ஆவின் பால் தரத்தை உயர்த்த புதிய ஆய்வகக் கட்டடம்
ஆவின் பால் தரத்தை உயர்த்த புதிய ஆய்வகக் கட்டடம் - முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார்
இந்த பால் பண்ணை வாயிலாக வடசென்னைப் பகுதிகளில் தினமும் சராசரியாக 120 வாகனங்கள் மூலம் பால் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
Published : October 7, 2026 at 1:56 PM IST
சென்னை: ஆவின் என அழைக்கப்படும் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்பில், சென்னை மாதவரத்தில் 2 கோடியே 23 லட்சம் ரூபாய் செலவில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள மாநில, மத்திய ஆய்வகத்தின் துணைக் கட்டடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று (அக்டோபர் 10) திறந்து வைத்தார்.
இதை தொடர்ந்து, மாதவரம் பால் பண்ணையின் செயல்பாடுகளை முதலமைச்சர் விஜய் பார்வையிட்டார். மேலும், அங்கு ரூ. 152.26 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் அதிநவீன புதிய பால் பண்ணையின் கட்டுமானப் பணிகளையும் அவர் ஆய்வு செய்தார்.
பிஐஎஸ் (BIS) மற்றும் எஃப்எஸ்எஸ்ஏஐ (FSSAI) தரநிலைகளின்படி குடிநீர் சோதனைகள், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய விதிமுறைகளின்படி கழிவுநீர் சோதனைகள் ஆகியவற்றை மேற்கொள்ளும் நோக்கில் தற்போது திறக்கப்பட்டுள்ள புதிய துணைக் கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது.
நவீன உபகரணங்கள் மூலம் சர்வதேச தரத்திற்கு ஏற்ப துல்லியமாகவும், வேகமாகவும் அனைத்துத் தரப் பரிசோதனைகளும் இங்கு மேற்கொள்ளப்படும்.
1963 ஆம் ஆண்டு அரசு மற்றும் யுனிசெஃப் (UNICEF) கூட்டுத் திட்டத்தின்கீழ் நாளொன்றுக்கு 50 ஆயிரம் லிட்டர் திறனுடன் தொடங்கப்பட்ட மாதவரம் பால் பண்ணை, உள்கட்டமைப்பு மேம்பாடுகளால் தற்போது தினமும் 4.50 லட்சம் லிட்டர் பாலைப் பதப்படுத்தும் திறன் பெற்றுள்ளது.
இந்த பால் பண்ணை வாயிலாக வடசென்னை பகுதிகளில் தினமும் சராசரியாக 120 வாகனங்கள் மூலம் பால் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. சென்னை மக்களின் எதிர்கால பால் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், நாளொன்றுக்கு 7 லட்சம் லிட்டர் பால் கையாளும் திறன் கொண்ட தானியங்கி தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய பால் பண்ணை ரூ. 152.26 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது.
இதனை ஆய்வு செய்த முதலமைச்சர் விஜய், கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். நிகழ்ச்சியில் பால் மற்றும் பால்வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் விஜயலக்ஷ்மி, சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.எல். விஜய் பிரபு, செந்தில் குமார், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவர் சிவா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வைத் தொடர்ந்து பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "முதலமைச்சர் மாதவரத்தில் உள்ள ஆய்வகத்தை திறந்து வைத்து மாதவரம் பால் உற்பத்தி மையம் மற்றும் புதிதாக கட்டி வரும் புதிய பால் பண்ணை கட்டிட பணிகளையும் ஆய்வு மேற்கொண்டார். அனைத்து பணிகளையும் விரைவாக முடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
பால் கொள்முதல் விலையை உயர்த்தியதற்கு பிறகு 2 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி அதிகரித்துள்ளது. ஆவின் நிறுவனம் தற்போது முன்னேறி வருகிறது. இதில் உள்ள குறைகளை ஒவ்வொன்றாக சரி செய்து வருகிறோம்" என தெரிவித்தார்.
இதையடுத்து பால் தட்டுப்பாடு தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், "ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ. 6 உயர்த்தி வழங்குவதால் மீண்டும் சில பால் உற்பத்தியாளர்கள் ஆவினுக்கு திரும்பி உள்ளனர். இதனால் சுமார் 2 லட்சம் லிட்டர் பால் கூடுதலாக கொள்முதல் செய்யப்படுகிறது. தனியார் நிறுவனங்கள் பால் விலை உயர்வால் அதிக மக்கள் ஆவின் பாலுக்கு மாறி வருகின்றனர். இதனால் சில இடங்களில் ஆவின் பால் தேவை அதிகரித்து உள்ளது. அதனை கூடுதல் கொள்முதல் வாயிலாக சரி செய்து வருகிறோம்.
சென்னையில் முன்னதாக 13 லட்சம் லிட்டராக இருந்த ஆவின் பால் விநியோகம், தற்போது 15 லட்சம் லிட்டராக அதிகரித்துள்ளது. பால் மட்டுமின்றி மதிப்பு கூட்டு பொருட்களுக்கான தேவையும் அதிகரித்து வருகிறது. அமுல் போன்ற நிறுவனங்கள் தமிழ்நாட்டினுள் வருவதற்கு கடந்த ஆட்சியாளர்கள் அனுமதித்துவிட்டனர். தற்போது அனைத்தையும் சீர் செய்து வருகிறோம்" என தெரிவித்தார்.