முருகன் அருளால் 3,000 படங்கள் வரை நடிப்பேன்: யோகிபாபு
கடந்த 2009ஆம் ஆண்டு சுப்ரமணியம் சிவா இயக்கத்தில் வெளியான ‘யோகி’ திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகமாகி, இன்று தமிழ்த் திரையுலகின் தவிர்க்கமுடியாத நட்சத்திரமாக உயர்ந்திருப்பவர் நடிகர் பாபு.
அந்தப் படத்திற்குப் பிறகு ‘யோகிபாபு’ என்று அழைக்கப்பட்ட அவர், கோலிவுட்டின் முன்னணி நாயகன்களுடன் மட்டுமன்றி, பாலிவுட்டில் ஷாருக்கானுடன் நடிப்பது வரை அசுர வளர்ச்சி அடைந்துள்ளார்.
இந்த நிலையில், அவர் கதாநாயகனாக நடித்துள்ள அவரது 300வது படமான ‘அர்ஜூனன் பேர் பத்து’ வரும் ஜூலை 17ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.
வாகனத் திருட்டு, மோசடிகளால் பாதிக்கப்படும் சாமானிய மக்களின் பின்னணியில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தை ரா.ராஜ்மோகன் இயக்கியுள்ளார்.
இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய யோகிபாபு, “நான் நாயகனாக நடித்தாலும் எப்போதும் ஒரு நகைச்சுவை நடிகன்தான். என்னுடன் யார் நடித்தாலும் அந்த இடத்தில் என்னால் எந்தளவுக்கு நகைச்சுவையாக நடிக்கமுடியும் என்றுதான் யோசிப்பேன்.
“நயன்தாரா தொடங்கி இன்றைய திரையுலகின் முன்னணி நாயகன்கள், நாயகிகள் பலருடனும் நடித்துவிட்டேன். ஆனால், இன்னமும் உலகநாயகன் கமல்ஹாசனுடன் மட்டும் நடிக்கவில்லை, அவருடன் நடிக்கவேண்டும் என்பது என் ஆசை,” என்று குறிப்பிட்டார்.
அத்துடன், தனது ஆன்மீக பக்தி, திரைப்பயணம் குறித்துப் பேசிய அவர், “என் வளர்ச்சிக்கு கடவுளின் அருள்தான் முக்கியக் காரணம். நான் தீவிரமாக வணங்கும் முருகப்பெருமான் என்னை இந்த உயரிய நிலையில் வைத்துள்ளார். அவர் அருளிருந்தால் நான் 3,000 படங்களில்கூட நடிப்பேன். இத்தனை காலமாக எனக்கு ஆதரவளித்து வரும் ரசிகர்களுக்கு என் மனமார்ந்த நன்றி,” என்றார்.