அமேசான் மின்
சான் ஃபிரான்சிஸ்கோ: முன்னணி மின்வணிக நிறுவனமான அமேசான் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளதைப் புதன்கிழமை (அக்டோபர் 7) உறுதிப்படுத்தியது.
பணிநீக்க நடவடிக்கையில் கிட்டத்தட்ட 1,000க்கும் குறைவான அலுவலகப் பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவலறிந்த ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
அதனால், அமெரிக்கா, இந்தியா, பிரிட்டன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த வாடிக்கையாளர் சேவை, விற்பனைப் பங்காளர் சேவைப் பிரிவுகளில் பணியாற்றிய ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.
அமேசான் நிறுவனத்தின் மிகப்பெரிய தள்ளுபடி விற்பனை நிகழ்வுகளில் ஒன்றான ‘பிரைம் பிக் டீல் டேஸ்’ அக்டோபர் 6, 7 ஆகிய தேதிகளில் நடைபெற்ற வேளையில் ஆட்குறைப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
“நிறுவனத்தின் முன்னுரிமைகளைச் சிறப்பாகச் செயல்படுத்துவதற்கு ஏதுவாகவே சில்லறை வணிகப் பிரிவின் கட்டமைப்பில் இந்த மாற்றங்களைச் செய்துள்ளோம்,” என்று அமேசான் நிறுவனப் பேச்ச்ஆளர் தெரிவித்தார்.
கொவிட்-19 தொற்றுப்பரவல் காலத்தில் மின்வணிகத் தேவை அதிகரித்ததால் அதிக அளவில் ஊழியர்களைப் பணியமர்த்தியதாகவும் அதனாலேயே இத்தகைய ஆட்குறைப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெறுவதாகவும் நிறுவனத்தின் நிறுவனரும் தலைவருமான ஜெஃப் பெசோஸ் ஊடகப் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2025ல் தொடங்கி 30,000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.