மியன்மார் ராணுவ அரசாங்கத்துடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை
வாஷிங்டன்: மியன்மாரின் ராணுவ அரசாங்கத்துடன் அமெரிக்க அரசு நேரடிப் பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளது.
அமெரிக்க அதிகாரிகளும் அந்த விவகாரம் குறித்து தகவல் அறிந்தவர்களும் அதனைத் தெரிவித்தனர்.
2021 ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு மியன்மார் ஜெனரல்களை தனிமைப்படுத்தும் வாஷிங்டனின் முயற்சிகளுக்கு முற்றிலும் மாறாக, டிரம்ப்பின் நிர்வாகம் மியன்மாரின் ராணுவ அரசாங்கத்துடன் அந்தப் பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளது.
அமெரிக்க உளவு, ஆராய்ச்சிக்கான வெளியுறவுத் துணை அமைச்சர் மைக்கல் வான்ஸ் அந்த நடவடிக்கையில் முக்கியப் பங்கு வகித்தார். அந்த முயற்சி அமெரிக்கர்களைக் குறிவைக்கும் இணைய மோசடி நிலையங்களை மூடுவதில் கவனம் செலுத்தியது.
தலைநகர் நேப்பிடாவில் செப்டம்பர் 15-16ஆம் தேதிகளில் மியன்மார் அதிபர் மின் ஆங் ஹிலெய்ங்குடன் வான்ஸ் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
அமெரிக்கத் தொழிலதிபர் ஆடம் காஸ்டிலோவை விடுவிப்பதை நோக்கமாகக் கொண்டு அந்தச் சந்திப்பு நடத்தப்பட்டாலும், அது அதிக தொடர்புகளுக்கான ஒரு தொடக்கத்தையும் வழங்கியது என்று தெரிவிக்கப்பட்டது.
ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு நடைபெற்ற மிக உயர்ந்த நிலையிலான கடந்த மாதச் சந்திப்பு, ஜனநாயகத்தை ஊக்குவிப்பதிலிருந்து விலகி, பரிவர்த்தனை சார்ந்த தொடர்புகளை நோக்கிய அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் நிர்வாக வெளியுறவுக் கொள்கை மாற்றத்தை எடுத்துக்காட்டுகிறது.
ஆகஸ்ட் மாதம் வெளியுறவுத் துறையின் முன்னணி உளவுத்துறை அதிகாரியாக உறுதிசெய்யப்பட்ட வான்சின் வருகையும், மியன்மார் தொடர்பான அமெரிக்கக் கொள்கையில் அவரது தொடர்ச்சியான பங்களிப்பும் இதுவரை அதிகாரபூர்வமாக வெளிவரவில்லை.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
இந்நிலையில், இனப்படுகொலை என அமெரிக்கா அறிவித்த 2016-2017 காலப்பகுதியில் நூறாயிரக்கணக்கான ரோஹிங்யா முஸ்லிம்கள் கொன்றுகுவிக்கப்பட்டது, வெளியேற்றப்பட்டது உள்ளிட்ட மனித உரிமை மீறல்களுக்காக, முன்னாள் ராணுவத் தலைவரான மின் ஆங் ஹிலெய்ங்மீது அமெரிக்கா விதித்த தடைகள் இன்னமும் நீடிக்கின்றன.