மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ராஜினாமா
-நமது நிருபர்-
மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றி அமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இணை அமைச்சர் பதவியில் இருந்து எல்.முருகன் ராஜினாமா செய்துள்ளார்.
பாஜ மூத்த தலைவரான எல்.முருகன், நாமக்கல் மாவட்டம் பரமத்தியை சேர்ந்தவர். வழக்கறிஞர். ஏபிவிபி அமைப்பில் இருந்துள்ளார். பிறகு பாஜவில் இணைந்தார். 2011 சட்டசபை தேர்தலில் ராசிபுரம் தொகுதியில் போட்டியிட்டு 3வது இடத்தை பிடித்தார். 2017 முதல் 2019 வரை தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய தலைவராக பதவி வகித்தார். 2020ல் தமிழக பாஜ தலைவராக நியமிக்கப்பட்ட இவர், 2021 வரை அப்பதவியில் இருந்தார். 2021 சட்டசபை தேர்தலில் தாராபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைடைந்தார். பிறகு 2021 ல் மத்திய அமைச்சராக பதவியேற்றார். மபி மாநிலத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்வானார். மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை இலாகாக்களை வகித்துள்ளார்.
இந்நிலையில் பிரதமர் மோடிக்கு அனுப்பிய கடிதத்தில் அவர் கூறியதாவது: உங்கள் தலைமையின் கீழ் இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் பணியாற்றுவது என் வாழ்வின் மிகப்பெரிய கவுரவமாக அமைந்தது. நான் அரசியல் பின்னணி கொண்ட குடும்பத்திலிருந்து வரவில்லை; மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவன். தினக்கூலித் தொழிலாளர்களாகவும் கால்நடை மேய்ப்பவர்களாகவும் பணியாற்றிய என் பெற்றோர், இன்றும் கோனூர் கிராமத்தில் எளிமையான வாழ்க்கையை வாழ்கின்றனர். தங்கள் மகன் ஒரு நாள் மத்திய அரசில் பணியாற்றுவார் என்று அவர்கள் ஒருபோதும் நினைத்திருக்க மாட்டார்கள்.
தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவராகப் பணியாற்றியது முதல், இருமுறை ராஜ்யசபா எம்பி ஆகவும், உங்கள் அமைச்சரவையில் பணியாற்றியது வரை, எனக்கு வழங்கப்பட்ட ஒவ்வொரு பொறுப்பும் உங்கள் நம்பிக்கையின் வெளிப்பாடாகவே அமைந்தன. தகவல் மற்றும் ஒலிபரப்பு, பார்லிமென்ட் விவகாரங்கள், மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்பு ஆகிய அமைச்சகங்களில் பணியாற்றிய வாய்ப்பு, நமது நாட்டையும் மக்களையும் பற்றிய எனது புரிதலை விரிவுபடுத்தியது. பல்வேறு காலகட்டங்களில் சட்டமன்ற மற்றும் மக்களவைத் தேர்தல்களில் போட்டியிடும் வாய்ப்பையும் கட்சி எனக்கு வழங்கியது. தேசத்திற்கும் கட்சிக்கும் பணியாற்ற இத்தனை வாய்ப்புகள் எனக்குக் கிடைக்கும் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை.
இந்தியா, தமிழகம் மற்றும் பாஜ மீதான உங்கள் அர்ப்பணிப்பு உணர்வு, என்னைப் பொதுவாழ்வில் ஈடுபடச் செய்த அந்தப் பணிக்காக இனி நான் என்னை முழுமையாக அர்ப்பணிக்க வேண்டும் என்ற எண்ணத்தை எனக்குள் ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கட்சியை வலுப்படுத்துவதில் முழுநேரமாக ஈடுபட ஏதுவாக, மத்திய இணை அமைச்சர் பொறுப்பிலிருந்து என்னை விடுவிக்குமாறும், ராஜ்யசபா எம்பி பதவியை ராஜினாமா செய்ய அனுமதிக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன். வ்வொரு கிராமத்திற்கும் ஒவ்வொரு தெருவிற்கும் சென்று, மக்களைச் சந்தித்து, நமது கட்சித் தொண்டர்களுடன் இணைந்து நின்று, மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் கட்சியின் இருப்பை விரிவுபடுத்த விரும்புகிறேன்.
வளர்ச்சியடைந்த இந்தியா நோக்கிய பயணத்தில் ஒவ்வொரு குடும்பமும் தங்கள் பங்கை உணர்ந்து பயன்பெற உதவவும் நான் விரும்புகிறேன். சமீபத்தில் நீங்கள் மேற்கொண்ட பயணத்தின்போது கண்ட அன்பு மற்றும் நம்பிக்கை ஆகியவை, தமிழகத்தில் நாம் இன்னும் பல சாதனைகளைப் படைக்க முடியும் என்ற என் உறுதியை மேலும் வலுப்படுத்தியுள்ளன. 2029 லோக்சபா தேர்தலுக்காகக் கட்சியைத் தயார்படுத்தும் பணியில் எனது முழு நேரத்தையும் ஆற்றலையும் அர்ப்பணிக்க விரும்புகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் எல்.முருகன் கூறியுள்ளார்.
மத்திய அமைச்சர் எல்.முருகனின் ராஜ்யசபா எம்.பி., பதவிக்காலம் 2030ம் ஆண்டுதான் நிறைவடைகிறது. அதை அவர் முன்கூட்டியே ராஜினாமா செய்யும் நிலையில், அந்த பதவியிடம் வேறு முக்கிய தலைவருக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
1.மத்திய அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான், சமீபத்தில் நடந்த போராட்டம் காரணமாக ராஜினாமா செய்தார். அவருக்கு இன்னும் வேறு பதவி எதுவும் வழங்கப்படவில்லை. அமைச்சரவை மாற்றத்தில் அவருக்கு பதவி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
2.கேரளாவை சேர்ந்த ஜார்ஜ் குரியன் மத்திய அமைச்சர் பதவியில் இருந்து இந்தாண்டு ஜூன் மாதம் ராஜினாமா செய்தார்.
3.மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, பி.எல்.வர்மா ஆகியோரின் ராஜ்யசபா எம்.பி., பதவிக்காலம் நிறைவடையும் நிலையில், அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு தரப்படவில்லை. எனவே, அவர்களுக்கு பதிலாக வேறு ஒருவர் அந்த துறைக்கு நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
4.மத்திய அமைச்சராக இருந்த ரவ்நீத் சிங் பிட்டு, 2026 ஜூலை மாதம் ராஜினாமா செய்தார்.