📅 Wednesday, 08 July 2026 IST | ஆனி 24, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu May 30, 2026 09:30 AM

`முதல்வர் நாற்காலிக்காக நாடகமாடிய டி.கே.சிவக்குமார்’

`முதல்வர் நாற்காலிக்காக நாடகமாடிய டி.கே.சிவக்குமார்’

`முதல்வர் நாற்காலிக்காக நாடகமாடிய டி.கே.சிவக்குமார்’

மேக்கேதாட்டு விவகாரத்தில் தமிழ்நாடு என்ன செய்ய வேண்டும்?

மேக்கேதாட்டு அணைக்கு விரைவில் பூமி பூஜை போடப்படும்’’ எனக் கொக்கரித்துக் கொண்டிருக்கிறார் நீர்வளத்துறையைத் தன்வசம் வைத்திருக்கும் கர்நாடக புதிய முதலமைச்சராகும் டி.கே.சிவக்குமார். உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய உத்தரவை வைத்துக்கொண்டு சிவக்குமார் ஆடும் ஆட்டம், தமிழக விவசாயிகளைக் கலக்கத்தில் ஆழ்த்தியிருக்கிறது. மேக்கேதாட்டு விவகாரத்தில் தமிழ்நாடு அரசு என்ன செய்ய வேண்டும்?

ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகத் தொடரும் காவிரி நதிநீர் பிரச்னை, வெறும் சாதாரண பிரச்னையல்ல. தமிழக நீராதாரத்தின் உயிர்நாடிப் பிரச்னை. இந்த விவகாரத்தில், தமிழ்நாடு அரசு நடத்திய தொடர் சட்டப் போராட்டங்களால், நமக்குச் சாதகமான தீர்ப்பு கிடைத்தது. ஆனால், அந்தத் தீர்ப்பின்படி நீர் திறந்துவிட, கர்நாடக அரசு தொடர்ந்து மறுத்துவருவதால், தீர்ப்பு கிடைத்தும் பலனில்லாமல் தவிக்கிறது தமிழ்நாடு. கர்நாடகத்தில் அதீத மழை பொழியும்போது, வேறு வழியின்றி கர்நாடகம் திறந்துவிடும் உபரிநீர் மட்டுமே தமிழ்நாட்டுக்குக் கிடைத்துக் கொண்டிருக்கிறது. அதற்கும் தற்போது வேட்டு வைக்க, மேக்கேதாட்டு அணையைக் கையிலெடுத்திருக்கிறது கர்நாடக அரசு.

`வீணாகும் உபரிநீரைத் தேக்கிவைக்கிறோம்’ என்ற பெயரில் கர்நாடகா மேக்கேதாட்டுவில் அணை கட்டத் துடிப்பது, தமிழகத்தின் உரிமையைச் சவக்குழிக்கு அனுப்பும் முயற்சி. இந்த முயற்சிக்கு முட்டுக்கட்டை போடத்தான் உச்ச நீதிமன்றத்தை அணுகியது தமிழ்நாடு அரசு. ``மேக்கேதாட்டு அணை கட்டுவது தொடர்பாகத் திட்ட அறிக்கை தாக்கல் செய்வதற்கு, கர்நாடக நீர்வளத்துறைக்கு மத்திய நீர் ஆணையம் கொடுத்திருக்கும் அனுமதிக்குத் தடைவிதிக்க வேண்டும்’’ என்ற கோரிக்கையோடு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது தமிழ்நாடு அரசு. உச்ச நீதிமன்றமோ, `திட்ட அறிக்கை தாக்கல் செய்யக் கர்நாடக அரசுக்கு அனுமதி அளிக்கிறோம். அதேநேரம், மத்திய நீர்வள ஆணையம் இந்த அறிக்கைமீது முடிவெடுப்பதற்கு முன்பாக தமிழ்நாடு அரசின் அனுமதியைப் பெற வேண்டும்’ எனத் தீர்ப்பளித்தது.

திட்ட அறிக்கைக்குத் தடை விதிக்கக் கோரி, தமிழ்நாடு அரசு தாக்கல் செய்திருந்த மறுசீராய்வு மனுவையும் கடந்த வாரம் நிராகரித்துவிட்டது உச்ச நீதிமன்றம். இந்த உத்தரவைச் சுட்டிக்காட்டி, ``தமிழ்நாடு அரசின் மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. இது கர்நாடகத்துக்கு நற்செய்தி. கர்நாடகத்தின் உரிமைகளில் தமிழ்நாடு தலையிட முடியாது. மத்திய நீர் ஆணையத்திடம் விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் பெற்று, விரைவில் மேக்கேதாட்டு அணைக்கு பூமி பூஜை போடுவோம்’’ என்றிருக்கிறார் சிவக்குமார். கர்நாடக முதலமைச்சராக இருந்த சித்தராமைய்யாவும் இந்த உத்தரவை வரவேற்று இதே போன்ற கருத்துகளை உதிர்த்திருக்கிறார்.

தமிழ்நாட்டின் எதிர்க்கட்சிகள் கர்நாடக அரசின் கருத்துகளுக்குக் கண்டனத்தைப் பதிவுசெய்ததோடு, `தமிழ்நாட்டின் உரிமைகளையும், விவசாயிகளின் நலனையும் காத்திட வேண்டும்’ என த.வெ.க அரசிடம் கேட்டுக் கொண்டிருக்கின்றன. முதலமைச்சர் விஜய்யும் இது தொடர்பாக, பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்.

இந்த விவகாரம் தொடர்பாக வேளாண் பொருளியல் ஆய்வாளர் கி.வெங்கட்ராமனிடம் பேசினோம். ``காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசின் முன்னெடுப்பு, 2018-ல் உச்ச நீதிமன்றம் அளித்த இறுதித் தீர்ப்புக்கு எதிரானது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவராக மோடி அரசு நியமித்திருக்கும் செளமித்ரா குமார் ஹல்தார், எப்போதும் கர்நாடகாவுக்குச் சாதகமான முடிவுகளையே எடுப்பவர். மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக நடந்த கூட்டத்தில், மேக்கேதாட்டு அணையின் திட்ட அறிக்கை தயாரிப்பது குறித்து வாக்கெடுப்பு நடந்தது.

காவிரி மேலாண்மை ஆணையத்தில் மொத்தம் ஒன்பது உறுப்பினர்கள். அவர்களில், ஐந்து பேர் ஒன்றிய அரசைச் சேர்ந்தவர்கள். தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரியைச் சேர்ந்த தலா ஓர் உறுப்பினரும் இந்த ஆணையத்தில் இடம்பெற்றிருந்தனர். தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி உறுப்பினர்கள் இந்த விவகாரத்தில் எதிர்த்து வாக்களித்தாலும், ஒன்றிய அரசு உறுப்பினர்களின் ஆதரவோடு வென்றது கர்நாடகா. அதன் பிறகுதான், உச்ச நீதிமன்றத்தை நாடியது தமிழ்நாடு அரசு. உச்ச நீதிமன்றமும் இந்த விவகாரத்தில் கைவிரிக்க, கர்நாடக அரசின் ஆட்டம் மீண்டும் தொடங்கியிருக்கிறது.

குறிப்பாக, முதல்வர் நாற்காலிக்குக் குறிவைத்துக் காய்நகர்த்தி வெற்றிபெற்றிருக்கிறார் டி.கே.சிவக்குமார். முதல்வராக தனது அரசியல் மைலேஜை மக்கள் மத்தியில் ஏற்றிக்கொள்ள இந்த விவகாரத்தில் அடாவடிக் கருத்துகளை முன்வைத்துக் கொண்டிருக்கிறார். காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டுக்கு எதிரான முடிவுகளை அழுத்தமாக எடுப்பவர்களை அங்குள்ள மக்கள் ஹீரோவாகப் பார்க்கிறார்கள். காரணம், கர்நாடகத்தில் எந்தக் கட்சி ஆட்சியமைத்தாலும், தொடர்ச்சியாக, காவிரி விவகாரம் குறித்து மக்களிடம் கர்நாடகாவுக்குச் சாதகமான கருத்துகளை அங்குள்ள அரசியல் தலைவர்கள் கொண்டு சேர்க்கிறார்கள்.

அநியாயமாக நடந்துகொள்ளும் கர்நாடக அரசு இப்படிச் செய்துகொண்டிருக்க, நியாயம் நம் பக்கமிருந்தும், இது குறித்து போதிய விழிப்பு உணர்வைத் தமிழ்நாடு அரசு மக்களிடத்தில் ஏற்படுத்தவில்லை. தி.மு.க., அ.தி.மு.க அரசுகள் மத்தியில் ஆட்சியிலிருப்பவர்களோடு கூட்டணி வைப்பதற்காக, காவிரி விவகாரத்தில் பல சமரசங்களை மேற்கொண்டதுதான் இத்தனை பிரச்னைகளுக்கும் காரணம். காவிரி விவகாரத்தை, கர்நாடகத்திலுள்ள கட்சிகள் அனைத்தும் ஒரே நேர்க்கோட்டில் அணுகுகின்றன. ஆனால், தமிழ்நாட்டில் ஆட்சியிலிருப்பவர்கள்மீது குறை சொல்லி அரசியல் மைலேஜ் தேடுவதை மட்டுமே தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் மாறி மாறிச் செய்துகொண்டிருந்தன.

கடந்த தி.மு.க ஆட்சியில் முதல்வராக இருந்த ஸ்டாலின், காவிரி விவகாரத்தில் டெல்லிக்குக் கடிதம் எழுதுவதையும், பிரதமரைச் சந்திப்பதையும் மட்டுமே செய்து வந்தார். தற்போதைய முதல்வர் விஜய்யும் அதேபோலக் கடிதம் எழுதியிருக்கிறார். பிரதமரைச் சந்தித்திருக்கிறார். இந்த அடிப்படை அலுவல் பணிகளோடு நிறுத்திக் கொள்ளாமல், கர்நாடகாவின் செயல் திட்டங்களுக்குக் கடுமையான எதிர்வினையாற்ற வேண்டும்’’ என்றவரிடம், ``இந்த விஷயத்தில், தமிழ்நாடு அரசு எந்த மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்?’’ என்ற கேள்வியை முன்வைத்தோம்.

அதற்கு, ``உச்ச நீதிமன்றம் தமிழக அரசின் மனுவை நிராகரித்துவிட்டதால், இனி நீதிமன்றத்திலும் பெரிதாக வாய்ப்பில்லை. ஒருவேளை நீதிமன்றம் நமக்குச் சாதகமான தீர்ப்பைக் கொடுத்தாலும்கூட, கர்நாடக அரசு அதை மதிக்கப்போவதும் இல்லை. காவிரி விவகாரத்தில் வெறும் சட்டப் போராட்டம் நடத்துவது மட்டுமே நமக்கான உரிமைகளைப் பெற்றுத் தராது. மேக்கேதாட்டு அணைக்காகத் திட்ட அறிக்கை தயாரிப்பது, அணை கட்ட பட்ஜெட்டில் நிதி ஒதுக்குவது என அதிரடியான செயல்பாடுகளில் இறங்கியிருக்கிறது கர்நாடக அரசு. அதேபோல, தமிழ்நாடு அரசும் அதிரடியான செயல்பாடுகளில் இறங்க வேண்டும்.

கர்நாடக அரசு, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி நமக்கு எப்போதுமே தண்ணீர் திறந்துவிட்ட தில்லை. கனமழையால் அணையில் நீர் நிரம்பி வழியும்போது, அணை உடைந்துவிடக் கூடாது என்ற காரணத்துக்காகவே தண்ணீர் திறந்து விடுவதை வாடிக்கையாக வைத்திருந்தார்கள். தற்போது, அந்த உபரி நீரையும் தேக்கிவைக்க மேக்கேதாட்டு அணையைக் கட்டிவிட்டால், தமிழ்நாடு பாலைவனமாகிவிடும்.

`1924 காவிரி நதி நீர் ஒப்பந்தத்தில், கர்நாடகா கிருஷ்ண ராஜ சாகர் அணையும், தமிழ்நாடு மேட்டூர் அணையும் கட்டிக்கொள்ள மட்டுமே அனுமதி தரப்பட்டது. ஆனால், அந்த ஒப்பந்தத்தை மீறி கபினி, ஹேமாவதி உட்பட நான்கு அணைகளைக் கட்டிவிட்டது கர்நாடகா.

இதேபோலத்தான், அப்போதும் பூமி பூஜை போடுவது தொடங்கி படிப்படியாகக் காய்நகர்த்தி, அணைகளைக் கட்டி முடித்தது கர்நாடகா. எனவே, தமிழ்நாடு அரசும் படிப்படியாக அதிரடி நடவடிக்கை களை மேற்கொண்டு மத்திய அரசுக்கும், கர்நாடக அரசுக்கும் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

முதலில், தமிழ்நாட்டு மக்களிடையே இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இது தொடர்பாக, அரசே மாநிலம் தழுவிய கடையடைப்பு போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். பேரணி, பொதுக்கூட்டங்களை நடத்தி மக்கள் மத்தியில் காவிரியின் முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்ல வேண்டும்.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை கர்நாடக அரசு மதிக்கவில்லை. எனவே, அரசியலமைப்பின் 355-வது பிரிவைச் சுட்டிக்காட்டி, `சட்டத்தின்படி ஆட்சி நடத்தாத கர்நாடக அரசைக் கலைக்க வேண்டும்’ என மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். போக, தமிழ்நாட்டிலிருந்து கர்நாடகாவுக்குச் செல்லும் பொருள்களைத் தடுத்து நிறுத்தி, கர்நாடக அரசுக்கு பொருளாதாரரீதியான அழுத்தங்களையும் கொடுக்க வேண்டும். முதல்வர் விஜய், அதிகாரிகளுடன் ஆலோசித்து இது போன்ற நடவடிக்கைகளை உடனடியாக எடுத்தால் மட்டுமே, கர்நாடகாவின் முயற்சிகளைத் தடுக்க முடியும்’’ என்றார் வெங்கட்ராமன்.

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்ட முதல்வர் விஜய் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.