இடைத்தேர்தல்: தாராபுரத்தில் 22 வேட்பு மனுக்களும், மதுராந்தகத்தில் 28 வேட்பு மனுக்களும் ஏற்பு
இடைத்தேர்தல்: தாராபுரத்தில் 22 வேட்பு மனுக்களும், மதுராந்தகத்தில் 28 வேட்பு மனுக்களும் ஏற்பு
தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிகளில் வருகிற அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
Published : September 18, 2026 at 10:37 AM IST
திருப்பூர்/செங்கல்பட்டு: இடைத்தேர்தல் நடைபெற உள்ள தாராபுரம் தனித் தொகுதியில் 22 வேட்பு மனுக்களும், மதுராந்தகம் தனித் தொகுதியில் 28 வேட்பு மனுக்களும் ஏற்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து, வேட்பாளர்களுக்கான வேட்பு மனு தாக்கல் செப்டம்பர் 9ஆம் தேதி தொடங்கப்பட்டு செப்டம்பர் 16ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.
தாராபுரம் தொகுதியில் 22 வேட்பு மனுக்கள் ஏற்பு
இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தனி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட மொத்தம் 51 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்த நிலையில், தகுதியான வேட்பாளர்களின் இறுதி பட்டியல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தாராபுரம் தனி சட்டமன்ற தொகுதியில் 22 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.
இதில் முக்கிய அரசியல் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களும் இடம்பெற்றுள்ளனர். அதன்படி, நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திகா, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பொ. சத்தியபாமா, திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் சுகன்யா, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் பானுமதி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் லட்சுமணன் ஆகியோரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்ட முக்கிய வேட்பாளர்களாக உள்ளனர்.
இதுதவிர, அனைத்து இந்திய அண்ணா திராவிட மக்கள் செயல் கட்சி சார்பில் அருள்ராஜ், இந்திய கன சங்கம் கட்சி சார்பில் ஆறுமுகம், இந்திய திராவிட மக்கள் முன்னேற்றக் கட்சி சார்பில் பெருமாள், ஆண்டி கரப்சன் டைனமிக் பார்ட்டி சார்பில் மகேஸ்வரன் ஆகியோரின் வேட்பு மனுக்களும் ஏற்கப்பட்டுள்ளன. மேலும், சசி பிரியா, சத்தியபாமா, சதீஷ்குமார், தனலட்சுமி, நல்லசாமி, பானுப்பிரியா, பானுமதி, மகேந்திரன், மாரிமுத்து, முத்துச்சாமி, ராஜரத்தினம், ராஜேஸ்வரி மற்றும் ஜோதிஸ்வரி ஆகிய 13 பேர் சுயேச்சை வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர்.
மதுராந்தகம் தொகுதியில் 28 வேட்பு மனுக்கள் ஏற்பு
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தனி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்காக 28 வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக மதுராந்தகம் தனி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்காக மொத்தம் 48 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
இதையடுத்து வேட்பாளர்கள் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் தேர்தல் நடத்தும் அலுவலர் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இந்த ஆய்வின் முடிவில் தேவையான ஆவணங்கள் மற்றும் தேர்தல் விதிமுறைகளில் ஏற்பட்டிருந்த குறைபாடுகள் உள்ளிட்ட காரணங்களால் 20 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. அதேவேளையில் விதிமுறைகளுக்கு உட்பட்டதாக இருந்த 28 வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
அதன்படி மதுராந்தகம் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக த.வெ.க சார்பில் மரகதம் குமரவேல், தி.மு.க சார்பில் வழக்கறிஞர் பரந்தாமன், அ.தி.மு.க சார்பில் கனிதா சம்பத், நா.த.க சார்பில் ஜானகிராமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சுகந்தி ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.
இவர்களின் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனையில் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இதனால் மதுராந்தகம் தொகுதியில் இந்த 5 முக்கிய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் தொடர்கின்றனர். இவர்களுடன் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட சுயேச்சை மற்றும் மாற்று வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.
வேட்புமனு பரிசீலனையில் 28 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள நிலையில் வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் முடிவடைந்த பிறகே தேர்தலில் இறுதியாக போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை உறுதி செய்யப்படும். அதன்படி, வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கு இன்று கடைசி (செப்டம்பர் 18) நாளாகும். இதையடுத்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.