இணையவழி ஊழியர்கள்: சிங்கப்பூரில் சாலைப் பாதுகாப்பு
சிங்கப்பூரில் உணவு விநியோகம், தனியார் வாடகை வாகன ஓட்டுநர்கள் போன்ற இணையவழி ஊழியர்கள், 100,000 பேருக்கு 92.1 என்ற விகிதத்தில் மிக அதிகமான படுகாய, மரண விகிதத்தை எதிர்நோக்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாண்டின் முற்பாதிக்கான வேலையிடப் பாதுகாப்பு, சுகாதாரப் புள்ளிவிவரங்களின்படி, இந்த விகிதம் கட்டுமானத் துறையின் காய விகிதத்தைவிட ஏறத்தாழ நான்கு மடங்கு அதிகம் ஆகும்.
இவ்வாண்டின் முதல் பாதியில், உயிரிழந்த அல்லது கடுமையாகக் காயமடைந்த இணையவழி ஊழியர்களின் எண்ணிக்கை 44 (நால்வர் உயிரிழப்பு, 40 பேருக்குக் கடுமையான காயங்கள்). கடந்த ஆண்டின் இதே காலகட்டத்திலும் 44 விபத்துகள் நிகழ்ந்தன.
இணையவழி ஊழியர்கள் படுகாயமடைந்த சம்பவங்களில் 86 விழுக்காடு (38 சம்பவங்கள்) சாலைகளில் நிகழ்ந்த வாகன விபத்துகளால் ஏற்பட்டுள்ளன.
ஒட்டுமொத்த விபத்துகளை ஆராய்ந்தபோது, 84 விழுக்காட்டுச் சம்பவங்கள் (37 விபத்துகள்) பொருள்கள் அல்லது உணவு விநியோகச் சேவைகளின்போதே நேர்ந்துள்ளன. வாடகை கார் ஓட்டும் பணியின்போது ஏழு விபத்துகள் மட்டுமே பதிவாகியுள்ளன. இவ்வாண்டின் முற்பாதியில் சாலை விபத்துகளில் உயிரிழப்பு பதிவான ஏழு சம்பவங்களில் நான்கில் இணையவழி ஊழியர்கள் சம்பந்தப்பட்டிருந்தனர்.
2024ன் இணையவழி ஊழியர்கள் சட்டத்தின்கீழ், கடந்த 2025ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல், அனைத்து இணையவழி விற்பனைத் தளங்களும் தங்கள் ஊழியர்களுக்கு ஏற்படும் காயங்களை மனிதவள அமைச்சிடம் தெரிவிப்பதும், அவர்களுக்கு வேலைக்காய இழப்பீட்டுச் சட்டத்தின் (WICA) கீழ் இழப்பீடு வழங்குவதும் சட்டபூர்வமாகக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்குமுன், ஊழியர்கள் தங்களின் சொந்தக் காப்பீடுகளையே நம்பியிருக்க வேண்டியிருந்தது.
அதிகரித்து வரும் சாலை விபத்துகளைக் கட்டுப்படுத்த, மனிதவள அமைச்சு, போக்குவரத்து அமைச்சு, உள்துறை அமைச்சு, போக்குவரத்துக் காவல்துறையினர் ஆகிய அரசாங்கத் துறைகளை உள்ளடக்கிய அரசாங்க அமைப்புகள் பலவற்றுக்கு இடையிலான வேலையிடப் பாதுகாப்பு, சுகாதாரப் பணிக்குழு (MAST) 2026 ஜூலை மாதத்தில் விரிவாக்கப்பட்டது.
மேலும், சாலைகளில் பாதுகாப்பற்ற முறையில் ஓட்டுபவர்களைக் கட்டுப்படுத்த போக்குவரத்துக் காவல்துறையினர் அடுத்த ஆண்டு முதல் கடுமையான தண்டனைப் புள்ளி முறையை நடைமுறைப்படுத்த உள்ளனர்.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
இணையவழி ஊழியர்களின் பாதுகாப்பை மேம்படுத்த 2026 மார்ச் மாதத்தில் அமைக்கப்பட்ட ‘இணையவழி ஊழியர் பாதுகாப்புப் பணிக்குழு’ (PWSW), ஊழியர்களுக்கான சிறப்புப் பயிற்சிகள், பாதுகாப்பான பயணத்திற்கான வழிகாட்டுதல்கள், நவீன பாதுகாப்புத் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றை ஆராய்ந்து வருகிறது.
இக்குழுவின் பரிந்துரைகள் இவ்வாண்டின் இறுதியில் வெளியிடப்படும்.
அண்மையில் செப்டம்பர் 4 முதல் 30 வரை பொதுமக்கள் கருத்துரைக்க முன்வைக்கப்பட்ட புதிய நடத்தை விதிமுறைப் பரிந்துரைகளின்படி, விநியோக இணையத்தளங்கள் ஊழியர்களுக்குக் கடுமையான நேரக் கெடு விதிக்க இயலாது.
இணையவழி ஊழியர்களுக்கு முடிவெடுக்கும் சுதந்திரம் (autonomy) அதிகம் இருப்பதால், அவர்களின் பாதுகாப்பு பெரும்பாலும் அவர்களின் சொந்தப் பயணப் பழக்கவழக்கங்கள், சாலை நிலவரங்களைப் பொறுத்தே அமைகிறது என்று மனிதவள அமைச்சு குறிப்பிட்டது. நேர நெருக்கடி காரணமாகச் சிலர் சிவப்பு விளக்கு எரியும்போது வீதிகளைக் கடப்பது போன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடுவதாக அது சுட்டிக்காட்டியது.
விநியோகச் சேவையில் ஈடுபடுவோர் பெரும்பாலும் இருசக்கர வாகனங்களையே பயன்படுத்துகின்றனர்.
சிங்கப்பூர்ச் சாலைகளில் இருசக்கர வாகனங்கள் 15 விழுக்காடு மட்டுமே இருந்தாலும், 50 விழுக்காட்டுக்கும் அதிகமான போக்குவரத்து விபத்துகளில் அவை சிக்கியிருப்பதாகப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. எனவே, ஊழியர்கள் பொறுப்புடன் செயல்படுவது அவர்களின் பாதுகாப்பிற்கு இன்றியமையாதது என அமைச்சு வலியுறுத்தியுள்ளது.