்டுமா? நீதிமன்றம் சரமாரி கேள்வி
"கடந்த காலங்கள் முதல் தற்போது வரை கட்சி மற்றும் சின்னங்களில் அடிப்படையில்தான் மக்கள் வாக்களிக்கின்றனர். எந்த வாக்காளரின் பின்புலங்களையும் ஆய்வு செய்து வாக்காளர்கள் முடிவெடுப்பதில்லை" என நீதிபதி தெரிவித்தார்.
Published : October 7, 2026 at 2:38 PM IST
சென்னை: முதல்வர் விஜய் தனது வேட்புமனுவில் சில சொத்துகளை மறைத்ததாக தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் சரமாரியாக கேள்வியெழுப்பியுள்ளது. முதல்வர் விஜய் எந்த பங்களாவில் தங்கப் போகிறார் என்பதையும் வேட்புமனுவில் குறிப்பிட வேண்டும் என கேட்பீர்களா? என நீதிமன்றம் வினவியுள்ளது.
தமிழக முதலமைச்சர் விஜய், பெரம்பூர் தொகுதியில் 53,715 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரது தேர்தல் வெற்றியை எதிர்த்து வாக்காளர்கள் தினேஷ், லட்சுமி நரசிம்மன் மற்றும் திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர் ஆகியோர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தனித்தனியாக தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்குகளை நிராகரிக்கக் கோரி முதலமைச்சர் விஜய் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனு மீதான இறுதி விசாரணை, நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன்பு கடந்த 3 தினங்களாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இன்று நடைபெற்ற விசாரணையின் போது, வாக்காளர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "முதலமைச்சர் விஜய்க்கு பண்ருட்டியில் ரூ.30 கோடியில் சொத்து இருக்கிறது. அதை அவர் தனது வேட்புமனுவில் மறைத்துள்ளார்.
வேட்புமனுவில் தகவலை தராமல் மறுப்பது, மறைப்பது, தவறாக தருவது அனைத்துமே குற்றமாகும். அதிக மதிப்புள்ள சொத்துக்களை வேண்டுமென்றே குறைத்து காண்பித்துள்ளார். சுமார் ரூ.230 கோடி அசையா சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்துள்ள முதலமைச்சர் விஜய், ரூ.30 கோடிக்கான சொத்தை மறைத்துள்ளார்.
கொடைக்கானலில் அரசு புறம்போக்கு நிலத்தை வாங்கியதாக பிரமாண பத்திரித்தில் முதல்வர் குறிப்பிட்டுள்ளார். சொத்து ஆவணங்களை மறைத்திருப்பதை நீதிமன்றம் உறுதி செய்தால், சம்பந்தப்பட்ட நபரின் தேர்தல் வெற்றியை ரத்து செய்யலாம் என உச்சநீதிமன்றம் பல தீர்ப்புகளை வழங்கியுள்ளது. ஊழல் முறைகேடு மட்டுமின்றி, சிறு சொத்து ஆவணங்களை மறைத்திருப்பதாக கருதினாலும், தேர்தல் வெற்றியை ரத்து செய்ய முடியும்" என வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, "கோடிக்கணக்கில் பணம் உள்ள முதலமைச்சர் விஜய், அதில் சிறு பகுதியை மறைப்பதால் தேர்தல் வெற்றியை ரத்து செய்து விட முடியுமா? விஜய்க்கு என்ன சொத்துக்கள் உள்ளது என்பது பற்றி வாக்காளருக்கு என்ன கவலை?முதலமைச்சர் விஜய்யின் தணிக்கையாளர் ஒருவேளை தவறுதலாக சொத்து ஆவணங்களை குறிப்பிடாமல் மறந்திருந்தால், அதற்காக முதலமைச்சரின் வெற்றியை எதிர்க்க முடியுமா?
முதலமைச்சர் விஜய் ஒரு பெரிய நடிகராக இருந்தவர். அவருக்கு எங்கெங்கு, எவ்வளவு சொத்துக்கள் உள்ளது என்பதை எல்லாம் அவர் ஞாபகம் வைத்துக்கொள்ள முடியுமா? ரூ. 600 கோடி ரூபாய் சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்த முதலமைச்சர் விஜய், ரூ.30 கோடியை மட்டும் ஏன் மறைக்க வேண்டும்?
தவறுதலாக ஒரு சொத்தை சேர்க்க மறந்திருந்தால், அவரது வெற்றியை எந்த அடிப்படையில் ரத்து செய்ய முடியும்? இனி வரும் காலங்களில் எந்த பங்களாவில் முதலமைச்சர் விஜய் வசிப்பார் என்பதையும் வேட்புமனுவில் குறிப்பிட வேண்டும் என கேட்பீர்களா? கடந்த காலங்கள் முதல் தற்போது வரை கட்சி மற்றும் சின்னங்களில் அடிப்படையில்தான் மக்கள் வாக்களிக்கின்றனர். எந்த வாக்காளரின் பின்புலங்களையும் ஆய்வு செய்து வாக்காளர்கள் முடிவெடுப்பதில்லை" என தெரிவித்த நீதிபதி, இவ்வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை நாளை (அக்.8) ஒத்திவைத்தார்.