கீழடியின் தொன்மையை சந்தேகத்திற்குள்ளாக்கும் மத்திய அமைச்சரின் பேச்சு: அமர்நாத் ராமகிருஷ்ணாவின் பதிலென்ன?
கீழடியின் தொன்மையை சந்தேகத்திற்குள்ளாக்கும் மத்திய அமைச்சரின் பேச்சு: அமர்நாத் ராமகிருஷ்ணாவின் பதிலென்ன?
அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு கீழ் நிலையில் பணியாற்றிய நபர்களைக் கொண்ட குழுவினரிடம் அறிக்கை பெறுவது, எம்.ஏ. பட்டதாரிக்கு 8-ஆம் வகுப்பு படித்தவர் தகுதிச்சான்று வழங்குவதற்கு ஒப்பானது என்று மூத்த அறிஞர் சொ.சாந்தலிங்கம் கூறியுள்ளார்.
Published : September 21, 2026 at 11:01 PM IST
Updated : September 22, 2026 at 8:22 AM IST
-By இரா.சிவக்குமார்
கீழடி அகழாய்வு அறிக்கை தொடர்பாகவும், தொல்லியல் அறிஞர் அமர்நாத் ராமகிருஷ்ணா குறித்தும் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் பொதுவெளியில் தெரிவித்த கருத்து, தமிழ்நாட்டில் பெரும் புயலை கிளப்பி உள்ளது. அமைச்சரின் பேச்சுக்கு தொல்லியல் அறிஞர் அமர்நாத் ராமகிருஷ்ணாவும், மூத்த அறிஞர் சொ. சாந்தலிங்கமும் தங்களது கருத்தை வெளிப்படுத்தியுள்ளனர். அதுகுறித்த தொகுப்பினை பார்ப்போம்.
அறிவியல் நடைமுறைகள்
பிரபல ஆங்கில நாளேடு சார்பில் நடைபெற்ற கலந்துரையாடலில் பங்கேற்றுப் பேசிய மத்திய கலாச்சார மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், கீழடி ஆய்வறிக்கை குறித்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
குழுவின் ஆய்வு
பொதுவாக அகழாய்வில் இருந்து அறிக்கை ஒன்று பெறப்பட்டால், அதனை ஒரு குழு ஆய்வு செய்வது வழக்கமான நடைமுறை. அதில் ஏதேனும் குறைகள் இருந்தால் அதனைச் சரி செய்து, கூடுதல் பணிகளை மேற்கொள்ள அகழாய்வு மேற்கொண்ட அலுவலர் கேட்டுக் கொள்ளப்படுவார்.
மாநில அரசின் அரசியல்
கிடைத்த அனைத்து சான்றுகளையும் அறிவியல் ரீதியில் சரி பார்க்க வேண்டும். காலகட்டம் தொடர்பான சான்றுகளை அறிவியல் முறையில் உறுதி செய்வது அவசியம். அதற்குத் தேவையான அட்டவணைகள், வரைபடங்கள், புகைப்படங்கள் உள்ளிட்ட அனைத்தையும் முறையாகத் தயாரித்து, முழுமையான ஆதாரங்களின் அடிப்படையில் உருவாக்க வேண்டும்.
ஆனால், அவரோ அந்த அறிக்கையை மீண்டும் தொல்லியல் துறைக்கே (ASI) அனுப்பினார். தமக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களின்படி மேற்கொள்ள வேண்டிய பணிகளை முழுமையாகச் செய்யவில்லை. முந்தைய மாநில அரசு இதனை அரசியலாக்கியது. அறிக்கை வெளியிடப்படவில்லை என்று எங்களை குற்றம் சாட்டியது.
தொல்லியல் துறையின் நம்பகத்தன்மை
அமர்நாத் ராமகிருஷ்ணா பதில்
அமைச்சரின் பேச்சு தொடர்பான வீடியோ வெளியாகியிருந்த அந்த இன்ஸ்டாகிராம் பக்கத்திலேயே தொல்லியில் துறையின் (ஏஎஸ்ஐ) தற்போதைய இயக்குநரும், கீழடி 2 கட்ட அகழாய்வுக்கு பொறுப்பேற்றிருந்த தொல்லியல் கண்காணிப்பாளருமான அமர்நாத் ராகிருஷ்ணா, 'முதலில் அமைச்சரிடம் 982 பக்கங்கள் கொண்ட கீழடி அகழாய்வு அறிக்கையை பொதுமக்களின் பார்வைக்கு வெளியிடுமாறு கேளுங்கள். அந்த அறிக்கையே, கீழடி விவகாரத்தில் அரசியல் செய்வது யார் என்பதைத் தானாகவே வெளிப்படுத்தும்' என பதில் அளித்திருந்தார்.
"எந்தவித மாற்றமும் தேவையில்லை"
இந்நிலையில், அமர்நாத் ராமகிருஷ்ணாவை 'ஈடிவி பாரத் தமிழ்' ஊடகத்திற்காகத் தொடர்பு கொண்டு கேட்டோம். அப்போது, "அக்குறிப்பிட்ட சமூக ஊடகப் பக்கத்திலுள்ள கருத்தையே எனது அதிகாரப்பூர்வ கருத்தாக எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கே தெரியும் (ஈடிவி பாரத் மதுரை செய்தியாளர்), கீழடியைக் கண்டறிவது தொடங்கி அங்கு அகழாய்வு மேற்கொண்டது வரை நாங்கள் அடைந்த கஷ்டங்கள்.
அத்துடன் அறிக்கையை முழுமைப்படுத்த விடாமல் அஸ்ஸாம், கோவா, சென்னை என பணியிட மாற்றம் செய்யப்பட்டு பழிவாங்கப்பட்டேன். அப்படியிருந்தும்கூட முழுமையான அறிவியல்பூர்வமாகவும், உரிய சான்றுகளோடும்தான் இந்த அறிக்கையை நான் நிறைவு செய்துள்ளேன். அதில் எந்தவித மாற்றமும் செய்ய வேண்டிய அவசியமே ஏற்படவில்லை எனும்போது, இதில் நான் அரசியல் செய்ய என்ன இருக்கிறது?" என்றார்.
கீழடியை கண்டறிந்த வரலாறு
தமிழ்நாட்டில் ஏஎஸ்ஐ சார்பாக கடந்த 2014 முதல், கீழடியில் அகழாய்வுப் பணிகள் தொடங்கப்பட்டன. இந்த இடத்தைத் தேர்வு செய்வதற்கு முன்பாக தேனி மாவட்டம், வருஷநாடு தொடங்கி ராமநாதபுரம் மாவட்டம், ஆற்றங்கரை கிராமம் வரை வைகையின் இருபுறங்களிலும் சுமார் 4 கி.மீ. தூரம் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த 200-க்கும் மேற்பட்ட இடங்கள் மூத்த தொல்லியல் அறிஞர் வெ.வேதாசலம் ஒருங்கிணைப்பில் அமர்நாத் ராமகிருஷ்ணா தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டு இறுதியாக சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகாவிற்கு உட்பட்ட கீழடியைத் தேர்வு செய்தனர்.
2014 முதல் 2016 வரை நடைபெற்ற முதல் இரண்டு கட்ட அகழாய்வினை அமர்நாத் ராமகிருஷ்ணா மேற்கொண்டார். அதன்பிறகு அவர் அஸ்ஸாம் மாநிலத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு, 3ஆம் கட்டமாக ஏஎஸ்ஐ சார்பாக ஸ்ரீராமன் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அதற்குப் பிறகு ஏஎஸ்ஐ கீழடியில் தனது ஆய்வினைக் கைவிட்ட நிலையில், 4ஆம் கட்டத்திலிருந்து தற்போது 11-ஆம் கட்டம் வரை தமிழக தொல்லியல் துறை தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
யாருக்கு யார் சான்றளிப்பது?
மத்திய அமைச்சரின் இந்தக் கருத்து குறித்து ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்தின் சார்பாக தமிழகத்தின் மூத்த தொல்லியல் அறிஞர் சொ.சாந்தலிங்கத்தைத் தொடர்பு கொண்டு கேட்டோம். அப்போது அவர், 'அமர்நாத் ராமகிருஷ்ணா வழங்கியுள்ள கீழடி அகழாய்வு அறிக்கையை ஆய்வு செய்து அறிக்கை வழங்க குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
அந்தக் குழுவில் அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு கீழ் 3ஆம் நிலையில் பணியாற்றிய நபரின் கருத்துக்களுக்கு ஏஎஸ்ஐ மதிப்பளிப்பது எந்தவிதத்தில் நியாயம்? இது எம்.ஏ. பட்டதாரிக்கு 8-ஆம் வகுப்பு படித்தவர் தகுதிச் சான்று வழங்குவதற்கு ஒப்பானது.
சங்ககாலம் கி.மு. 6-ஆம் நூற்றாண்டு
கீழடியில் கிடைத்த சான்றுகளின் அடிப்படையில் அமர்நாத் ராமகிருஷ்ணா, சங்க காலத்தை கி.மு. 3-இல் இருந்து கி.மு. 6ஆம் நூற்றாண்டு வரை கொண்டு சென்றுள்ளதைத்தான் இவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
தமிழகத் தொல்லியல் துறையில் மூத்த அறிஞர்களாக இருந்த காலம் சென்ற நாகசாமி மற்றும் ஐராவதம் மகாதேவன் ஆகியோர் இங்கு கிடைக்கும் தமிழிக் கல்வெட்டுகளை கி.மு.1லிருந்து கி.பி.3 வரை மட்டுமே வரையறை செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அதனையே அளவுகோலாக எடுத்துக் கொள்ள ஏஎஸ்ஐ வலியுறுத்துவதுதான் இங்கு சிக்கலை ஏற்படுத்துகிறது.
நாகசாமியின் முரண்
நாகசாமியைப் பொறுத்தவரை அவரது பல்வேறு கருத்துக்களில் முன்னுக்குப் பின் பல முரண்கள் உண்டு. அதுமட்டுமன்றி திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும்போது அவர்களுக்கு ஏற்றாற்போன்று தனது கருத்தைப் பதிவிடுவார். ஆனால், இந்த இடத்தில் ஐராவதம் மகாதேவன்கூட ஆண்டிப்பட்டி அருகே உள்ள புலிமான் கோம்பையில் கிடைத்த தமிழி நடுகல்லை கி.மு.2ஆம் நூற்றாண்டுக்குக் கொண்டு சென்றார். ஆக, இவர்கள் வரையறுத்த காலத்தைக் குறிப்பிட அமர்நாத் ராமகிருஷ்ணாவை, ஏஎஸ்ஐ வலியுறுத்துவது ஏற்கத்தக்கதல்ல.
பிற தொல்லியல் அறிஞர்களின் கருத்து என்ன?
ஐராவதம் மகாதேவன் மறைந்தபிறகு, கீழடி அகழாய்வில் பல கட்ட அகழாய்வில் ஆயிரக்கணக்கான சான்றுகள் தற்போது கிடைத்துள்ளன. அதேபோன்று கொடுமணலில் கிடைத்த சான்றுகளின்படி அங்கு அகழாய்வு மேற்கொண்ட தொல்லியல் அறிஞர் ராஜவேலு, கி.மு.5ஆம் நூற்றாண்டு வரை காலத்தைக் கணித்துள்ளார். ஒருவேளை ஐராவதம் மகாதேவன் உயிரோடு இருந்திருந்தால், தனது நிலைப்பாட்டை தற்போது கிடைத்த தரவுகளின் அடிப்படையில் மாற்றிக் கொண்டிருப்பார்.
கீழடியில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள் குறித்த அறிக்கை 22 இந்திய மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளன. அதனைப் படித்த பிற மாநிலங்களைச் சேர்ந்த எந்த தொல்லியல் அறிஞராவது அதனை மறுத்து இதுவரை பேசியுள்ளனரா? ஏன் மத்திய அமைச்சர்கள் மட்டும் இதுபோன்று பேசுகின்றனர் எனப் புரியவில்லை. அவர்களுக்கு தொல்லியல் குறித்து ஏதாவது தெரியுமா? ஏஎஸ்ஐ-யில் உள்ள தொல்லியல் அதிகாரிகள் இது குறித்து வாய் திறப்பதில்லை. காரணம் என்னவென்று அவர்களுக்குத் தெரியும். அமர்நாத் ராமகிருஷ்ணனின் கீழடி அகழாய்வு அறிக்கையில் அரசியல் செய்வது மத்திய அரசுதான்" என்றார்.
உறுதியான கீழடியின் தொன்மை
கடந்த திமுக ஆட்சியில் தொல்லியல் துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு, மத்திய அமைச்சரின் இந்த கருத்துப் பகிர்வுக்கு எதிர்வினையாக தனது எக்ஸ் தளத்தில் பதில் அளித்திருந்தார்.
அதில் அவர், 'கீழடி என்பது அரசியல் ரீதியான கூற்றுகளின் அடிப்படையில் உருவானது அல்ல. அடுக்கியல் ஆய்வு (Stratigraphic Analysis), தொல்பொருட்கள் மற்றும் அவற்றின் பண்பாட்டு ஆய்வு (Material Culture Studies), ஏஎம்எஸ் கார்பன் காலக்கணிப்பு (AMS Carbon Dating) உள்ளிட்ட தொல்லியல் மற்றும் அறிவியல் ஆதாரங்களால் கீழடியின் தொன்மை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்காவைச் சேர்ந்த பீடா அனலைட்டிக் (Beta Analytic) ஆய்வகத்தால் மேற்கொள்ளப்பட்ட சுதந்திரமான கதிரியக்கக் கார்பன் ஆய்வுகளும் இதற்கு ஆதாரமாக உள்ளன.
"பாஜகவுக்கு ஏற்பட்டுள்ள அசெளகரியம்"
தமிழ்நாடு தொல்லியல் துறை மேற்கொண்ட அகழாய்வுகளில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் (Antiquities) கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை கீழடியில் பண்டைய காலத்தில் நகர்ப்புறக் குடியிருப்பு (Urban Structure) இருந்ததற்கான வலுவான ஆதாரங்களைத் தருகின்றன.
கீழடி தொடர்பான ஆதாரங்கள் பிரதிபலிக்கும் வரலாற்று உண்மைகள் மீது பாஜகவுக்கு ஏற்பட்டுள்ள எதிர்ப்பு, தற்போது இன்னும் ஆழமான அசௌகரியத்தில் இருந்து உருவாகிறது என்றே தோன்றுகிறது. கீழடியின் அறிவியல் ரீதியாக நிறுவப்பட்ட வரலாறு முழுமையாக முன் வைக்கப்பட்டால் இந்திய வரலாற்றின் பெயரில் தற்போது முன் வைக்கப்படும் பல்வேறு கட்டுக்கதைகளையும், பகுத்தறிவற்ற கூற்றுகளையும், அறிவியல் ஆய்வின் முன் நிலைநிறுத்த முடியாது.
ஆதாரங்களை வெளியிடுமா ஏஎஸ்ஐ?
கீழடியின் தொன்மை, அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படவில்லை என்று மத்திய பாஜக அரசு கருதினால், தொல்லியல் ஆய்வாளர்களை விமர்சிப்பதற்கும், அறிக்கையை தாமதப்படுத்துவதற்கும் பதிலாக, கீழடி தொடர்பான ஆய்வு முடிவுகள் தவறானவை என்பதை நிரூபிக்கும் ஆதாரங்களை வெளியிட வேண்டும்' என முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு குறிப்பிட்டுள்ளார்.
தவெக அரசின் நிலைப்பாடு என்ன?
மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தின் கருத்து, தமிழக அரசியல் மற்றும் தொல்லியல் களத்திலும் பெரும் புயலைக் கிளப்பியுள்ள நிலையில், அமர்நாத் ராமகிருஷ்ணா Vs மத்திய தொல்லியல் துறை இடையேயான பனிப்போர் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. இதற்கு தற்போதைய தவெக தலைமையிலான தமிழக அரசு என்ன எதிர்வினையாற்றப் போகிறது என்பதுதான் முக்கியமான கேள்வியாக உள்ளது.