📅 Saturday, 26 September 2026 IST | புரட்டாசி 10, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 26, 2026 04:03 AM

இதிலுமா கூட்டு? வீரமணி வழக்கில் திமுக, அதிமுகவுக்கு முதல்வர் விஜய் கேள்வி

இதிலுமா கூட்டு? வீரமணி வழக்கில் திமுக, அதிமுகவுக்கு முதல்வர் விஜய் கேள்வி

மதுராந்தகம்: 'இத்தனை ஆண்டுகளாக பச்சைக் குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய ஒருவனை கைது செய்து சிறையில் அடைத்து விட்டோம். இந்த விவகாரம் பற்றி திமுகவும், மற்றும் பலரும் வாயே திறக்கவில்லை. இதிலுமா உங்கள் கூட்டு' என்று மதுராந்தகம் பிரசாரத்தில் ஜெம் வீரமணி விவகாரம் குறித்து முதல்வர் விஜய் கேள்வி எழுப்பினார்.

அவர் பேசியதாவது; நான் ஒரு முதல்வராக ஒரு பாலத்தை ஆய்வு செய்ய சென்றேன். அப்போது, நாங்க கட்டின பாலத்தின் மீது ஏறி நின்று விஜய் சூட்டிங் எடுக்கிறார் என்று சொல்கிறார்கள். நீங்க கட்டியது என்றால், நீங்க சொந்தமாக காசு கொடுத்து கட்டுனீங்களா சார்? அப்படி கட்டினால், அந்தச் செக் கோபாலபுரத்தில் இருந்து போனதா? சித்தரஞ்சன் சாலையில் இருந்து போனதா? பாவம், உங்கள் கிட்டதா ரூ.10 ஆயிரம் மட்டும் தான இருக்கிறது, அதை வைத்து எப்படி சார் பாலம் எல்லா கட்டுனீங்க, சொந்தமா காரு கூட இல்லையே சார். இது எல்லாம் நீங்க கொடுத்த தகவல் தான் சார். அதை வைத்து பார்த்தால், செலவுக்கு பணம் கூட இல்லாத, பரம ஏழையா இருக்கும் நீங்கள் எப்படி சார், பாலம் எல்லாம் கட்டுனீங்க. ஓ, அந்தக் கணக்கில் வராத அந்தப் பணத்தை வைத்து கட்டுனீங்களா சார்? இதை எல்லாம் நாங்கள் கேட்கவில்லை சார், மக்கள் கேட்கிறார்கள்.

முதல்வர் என்பவர் மக்களின் வேலைக்காரன். மக்களின் முதலாளி எல்லாம் கிடையாது. நீங்களும், உங்கள் குடும்பமும் பேசுவதை எல்லாம் பார்க்கும் போது, நீங்கள் தான் முதலாளி மாதிரி பேசிக் கொள்கிறீர்கள். குறுக்கு வழியில் சென்று ஆட்சியை கலைத்து விடலாம் என்று கணக்கு போட்டுள்ளீர்கள். இது எல்லாம் ஒன்றுக்கும் உதவாது, எனக்கும், தமிழக மக்களுக்கு இடையே இருப்பது அன்பு கணக்கு. அரசியல் எல்லாத்தையும் தாண்டிய பாசக்கணக்கு. திமுகவும், மற்றும் பலர் கட்சியாலும் ஒன்று கிழிக்க முடியாது. ஒவ்வொரு வீட்டில் இருக்கும் பச்சைக் குழந்தை முதல் பாட்டி வரையில் எல்லாம் என்னுடைய சொந்தங்கள், உறவுகள்.

பதவியேற்கும் போது கொஞ்சம் அவகாசம் கேட்டேன். கடன் மேல் கடன் வாங்கி கஜானா நிலைமை எல்லாம் மோசமாக இருக்கிறது. இங்கு நிதி நெருக்கடி எல்லாம் இருக்கிறது. அப்படிப்பட்ட சூழலில் தான் பதவியேற்கிறேன் என்று அவகாசம் கேட்டேன். அப்பவும் என்னால் முடிந்த திட்டங்களை செய்ய முயற்சித்தேன். இப்போது, விஜய்யும் வந்து கடன் வாங்குகிறார் என்று விமர்சிக்கிறார்கள். ஆமாம், கடன் வாங்கினேன். கொள்ளையடிக்க அல்ல, மக்களுக்கு நல்லது செய்வதற்காகத்தான். கொடுத்த வாக்குறுதிகளை படிப்படியாக செய்வதற்காகத் தான். 6 சிலிண்டர் தருவேன் என்று சொன்னேன். இப்போதைய நிலைமைக்கு 3 தான் கொடுக்க முடிந்தது. அதனை உடனே அமல்படுத்துங்கள் என்று சொன்னேன். உடனே, மக்களை ஏற்றி விட பார்க்கிறார்கள். ஆனால், மக்கள் புரிந்து கொண்டார்கள். விஜய் தருவான் என்று சொல்லி அனுப்பி விட்டார்கள்.

கட்டணமில்லா பஸ் வசதி. கண்டக்டரோடு சேர்ந்து மக்கள் விசில் அடித்ததைப் பார்த்து திமுகவும், அதிமுகவும் அதிர்ந்து போய் விட்டார்கள். பரந்தூர் விமான நிலைய விஷயத்தில் சென்னை பாதிக்கப்படக் கூடாது. நீர்நிலைகள் பாதிக்கப்படக் கூடாது. விவசாயிகள் பக்கம் நிற்க வேண்டும். வளர்ச்சிக்கு எதிரானவன் இல்லை என்பது நிருபணமானதால், அவர்களுக்கு தூக்கம் போய் விட்டது. பால் கொள்முதல் விலையை 5 வருடத்தில் நிறைவேற்றுவோம் என்று வாக்குறுதி கொடுத்தோம். ஆனால், 3 மாதத்தில் நிறைவேற்றி விட்டோம். யாருக்காக, நமது விவசாயிகளுக்காக. இதைப் பார்த்து விட்டு, பால் விலையை உயர்த்துவீர்களா? என்று அதிமுக ஒரு மனு கொடுத்தார்கள். இவர்களும் திமுகவைப் போலத்தான் இருக்கிறார்கள். உங்கள் பாட்சா எல்லாம் இந்த விஜயிடம் பலிக்காது.

எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் வார்த்தைக்கு வார்த்தை தீய சக்தி என்று சொல்லி வந்த திமுகவோடு கூட்டு சேர்ந்து ஆட்சியமைக்க வேண்டும் என்று நினைத்தால், எம்ஜிஆர் தொண்டர்களால் அதனை எப்படி ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மனவலியும், மன வேதனையில் இருந்திருப்பார்கள். அதனால், இந்தத் தொகுதியில் எம்எல்ஏவாக ஜெயித்தும், மனவலியை தாங்கிக் கொள்ள முடியாமல், எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு, தவெகவில் இணைந்து விட்டார். அதே வலி தான் எம்ஜிஆர் தொண்டர்களிடம் இருக்கும். எம்ஜிஆர் தொண்டர்களுடன் இந்த விஜய் இருப்பான். ஒரு தம்பியா? மகனா? இந்த விஜய் இருப்பான்.

எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு எதிரியாக இருந்த திமுக, இந்த விஜய்க்கும் எதிரிதான். இதைத் தெரிந்து கொண்டு தான் கதறல் எல்லாம் அதிகமாக இருக்கிறது. எப்போ பாரு, பாஜ உள்ள வந்துடும் என்று பூச்சாண்டி வேலையைக் காட்டிக் கிட்டு, மக்களை ஏமாற்றிக்கிட்டு, இப்போது என்னாச்சு, பாஜவே மூச்சு விட திணறி விட்டது.

பாஜவும், திமுகவும் வேறு வேறு இல்லை. டில்லியில் இருக்கும் திமுக தான் பாஜ, தமிழகத்தில் இருக்கும் பாஜதான் திமுக. தொகுதி மறுவரையறை மசோதா எப்படா திரும்பக் கொண்டு வருவாங்க, எப்போது அவர்களுடன் சேரலாம் என்று திமுக காத்துக் கொண்டிருக்கிறார்கள். மதச்சார்பற்ற நிலைப்பாட்டில் உங்களால் ஒரு நிரந்தரமான முடிவில் இருக்க முடியுமா? அப்போது ஏன், பாஜ கூட்டணியில் இருக்கும் அதிமுகவுடன் இணைந்து ஆட்சியமைக்க முயன்றீர்கள்.

மதுராந்தகம் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் ஜெயித்து விட்டால், ஜனவரியில் திமுக ஆட்சி கலைந்து விடும் என்று திமுக தலைவர் ஒருவர் சொல்கிறார். எங்ருந்து வந்தது இந்த நம்பிக்கை. யாரோடு நீங்கள் கூட்டில் இருக்கீங்க. வெளியில் தனித்தனியாக இருப்பார்களாம். ஆனால், உள்ளுக்குள்ளே நல்ல புரிதலோடு இருப்பார்களாம். திமுக, பாஜ, அதிமுக எல்லாம் ஒரே கூட்டணி.

ஸ்டாலின் சார், உங்களிடம் உண்மை, மனசாட்சி,நேர்மை இருந்தால், 3 பேரும் ஒன்று தான் என்று சொல்லிவிட்டு தேர்தலில் நிற்க வேண்டியது தானே. இனிமே உங்களின் வேஷத்தை யாரும் நம்பப்போவதில்லை. திமுக வேட்பாளர் ஜெயித்தால் தவெக ஆட்சி கலைந்திடுமா? மக்கள் எல்லாம் நம்ம உறவுகள். அவர்களின் ஆட்சி இது. இந்த ஆட்சி கலையும் என்று சொல்பவர்களின் கனவு தான்.

இந்த விஜயை தொடாதீங்க. இந்த விஜயுடன் இருக்கும் மக்களை தொடாதீங்க. அப்புறம் காலத்திற்கு புலம்புவீங்க. காஞ்சிபுரம் பேச்சு நியாபகம் இருக்கா? மறந்து விட்டால் மீண்டும் போட்டு பாருங்கள். கட்சியை பலமாக்குவதற்கு விசில் சின்னத்திற்கு மறக்காமல் ஓட்டுப்போடுங்கள்.

என் மனதில் இருக்கும் ஒரு பெரிய வேதனையான ஒரு விஷயத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். திமுகவுக்கு நம் மீது எந்தக் குற்றச்சாட்டும் வைக்க முடியவில்லை என்ற விரக்தியில், ஒரு பயங்கரமான ஆயுதத்தை கையில் எடுத்துள்ளார்கள். என் சொந்த தாயை அவங்க தப்பா பேசும் போது கூட நான் பொறுத்துக் கொண்டேன். ஆனால், தமிழகத்தில் இருக்கும் என்னுடைய அம்மா, அக்கா, தங்கைகள், என்னுடன் துணையாக இருக்கும் பெண்களைப் பற்றி அசிங்கமாக பேசுகிறார்கள். திமுக தலைமையும், திமுக குடும்பமும் இப்படித்தான் அசிங்கமாக பேசுகிறார்கள். அதை பழக்கத்தோஷத்தில் ஸ்டாலின் சாரும், அவரது குடும்பத்தினரும் பார்த்து ரசிக்கிறார்கள்.

நம் தமிழகத்தின் இளம் பெண்களையும், பச்சிளம் குழந்தைகளையும் ஒருத்தன் இத்தனை ஆண்டுகள் சீரழித்துக் கொண்டு இருந்துள்ளான். அந்த வழக்கு திமுக ஆட்சியின் போது வந்தும், அந்த வழக்கின் வரலாறையே மறுத்து விட்டார்கள். என்ன டீலிங் நடக்குது உள்ளுக்குள்ள. ஸ்டாலின் சார், வாயைத் திறங்க. திமுகவோடு சேர்ந்து அதிமுகவினரும் வாய் திறக்காமல் இருக்கிறார்கள். இதில் கூடவா கூட்டு? பெண்கள் பாதுகாப்பிற்கு என்று பிறந்த மாதிரி திமுகவும், அதிமுகவும். அந்த அத்தனை பெண்களை சீரழித்தவனை உள்ள தூக்கி வைத்து விட்டோம். இப்போது, அந்த ஆளை பற்றி வாயைத் திறக்கவில்லை. இத்தனை ஆண்டுகள் மூடி மறைத்து வைத்திருந்த விஷயத்தை, விஜய் வந்த உடனே தோண்டி எடுத்து, அவனை உள்ள தூக்கி வைத்து விட்டான். அந்த அதிர்ச்சியில் வாயை திறக்காமல் இருக்கிறார்கள் போல. எல்லாரும் பச்சைப் புள்ளைங்க சார். அவர்களின் வலியைப் பற்றி வெளியே பேச முடியவில்லை என்றால், என்ன அரசியல் பண்ணீட்டு இருக்கீங்க, இத்தனை வருடமா? மக்களே, இந்த இடைத்தேர்தலில் திமுகவுக்கும், அதிமுகவுக்கும் சரியான பாடம் புகட்டி ஆக வேண்டும், இவ்வாறு அவர் கூறினார்.

முதல்வர் விஜய் பேசிய வீடியோவைக் காண கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்

Link: http://https://www.youtube.com/watch?v=OszYeZpWRl4