“கடைக்குப்போன எம் பொண்ணு திரும்பி வரலையே..!”
“கடைக்குப்போன எம் பொண்ணு திரும்பி வரலையே..!” - கோவையை கலங்கடிக்கும் சிறுமியின் தாயார் கதறல்
சிறுமியின் குடும்பத்தினர் ஒரு மாதத்துக்கு முன்புதான் இங்கு குடியேறினர். வீட்டுக்கு அருகே பத்து நாள் தங்கியிருந்த கார்த்தி, பிறகு காலி பண்ணிவிட்டு பக்கத்து ஏரியாவுக்குச் சென்றுவிட்டான்
“கடைக்குப்போறதாச் சொல்லிட்டுப்போன எம்பொண்ணு திரும்ப வரலை. மிட்டாய் வாங்கிக்குடுத்து, வண்டியில ஏத்திட்டுப்போன அவன் இப்பிடி சீரழிச்சுக் கொன்னுட்டானே...” எனத் தலையில் அடித்துக்கொண்டு அழும் சிறுமியின் தாயாருடைய ஒப்பாரி கோவையைக் கலங்கடிக்கிறது.
சடலமாக மீட்கப்பட்ட சிறுமி!
சேலம் மாவட்டம், மேட்டூரைச் சேர்ந்த தம்பதி, கோவை சூலூர் அருகேயுள்ள பள்ளபாளையம் பகுதியில் வசித்துவருகின்றனர். இவர்களின் 10 வயது மகள் வரும் கல்வியாண்டில் ஐந்தாம் வகுப்புக்குச் செல்லவிருந்தார். கோடை விடுமுறை என்பதால் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருந்த சிறுமி, 21-5-2026 அன்று மாலை 5 மணியளவில் திடீரெனக் காணாமல்போனார். மறுநாள் மாலை 6 மணியளவில் கண்ணம்பாளையம் பகுதியிலுள்ள குளக்கரையில் உடலில் காயங்களுடன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
இது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த கார்த்தி (33), அவரின் நெருங்கிய நண்பரான மோகன் (30) இருவரும் கைதுசெய்யப்பட்டனர். அதற்கு முன்னதாக கண்ணம்பாளையம் பகுதியிலுள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பின் முதல் மாடியில் பதுங்கியிருந்த கார்த்தியை போலீஸார் சுற்றிவளைத்துக் கைதுசெய்ய முயன்றனர். அப்போது, மாடியிலிருந்து கீழே குதித்துத் தப்ப முயன்ற கார்த்திக்கு, கை காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது. ரிமாண்ட் செய்வதற்காக நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்ட மோகன், “நான் எந்தத் தப்பும் செய்யவில்லை. என்னை சிக்கவைக்கப் பார்க்கிறார்கள்” எனக் கூறி பரபரப்பைக் கிளப்பினார்.
‘`தேடுவதுபோல நாடகமாடிய கொலையாளி...’’
சிறுமியைக் காணவில்லை எனப் புகாரளித்ததும் போலீஸார் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை. மறுநாள் மதியம் போலீஸார் போன் செய்து, ‘குளக்கரையில் ஒரு சிறுமியின் உடல் இருப்பதாக’ கூறினர். சிறிது நேரத்தில் ‘சிறுமியையும், கடத்திச் சென்றவர்களையும் கண்டுபிடித்து விட்டோம்’ என மாற்றி மாற்றிச் சொன்னார்கள். பிறகு காலம் தாழ்த்தி வெகு நேரத்துக்குப் பிறகே ‘சிறுமி இறந்துவிட்டதாக’ கூறினர்.
இரவில் சிறுமியைத் தேடும் போது எங்களோடு கார்த்தியும் சேர்ந்து தேடுவதுபோல சுற்றியலைந்தான். அதனால் அவன்மீது எந்தச் சந்தேகமும் வரவில்லை. சிசிடிவி-யைச் சோதித்த போதுதான், எல்லாம் தெரிந்தது. குற்றவாளி க்குக் கடும் தண்டனை கிடைக்க வேண்டும்” என்றனர் ஆதங்கத்துடன்.
இதற்கிடையே சிறுமியின் கொலைக்கு நீதி கேட்டு சிறுமியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து சிறுமியின் தந்தையைத் தனியாக அழைத்துப் பேசி, உடலைப் பெற்றுக் கொள்வதற்கு சம்மதிக்க வைத்தனர் போலீஸார். அதைத் தொடர்ந்து சிறுமியின் உடல் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டு, தகனம் செய்யப்பட்டது.
‘`என்கிட்ட காட்டாமலே எரிச்சுட்டாங்க...’’
“கடைக்குப் போறதா சொல்லிட்டுப் போன எம்பொண்ணு திரும்ப வரலை. மிட்டாய் வாங்கிக்குடுத்து, வண்டியில் ஏத்திட்டுப் போன அவன் இப்பிடி சீரழிச்சுக் கொன்னுட்டானே... என் பொண்ணு மரணத்துல இருக்குற உண்மைகளைக் கண்டறிய எதிர்காலத்துல உடலைத் தோண்டி எடுத்து பரிசோதிக்கிற நிலைமை வரலாம்ங்கறதால உடலை புதைச்சிருக்கணும். ஆனா பொண்ணோட அப்பாகிட்ட கையெழுத்து வாங்கி உடம்பை அவசர அவசரமாக எரிச்சுட்டாங்க. என் பொண்ணு மரணத்துக்கு காரணமானவங் களுக்குக் கடுமையான தண்டனை தரணும்” என்று கதறினார் சிறுமியின் தாயார்.
24 மணி நேரத்தில் குற்றவாளிகள் கைது
கண்ணம்பாளையம் பகுதியைச் சேர்ந்த குணசேகரன், “கண்ணம்பாளையம் குளக்கரையில் மது அருந்துதல், கஞ்சா அடித்தல் போன்ற சமூகவிரோதச் செயல்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. எனவே, குளக்கரையில் வேலி அமைக்க வேண்டும் என 2 ஆண்டுகளுக்கு முன்பே புகாரளித்தோம். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், தற்போது ஒரு சிறுமியின் உயிரே பறிபோயிருக்கிறது. இனியாவது குளக்கரையைச் சுற்றி வேலி அமைப்பதோடு. போலீஸாரின் கண்காணிப்பையும் தீவிரப்படுத்த வேண்டும்” என்றார்.
இது குறித்து மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் ரம்யபாரதியிடம் கேட்டபோது, “மனைவியைப் பிரிந்து தனியாக வசித்துவந்த கார்த்தி, சிறுமியை ஆசைவார்த்தை கூறி ஏமாற்றி அழைத்துச் சென்று, பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். பின்னர் கண்ணம்பாளையம் குளத்துக்கு அருகிலுள்ள தென்னந்தோப்பில் வைத்து கழுத்தை நெரித்து கொலைசெய்திருக்கிறார். இந்தக் குற்றத்துக்கு உறுதுணையாக இருந்ததாக வும், போலீஸார் கேட்டபோது குற்றத்தை மறைக்க முயன்றதாகவும் மோகன் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உடற்கூறாய்வில் உறுதியாகியிருப்பதால், கார்த்தி மீது போக்சோ வழக்கு பதியப்பட்டிருக்கிறது. தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவருகிறது” என்றார்.