📅 Tuesday, 14 July 2026 IST | ஆனி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports July 14, 2026 10:33 PM

IND vs ENG: பாதி சேஸிங்கில் பேட்டிங்கை விட்டு வெளியேறிய சுப்மன் கில்.. இந்திய அணிக்கு விழுந்த அடி

IND vs ENG: பாதி சேஸிங்கில் பேட்டிங்கை விட்டு வெளியேறிய சுப்மன் கில்.. இந்திய அணிக்கு விழுந்த அடி

IND vs ENG: பாதி சேஸிங்கில் பேட்டிங்கை விட்டு வெளியேறிய சுப்மன் கில்.. இந்திய அணிக்கு விழுந்த அடி

பர்மிங்காம்: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், 259 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணிக்கு பேட்டிங்கில் திடீர் பின்னடைவு ஏற்பட்டது. அதிரடியாக விளையாடி வந்த கேப்டன் சுப்மன் கில் காயம் காரணமாக பாதியிலேயே வெளியேறினார். அவர் போன பின் விக்கெட்கள் வரிசையாக வீழ்ந்தன.

முன்னதாக, முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 258 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. எட்டக்கூடிய இந்த இலக்கை துரத்திய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா மோசமான துவக்கம் அளித்தார். அவர் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். விராட் கோலி 5 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இதனால் 48 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இந்திய அணி. பின்னர் சுப்மன் கில் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி அணியை மீட்டு எடுத்தது.

இங்கிலாந்து பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்த சுப்மன் கில் 75 பந்துகளில் 11 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 80 ரன்கள் குவித்தார். மேலும், ஸ்ரேயாஸ் ஐயருடன் இணைந்து 3-வது விக்கெட்டுக்கு 101 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்யும் நிலைக்கு கொண்டு சென்றார்.

இந்த நிலையில், சுப்மன் கில்லுக்கு வலது காலில் திடீரென கடுமையான வலி ஏற்பட்டது. வலியால் அவதிப்பட்ட அவர் மைதானத்திலேயே கிளவுஸை கழற்றிவிட்டு, கால்களை பிடித்தபடி அமர்ந்தார். உடனடியாக மருத்துவக் குழுவினர் அவருக்கு முதலுதவி அளித்தனர். எனினும் தொடர்ந்து விளையாட முடியாததால் அவர் மைதானத்தை விட்டு மெதுவாக வெளியேறினார். அவர் ரிட்டயர்ட் ஹர்ட் ஆனதாக அறிவிக்கப்பட்டது. இது வெறும் தசைப்பிடிப்புதானா? அல்லது மோசமான காயமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

சுப்மன் கில் வெளியேறியதைத் தொடர்ந்து வாஷிங்டன் சுந்தர் களம் இறங்கினார். அடுத்து ஸ்ரேயாஸ் ஐயர் 35 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார். அடுத்து வந்த கே எல் ராகுல் 1 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். கில் ரிட்டயர்ட் ஹர்ட் ஆனதைத் தொடர்ந்து இரண்டு முக்கிய பேட்ஸ்மேன்கள் அடுத்த சில ஓவர்களில் வெளியேறினர்.