இந்திய அணி மீண்டும் சொதப்பல்: தொடரை முழுமையாக இழந்தது
சவுத்தாம்ப்டன்: ஐந்தாவது 'டி-20' போட்டியில் சொதப்பிய இந்திய அணி 56 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. தொடரை முழுமையாக பறிகொடுத்தது. இங்கிலாந்து அணி கோப்பை வென்றது.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்றது. முதல் நான்கு போட்டிகளின் முடிவில், இங்கிலாந்து 3-0 என தொடரை கைப்பற்றியது.
போக்குவரத்து நெரிசல்: சவுத்தாம்ப்டனில் 5வது போட்டி நடந்தது. சவுத்தாம்ப்டன் நகரில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் காரணமாக, போட்டி 30 நிமிடம் தாமதமாக துவங்கியது. இந்திய 'லெவன்' அணியில் வைபவ் சூர்யவன்ஷி, வாஷிங்டன் சுந்தர் நீக்கப்பட்டு சஞ்சு சாம்சன், சூர்யான்ஷ் ஷெட்ஜ் சேர்க்கப்பட்டனர். 'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், 'பீல்டிங்' தேர்வு செய்தார்.
பட்லர் அபாரம்: இங்கிலாந்து அணிக்கு பில் சால்ட் (6) ஏமாற்றினார். பின் இணைந்த பட்லர், கேப்டன் ஹாரி புரூக் ஜோடி நம்பிக்கை தந்தது. அக்சர் படேல் வீசிய 10வது ஓவரில் 2 சிக்சர், ஒரு பவுண்டரி விளாசிய புரூக், 19 பந்தில் அரைசதம் எட்டினார். தொடர்ந்து அசத்திய புரூக், சூர்யான்ஷ் வீசிய 14வது ஓவரில் 2 சிக்சர், ஒரு பவுண்டரி உட்பட 24 ரன் விளாசினார். பிரின்ஸ் யாதவ் வீசிய 15வது ஓவரில் 2 சிக்சர், 2 பவுண்டரி அடித்த பட்லர், அக்சர் படேல் பந்தை சிக்சருக்கு அனுப்பி சதம் கடந்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு 233 ரன் சேர்த்த போது ஷிவம் துபே பந்தில் பட்லர் (131 ரன், 8X6, 12X4) அவுட்டானார்.
இங்கிலாந்து அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 257 ரன் எடுத்தது. புரூக் (95 ரன், 8X6, 4X4), வில் ஜாக்ஸ் (7) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் ஷிவம் துபே 2 விக்கெட் வீழ்த்தினார்.
இஷான் ஆறுதல்: சவாலான இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு அபிஷேக் சர்மா (3) ஏமாற்றினார். சஞ்சு சாம்சன் (27), கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் (28) ஓரளவு கைகொடுத்தனர். பொறுப்பாக ஆடிய இஷான் கிஷான் 35 பந்தில் 56 ரன் (2X6, 7X4) எடுத்து ஆறுதல் தந்தார். ஷிவம் துபே (14), சூர்யான்ஷ் ஷெட்ஜ் (7), அக்சர் படேல் (3) சொற்ப ரன்னில் அவுட்டாகினர்.இந்திய அணி 20 ஓவரில், 201/8 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. அர்ஷ்தீப் (4), பிரசித் கிருஷ்ணா (1) அவுட்டாகாமல் இருந்தனர். இந்திய அணி வரிசையாக 6 'டி-20' போட்டிகளில் (எதிர்: அயர்லாந்து-2, இங்கிலாந்து-4 போட்டி) தோற்றது.
இந்தியாவுக்கு எதிரான 'டி-20' போட்டியில், குறைந்த பந்தில் அரைசதம் விளாசிய வீரர்கள் வரிசையில் 2வது இடத்தை ஆஸ்திரேலியாவின் கிரீன் (2022, ஐதராபாத்), இங்கிலாந்தின் பெத்தல் (2026, மும்பை) ஆகியோருடன் பகிர்ந்து கொண்டார் ஹாரி புரூக். மூவரும் தலா 19 பந்தில் அரைசதம் அடித்தனர். முதலிடத்தில் தென் ஆப்ரிக்காவின் மார்கோ யான்சென் (16 பந்து, செஞ்சுரியன், 2024) உள்ளார்.