மரணதண்டனை ஒளிபரப்பைத் தடுக்க ஆஸ்திரேலியா முயற்சி
சிட்னி: அமெரிக்கக் கைதி ஒருவருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்படும் ‘முற்றிலும் வெறுப்பான’ நேரலை ஒளிபரப்பை நாட்டில் மக்கள் பார்ப்பதைத் தடுக்க தன்னால் இயன்ற அனைத்தையும் ஆஸ்திரேலியா செய்யும் என்று பிரதமர் ஆன்டனி அல்பனீஸ் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 13) கூறினார்.
2009ல் 13 பேரைச் சுட்டுக்கொன்ற இடமான டெக்சசின் ஃபோர்ட் ஹூட்டில், டிசம்பர் 3ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிடால் ஹசனின் மரணதண்டனை நிறைவேற்றம், 1945க்குப் பிறகு அமெரிக்க ராணுவத்தின் துப்பாக்கிச் சுடும் படையால் நிறைவேற்றப்படும் முதல் மரணதண்டனையாகும்.
“மக்கள் இதைப் பார்க்க முடிவதையும், இது பொதுவில் நடப்பதையும் நாங்கள் உறுதி செய்வோம்,” என்று அமெரிக்கத் தற்காப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் கூறியதைத் தொடர்ந்து, இந்த மரணதண்டனை நேரலையில் ஒளிபரப்பப்படும் என்று அமெரிக்கத் தற்காப்பு அமைச்சன் அதிகாரி ஒருவர் கடந்த வாரம் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
இக்காட்சி ஒளிபரப்பப்படுவதைத் தடுப்பது தமது ‘சமூகப் பொறுப்பு’ என்று தேசிய ஒலிபரப்பு நிறுவனமான ஏபிசியிடம் அல்பனீஸ் கூறினார்.
“இத்தகைய நிகழ்வை ஒருவர் ஏன் பார்க்க விரும்புகிறார் என்றே எனக்குப் புரியவில்லை. அதிலும் குறிப்பாக, சிறுவர்களும் குடும்பத்தினரும் இதைப் பார்க்கும் சூழலை அனுமதிப்பது என்பது இன்னும் மோசமானது,” என்று அல்பனீஸ் குறிப்பிட்டார்.
அந்த மரணதண்டனை நிறைவேற்றப்படும் காட்சியை இணையத்தில் ஒளிபரப்புவதைத் தடுக்கும் அதிகாரம் தங்களுக்கு இல்லை என்று ஆஸ்திரேலியாவின் இணையக் கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.
இது ‘விளக்கின் இயக்குவிசையை அணைப்பது போன்ற எளிதான காரியம் அல்ல,” என்று அல்பனீஸ் கூறினார்.
ஆனால், இதற்கு நம் நாட்டில் இடமில்லை என்பதைச் சமூக ஊடக நிறுவனங்களுக்கு தமது அரசாங்கம் தெளிவுபடுத்தும் என்றார்.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
“எங்களால் ஏதாவது செய்ய முடிந்தால், நாங்கள் செய்வோம், அதை நான் உங்களுக்கு உறுதியாகக் கூறுகிறேன்,” என்றார் அவர்.
ஆஸ்திரேலிய சுற்றுப்புற அமைச்சர் முர்ரே வாட், அந்தத் திட்டங்கள் ‘முற்றிலும் அருவருப்பானவை’ என்று கூறினார்.
ஹசனின் மரணதண்டனையை இணையத்தில் ஒளிபரப்புவதற்கான திட்டங்கள், அமெரிக்காவிலும் அனைத்துலக அளவிலும் பரவலான வெறுப்பை ஏற்படுத்தியுள்ளன.
“ஒரு மரணதண்டனையை நேரலையாக ஒளிபரப்புவது என்பது ஒரு பகிரங்க மரணதண்டனைக்கு ஒப்பானது. அது சித்திரவதை மீதான முழுமையான தடையை மீறுவதாகும்,” என்று ஐ.நா. மனித உரிமைகள் தூதர் கூறினார்.