சிவகார்த்திகேயன் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் பாடலாசிரியராக இணைந்தார்
சிவகார்த்திகேயன் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் பாடலாசிரியராக இணைந்தார்
கடந்த 2018-ம் ஆண்டு வெளியான ‘கோலமாவு கோகிலா’ திரைப்படத்தில் ‘கல்யாண வயசு’ என்ற பாடலை எழுதிய நடிகர் சிவகார்த்திகேயன், அதன் பிறகு பீஸ்ட், டான் உள்ளிட்ட பல்வேறு படங்களில் பாடல்கள் எழுதியுள்ளார்.
Published : September 22, 2026 at 1:42 PM IST
சென்னை: தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் இணைந்துள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயனை மரியாதை நிமிர்த்தமாகவும், எழுத்தாளர்கள் சங்கம் நடத்தும் விழாவில் கலந்து கொள்வது தொடர்பாகவும் எழுத்தாளர்கள் சங்கத் தலைவர் சேரன், பொதுச் செயலாளர் பட்டுக்கோட்டை பிரபாகர், பொருளாளர் சுந்தர்ராஜன், துணைத் தலைவர் சினேகன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் நேரில் சந்தித்தனர்.
அவர்களின் வேண்டுகோளை ஏற்று நடிகர் சிவகார்த்திகேயன் பாடலாசிரியராக இணைந்ததோடு அல்லாமல் சங்கத்திற்காக சில ஆலோசனைகளையும் வழங்கினார்.
இது குறித்து எழுத்தாளர் சங்கத்தினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில், “நடிகர் சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் தொகுப்பாளராக அறிமுகமாகி, தொடர்ந்து காமெடி கதாபாத்திரம் மூலம் வெள்ளி திரையில் தடம் பதித்து, அதனைத் தொடர்ந்து கதாநாயகனாக உருமாறினார். தற்போது தமிழ்த் திரையுலகில் தனக்கென ஒரு இடம் பிடித்துள்ள சிவகார்த்திகேயன், நடிப்பைத் தாண்டி பாடலாசிரியராகவும் தனது பங்களிப்பைச் செய்துள்ளார்.
அவர் முதன் முதலில் 2018-ஆம் ஆண்டு வெளியான ‘கோலமாவு கோகிலா’ திரைப்படத்தின் ‘கல்யாண வயசு’ பாடல் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து 2019-ஆம் ஆண்டு ‘கூர்கா’ படத்தில் ‘ஹே போயா’, ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ படத்தில் ‘காந்த கண்ணழகி’, ‘ஆதித்ய வர்மா’ படத்தில் ‘இது என்ன மாயமோ’ ஆகிய பாடல்களுக்கு வரிகளை எழுதியுள்ளார்.
தொடர்ந்து 2021-ஆம் ஆண்டு வெளியான ‘டாக்டர்’ திரைப்படத்தில் ‘செல்லம்மா’, ‘சோ பேபி’ ஆகிய பாடல்களுக்கும், ‘நாய் சேகர்’ படத்தில் ‘எடக்கு மொடக்கு’ பாடலுக்கும், 2022-ஆம் ஆண்டு ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் ‘சும்மா சுர்ருனு’ பாடலும் இன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நடித்த ‘பீஸ்ட்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘அரபிக் குத்து’ ஆகிய பாடல்கள் சிவகார்த்திகேயன் எழுதியதில் பரவலாக பேசப்பட்டது.
மேலும் அவர் எழுதியதில் குறிப்பிடத்தக்க வகையில், அவரே நடித்த ‘டான்’ படத்தில் ‘பிரைவேட் பார்ட்டி’ பாடல் அமைந்தது.
அதே போல எந்த பாடலாசிரியருக்கும், ஏ.ஆர்.ரகுமானின் இசையில் பாடல் எழுத வேண்டும் என்பது கனவாக இருக்கும். அந்த வகையில், 2024-ஆம் ஆண்டு வெளியான ‘அயலான்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘மாஞ்சா நீ’ பாடலுக்கும் சிவகார்த்திகேயன் பாடல் வரிகள் எழுதியுள்ளார்.
பாடலாசிரியர் சிவகார்த்திகேயனை பொருத்தமட்டில், அவர் எழுதி இருக்கக்கூடிய அத்தனை பாடல்களும் இளசுகளை முணுமுணுக்க வைத்திருக்கக் கூடிய பாடல்களாகும். அந்த வகையில், எழுத்தாளர்கள் சங்கத்தில் அவர் இணைந்திருப்பது எழுத்தாளர்கள் சங்கத்தினருக்கும், சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கும், மேலும் அவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது” என கூறப்பட்டுள்ளது.