லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: மாநகராட்சி அலுவலகத்தில் 4 விலை உயர்ந்த மதுபாட்டில்கள் பறிமுதல்
லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: மாநகராட்சி அலுவலகத்தில் 4 விலை உயர்ந்த மதுபாட்டில்கள் பறிமுதல்
மாநகராட்சி மண்டல அலுவலக சர்வேயர் மூலம் கணக்கில் வராத 90 ஆயிரம் ரூபாய் பெறப்பட்டது லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.
Published : September 23, 2026 at 3:33 PM IST
திருநெல்வேலி: லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையின்போது, மாநகராட்சி அதிகாரி அறையிலிருந்து நான்கு விலை உயர்ந்த மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தமிழ்நாடு முழுவதும் நகராட்சி அலுவலகங்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் ஆகியவற்றில் பல்வேறு பணிகளுக்கு லஞ்சம் பெறப்படுவதாக வந்த புகாரை அடுத்து நேற்று (செப்டம்பர் 22) திருவள்ளூர், மானாமதுரை, நெல்லை, தென்காசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் ஒரே நேரத்தில் சோதனையை தொடங்கினர்.
இந்த நிலையில் நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தில் நெல்லை லஞ்ச ஒழிப்பு காவல்துறை ஆய்வாளர் ராபின்சன் தலைமையில் காவல்துறையினர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர். சோதனை தொடங்கியதும் அலுவலக கதவுகள் பூட்டப்பட்டு அலுவலகத்தில் பணியாற்ற நபர்கள் மற்றும் அலுவலகத்திற்கு பல்வேறு பணிகளுக்காக வந்திருந்த பொதுமக்கள் ஆகியோரிடமும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
மேலும் நேற்று மாநகராட்சி மண்டலத்தின் வரவு, செலவு மற்றும் அலுவலகத்திற்குள் இருந்தவர்களிடம் இருந்த பண இருப்பு ஆகியவற்றையும் காவல்துறையினர் சோதனை செய்தனர். இந்த சோதனையின்போது, அலுவலகத்திலிருந்து கணக்கில் வராத ரூ.9,300 பணம் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
அத்துடன் மாநகராட்சி மண்டல அலுவலக சர்வேயர் ஒருவரது செல்ஃபோனை வாங்கி, லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் வங்கிக் கணக்கு விவரங்களை சரிபாரத்தனர். அப்போது சர்வேயர் மூலம் கணக்கில் வராத 90 ஆயிரம் ரூபாய் பெறப்பட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, மாநகராட்சி உதவி ஆணையர் சந்திரமோகன் அறையிலிருந்து நான்கு விலை உயர்ந்த மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
அரசு அலுவலகத்தில் அதிகாரி அறையில் மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. எனவே அந்த மது பாட்டில்கள் குறித்தும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனது சொந்த பணத்தில் மது பாட்டில்கள் வாங்கி வைத்தாரா அல்லது ஒப்பந்ததாரர்கள் இடம் லஞ்சமாக மதுபாட்டில்களை பெற்றாரா என விசாரித்து வருகின்றனர்.
நெல்லை மாநகராட்சியில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பல்வேறு அரசு சேவைகள் மற்றும் அரசு நலத்திட்டங்களுக்கு அதிகாரிகள் லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இந்த பணம் குறித்தும் அதிகாரிகளிடம் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, அடுத்தக்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர்.