📅 Monday, 21 September 2026 IST | புரட்டாசி 5, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports September 21, 2026 12:03 AM

இரண்டு வெள்ளி வென்றார் இளவேனில்: ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடுதலில்

இரண்டு வெள்ளி வென்றார் இளவேனில்: ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடுதலில்

நகோயா: ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடுதலில் (10 மீ., 'ஏர் ரைபிள்') இந்திய வீராங்கனை இளவேனில், இரண்டு வெள்ளிப்பதக்கம் வென்றார்.

ஜப்பானின் அயச்சி - நகோயாவில், ஆசிய விளையாட்டு 20வது சீசன் நடக்கிறது. இதன் துப்பாக்கி சுடுதல் போட்டிக்கான, பெண்கள் தனிநபர் 10 மீ., 'ஏர் ரைபிள்' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் சோனம் (634.1 புள்ளி), இளவேனில் வாளறிவன் (633.5) முறையே 3, 6வது இடம் பிடித்து பைனலுக்கு முன்னேறினர். மற்றொரு இந்திய வீராங்கனை விதார்சா வினோத் (630.4) 12வது இடம் பிடித்து பைனல் வாய்ப்பை இழந்தார்.

தனிநபர் தகுதிச் சுற்றில் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் அணிகளுக்கான பதக்கம் முடிவாகும். இதன்படி சோனம், இளவேனில், விதார்சா அடங்கிய இந்திய அணி 1898.0 புள்ளிகளுடன் (634.1+633.5+630.4) 2வது இடம் பிடித்து வெள்ளி வென்றது. இது, இம்முறை இந்தியாவுக்கு கிடைத்த முதல் பதக்கம் ஆனது. சீன அணி (1904.2 புள்ளி) புதிய உலக சாதனையுடன் தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது.

இரண்டாவது வெள்ளி: அடுத்து நடந்த தனிநபர் பைனலில் இந்தியாவின் சோனம், 167.0 புள்ளிகளுடன் 6வது இடம் பிடித்தார். அபாரமாக ஆடிய இளவேனில், 252.4 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்து வெள்ளிப்பதக்கத்தை தட்டிச் சென்றார். 0.6 புள்ளியில் தங்கப்பதக்கத்தை தவறவிட்ட தமிழகத்தின் இளவேனில், ஒரே நாளில் இரண்டு பதக்கம் வென்றார். ஜப்பானின் ஹினாடா டாய்ச்சி (253.0 புள்ளி) தங்கப்பதக்கம் வென்றார்.

சுசிகாவுக்கு பதக்கம்: ஆசிய விளையாட்டில் இம்முறை கலப்பு தற்காப்பு கலைகள் போட்டி அறிமுகமானது. இதில் பெண்கள் பாரம்பரிய கலப்பு தற்காப்பு கலைகள் போட்டிக்கான 60 கிலோ பிரிவு காலிறுதியில், இந்தியாவின் சுசிகா தரியல் 2-0 என்ற கணக்கில் மங்கோலியாவின் அல்டான்சிமெக் பைகல்மாவை வீழ்த்தினார். அரையிறுதிக்கு முன்னேறிய சுசிகா 36, குறைந்தபட்சம் வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்தார்.

குவிம்சி ஏமாற்றம்: 'டெக்பால்' போட்டிக்கான பெண்கள் ஒற்றையர் பிரிவு வெண்கலப்பதக்க போட்டியில் இந்தியாவின் குவிம்சி டிசவுசா 0--2 (11-12, 11-12) என, ஜப்பானின் யுய்னா சகமோட்டோவிடம் தோல்வியடைந்தார்.

கலப்பு இரட்டையர் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவின் குவிம்சி டிசவுசா, முகமது அனாஸ் பெக் ஜோடி 0-2 (9-12, 6-12) என வியட்நாமின் ஹோவாங் மின் டான் நுயென், கியா நியா டிரின் ஜோடியிடம் வீழ்ந்தது.

ரிஷாப் ஆறுதல்: ஆண்களுக்கான நீச்சல் போட்டி 100 மீ., 'பேக்ஸ்டிரோக்' பிரிவு தகுதிச் சுற்றில், இலக்கை 54.85 வினாடியில் கடந்த இந்தியாவின் ரிஷாப் பதாஸ் 5வது இடம் பிடித்து பைனலுக்கு முன்னேறினார். மற்றொரு இந்திய வீரர் உத்கார்ஷ் பாட்டீல் (56.19 வினாடி) 12வது இடம் பிடித்தார். அடுத்து நடந்த பைனலில், பந்தய துாரத்தை 54.77 வினாடியில் கடந்த ரிஷாப் பதாஸ் 6வது இடம் பிடித்தார்.

ஆண்களுக்கான 100 மீ., 'பிரீஸ்டைல்' தகுதிச் சுற்றில் இந்தியாவின் பெனிஸ்டன் (50.25 வினாடி), ஆகாஷ் மணி (50.85 வினாடி) முறையே 12, 23வது இடம் பிடித்து ஏமாற்றினர்.

சூரஜ் 11வது இடம்: ஆண்களுக்கான உஷு, 'சாங்குவான்' பிரிவு பைனலில் இந்தியாவின் சூரஜ் சிங் மயங்க்லாம்பம், 9.683 புள்ளிகளுடன் 11வது இடம் பிடித்தார்.

தமிழக வீராங்கனை

இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை இளவேனில் வாளரிவன் 27, தமிழகத்தின் கடலுாரில் பிறந்தவர். குஜராத் பல்கலையில் பயின்ற இளவேனில், ஆசிய சாம்பியன்ஷிப், உலக கோப்பை, உலக கோப்பை பைனல், உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் நிறைய பதக்கம் வென்றுள்ளார். ஆசிய விளையாட்டில் முதல் முறையாக பதக்கம் கைப்பற்றிய இளவேனில், இரண்டு முறை (2020, 2024) ஒலிம்பிக்கில் பங்கேற்றார். கடந்த 2022ல் இவருக்கு நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.

பிரதமர் மோடி பாராட்டு

பிரதமர் மோடி வெளியிட்ட செய்தியில், 'துப்பாக்கி சுடுதல் நட்சத்திரங்கள் இந்தியாவுக்கு பெருமை சேர்த்து வருகின்றனர். ஆசிய விளையாட்டில் இளவேனில் 2 வெள்ளி வென்றது சிறந்த தருணம். எதிர்காலத்திலும் நிறைய பதக்கம் வெல்ல வாழ்த்துகிறேன்,' என, தெரிவித்திருந்தார்.