மருத நிலத்து உரைநடைப் பாணன் | சி.எம்.முத்து 75
மாரிமுத்து (1950) என்னும் இயற்பெயர் கொண்டவர், தந்தை பெயரான சந்திரஹாசனின் முன் எழுத்தையும் தன் முன் எழுத்தையும் கொண்டு சி. எம். முத்து என எழுதத் தொடங்கினார். தமிழின் நவீன இலக்கியம் முகிழ்த்த காவிரி தீரத்தின் தஞ்சாவூர், சாலியமங்கலம் அருகில் ‘இடையிருப்பு’ எனும் சிற்றூரில் பிறந்து, வளர்ந்து, வாழ்பவர்.
1980களில் சிறுகதைகள், நாவல்கள் படைக்கத் தொடங்குகிறார். அடிப்படையில் இவர் ஒரு விவசாயி. பள்ளிக்கல்வி படித்திருந்ததால் ஊர்ப்புற அஞ்சலகராகப் பணி வாய்ப்புப் பெற்றார். ஏர் உழவை விட சொல்லேர் உழவே இவரை ஆட்கொண்டது. அதுவரை தஞ்சையின் எழுத்தாளர்கள், பண்ணையார்கள் போல களத்து மேட்டில் குடை பிடித்தவாறு உழுதவனின் வாழ்வை அனுமானித்து எழுதி வந்தனர். சி.எம். முத்து, தார் பாய்ச்சிக் கட்டிய கோவணத்துடன் முழங்கால் அளவு சேற்றிலும், கால் பாவும் புழுதியிலும் மேழி பிடித்தத் தன் அனுபவத்தை எழுத்தாக்கினார்.
வண்டல் நிலம் இருவித மண்வளம் கொண்டது. ஒன்று, முழங்கால் அளவு உளை வாங்கும் களிமண் நிறைந்த வண்டல். இதுதான் தஞ்சையை நெற்களஞ்சியமாக்கியது. மற்றது செம்மண், மணல் கலந்த புழுதி. நெல் தவிர்த்த கரும்பு, சோளம், நிலக்கடலை, வாழை விளையும் மேட்டு நிலம். இந்தப் புழுதியில் விளைந்த அரிய எழுத்துக் கலைஞன்தான் சி.எம். முத்து. 300க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 10 நாவல்கள்,தஞ்சை வட்டாரச் சொல் அகராதி... என இவரின் படைப்புலகம் பரந்தது.