கோவை அரசு மருத்துவமனை மாத்திரை கவரில் ஹிந்தி; கிளம்பியது சர்ச்சை
கோவை: கோவை அரசு மருத்துவமனையில் மாத்திரைகள் போட்டு தரும் பிரவுன் நிற கவர் முன்பகுதியில், தமிழ், ஆங்கிலத்துடன் ஹிந்தியிலும் அச்சிடப்பட்டுள்ளதாக, முன்னாள் தொழில்துறை அமைச்சர் ராஜா தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கோவை அரசு மருத்துவமனையில், 2024 மே மாதம் வரை பிரத்யேக பிரவுன் நிற கவரில் மாத்திரைகள் தரும் நடைமுறை இல்லை. ‘தினமலர்’ நாளிதழில் இதுகுறித்து செய்தி வெளியான பிறகே, பிரத்யேக கவரில், காலை, மதியம், இரவு என அச்சிடப்பட்டு, மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. சில தனியார் நிறுவனங்கள் இதற்கு ஆகும் செலவை ஏற்கின்றன. சிந்தாமணி கூட்டுறவு நிறுவனம் சார்பில், இம்மருந்து சீட்டு அச்சிட்டு தரப்படுகிறது.
கோவையில் வடமாநில தொழிலாளர்கள் பலர், அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருவதால், அவர்களுக்கு புரியும் வகையில், தமிழ், ஆங்கிலத்துடன், ஹிந்தியிலும் குறிப்புகள் அச்சிடப்பட்டன. கடந்த இரு ஆண்டுகளாக, அதாவது தி.மு.க., ஆட்சியில் இருந்த போதும், இந்நடைமுறையே பின்பற்றப்பட்டது.
இந்நிலையில் நேற்று திடீரென, முன்னாள் தொழில்துறை அமைச்சர் ராஜா, தனது எக்ஸ் தளத்தில், ‘ தமிழ்நாடு மருத்துவமனைகளில், மும்மொழி கொள்கை அமலுக்கு வந்துவிட்டது போல! முதலில் கரூர். இப்போது கோவையிலும் அதே நிலைமை’ என குறிப்பிட்டுள்ளார்.
இப்பதிவு வைரலான நிலையில், கோவை அரசு மருத்துவமனை நிர்வாகம் தரப்பில், பழைய மருந்து கவரில், இனி மாத்திரைகள் வழங்க வேண்டாமென, நேற்று இரவு மருந்தாளுனர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனை மருந்தாளுனர்கள் சிலர் கூறுகையில்,‘ தி.மு.க., ஆட்சியில் இருந்தே இந்நடைமுறை இருக்கிறது. இப்படித்தான் அச்சிட வேண்டுமென, எந்த மாடலும் வழங் கப்படுவதில்லை. இதற்கும் மும்மொழி கொள்கைக்கும் என்ன சம்மந்தம் என தெரியவில்லை,’ என்றனர்.
அரசு மருத்துவமனை இருப்பிட மருத்துவ அலுவலர் சரவணபிரியா கூறுகையில், ‘‘தமிழ், ஆங்கிலத்தில் மட்டும் குறிப்புகள் இடம்பெறும் வகையிலான, புதிய கவரில் நாளை (இன்று) முதல் மாத்திரைகள் வழங்கப்படும்,’’ என்றார்.