📅 Wednesday, 30 September 2026 IST | புரட்டாசி 14, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 30, 2026 01:03 PM

குண்டர் சட்டம் ரத்து; ஜாமினும் கிடைத்தது; அரசகுமார் வழக்கில் கோட்டை விட்டது போலீஸ்!

குண்டர் சட்டம் ரத்து; ஜாமினும் கிடைத்தது; அரசகுமார் வழக்கில் கோட்டை விட்டது போலீஸ்!

சென்னை: தனியார் பள்ளிகளுக்கு அனுமதி பெற்றுத்தருவதாக கூறி, ரூ.100 கோடி மோசடி செய்த வழக்கில் அரசகுமாருக்கு ஜாமினும் கிடைத்து விட்டது; குண்டர் சட்டமும் ரத்தாகி விட்டது; இதற்கு, வழக்கை முன்னின்று நடத்தும் அதிகாரிகளின் மெத்தனம் காரணமா அல்லது ஏதேனும் உள்நோக்கம் இருக்கிறதா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

திமுக ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்கியதில் 100 கோடிக்கு மேல் மோசடி நடந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் அரசகுமார் மீது, போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து, அரசகுமார், சங்க பொருளாளர் முத்துகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். திமுக முன்னாள் அமைச்சர் மகேஷின் வீடு மற்றும் அவரது தொடர்புடைய இடங்களிலும் போலீசார் ரெய்டு நடத்தினர்.

அந்த வகையில், பி.டி.அரசகுமார் மற்றும் முத்துகுமாரின் உறவினர் மற்றும் மகேஷ் உதவியாளர்களுக்கு சொந்தமான சென்னை சாலிகிராமம், கோடம்பாக்கம், சூளைமேடு, பூவிருந்தவல்லி மற்றும் நாவலூரில் உள்ள வீடுகளில் குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது போலீசார் ஒரு லேப்டாப் மற்றும் 44 ஆவணங்களைக் கைப்பற்றினர்.

சொத்து ஆவணங்கள், வங்கி விவரங்கள், காசோலைகள் மற்றும் மின்னணு சாதனங்கள் போன்ற முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன. அனுமதிகள் கோரிய தனியார் பள்ளிகளின் விண்ணப்பங்கள், பணப் பரிமாற்றத்திற்கான பதிவேடுகள் மற்றும் டிஜிட்டல் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில், ஆதாரங்களைச் சேகரிப்பதற்காக மேலும் சோதனைகள் நடத்தப்பட வேண்டும் என கூறி, ஊழல் தடுப்புப் பிரிவு கூடுதல் அவகாசம் கோரியது. இருப்பினும் பி.டி. அரசகுமாருக்கு, விசாரணை அமைப்பு நிர்ணயிக்கப்பட்ட 90 நாட்களுக்குள் தனது இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்யத் தவறியதையடுத்து சிறப்பு நீதிமன்ற நீதிபதி எல்.எஸ். சத்தியமூர்த்தி நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.

காவலில் அரசகுமார் வைக்கப்பட்டு 92 நாட்களை கடந்த நிலையில் அரசகுமாருக்கு ஜாமினை, நீதிபதி வழங்கி உள்ளார்.ஏற்கனவே இந்த வழக்கில் பி.டி.அரசகுமாரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை சென்னை ஐகோர்ட் ரத்து செய்துள்ளது. ஜாமின் கிடைப்பது, குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டது ஆகியவற்றுக்கு வழக்கை நடத்தும் அதிகாரிகளின் மெத்தனமே காரணம் என்றும், தப்ப வைக்கும் உள்நோக்கத்துடன் அதிகாரிகள் தரப்பில் இப்படி செயல்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

அரசகுமார் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்படுவதற்கு நீதிபதி குறிப்பிட்டுள்ள காரணம், அரசு தரப்பின் மீதான சந்தேகத்தை வலுப்படுத்துகிறது. தன் மீது குண்டர் சட்டம் பாய்ந்ததை எதிர்த்து, தான் கொடுத்த மனுவை 13 நாள் தாமதத்துக்கு பிறகே பரிசீலித்தனர் என்பது அரசகுமார் தரப்பு வாதம். இதை ஏற்றுத்தான் குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தங்களை மோசடி செய்து விட்டதாக, அரசகுமார் மீது 100க்கும் மேற்பட்டோர் புகார் அளித்த நிலையில், வழக்கை வலுவாக வைத்திருக்க வேண்டிய அரசுத்தரப்பு, இப்படி கோட்டை விட்டிருக்கிறது. இது, புகார் அளித்தவர்கள் தரப்பில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.