இணைய ஊடுருவல்: அவெலாஜிக் சம்பவத்தில் பிணை இல்லை
மென்பொருள் சேவை வழங்கும் ‘அவெலாஜிக்’ நிறுவனத்தின் இணைய ஊடுருவல் சம்பவத்தில் எந்தவொரு பிணைத் தொகையும் செலுத்தப்படவில்லை என்று சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் (முயிஸ்) வியாழக்கிழமை (செப்டம்பர் 17) தெரிவித்துள்ளது.
அவெலாஜிக் நிறுவனத்தின் மனிதவளம், சம்பள விவரக் கட்டமைப்பைப் பாதித்த அச்சம்பவம் குறித்து கடந்த செவ்வாய்க்கிழமை தகவல் வெளியிடப்பட்டது.
இதனால் 48 பள்ளிவாசல்கள், நான்கு மதரசாக்கள், இஸ்லாமிய கற்றல் மையம் மற்றும் மேலாண்மை அலுவலகம் உள்ளிட்ட பல அமைப்புகள் பாதிக்கப்பட்டதாக முயிஸ் கூறியது.
காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதுடன், அவெலாஜிக் நிறுவனம் அதன் பாதிப்புகள் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.
பாதிக்கப்பட்ட அமைப்புகள், அவற்றின் ஊழியர்களின் நிலை குறித்து கவலையடைந்துள்ளதாகக் குறிப்பிட்ட முயிஸ், ஊழியர்களுக்கு உரிய நேரத்தில் சம்பளம் வழங்கப்படுவதை உறுதிசெய்ய மாற்று ஏற்பாடுகள் உடனடியாகச் செய்யப்பட்டுள்ளதாகக் கூறியது.
சமயம், மக்கள் சேவைகளில் எந்தவொரு தடங்கலும் ஏற்படவில்லை என்றும் அது உறுதிப்படுத்தியது.
பாதிக்கப்பட்ட தரவுகளை அவெலாஜிக் நிறுவனம் மீட்டெடுத்துள்ளதுடன், சம்பவம் குறித்து விசாரிக்க தன்னிச்சையான இணையப் பாதுகாப்பு வல்லுநர்களையும் நியமித்துள்ளது.
இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், அமைப்பிலிருந்து பேரளவிலான தரவுகள் திருடப்பட்டதற்கான எந்தச் சான்றும் இல்லை என்றும் கூடுதல் பாதுகாப்புக்காக தரவுகள் அனைத்தும் மறைக்குறியாக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் முயிஸ் குறிப்பிட்டது.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
பாதுகாப்புச் சோதனைகள் நிறைவடைந்த பின்னரே இந்த முறைமை மீண்டும் செயல்பாட்டிற்கு வரும்.
அவெலாஜிக் நிறுவனம் தனது ‘ஸ்மார்ட் எச்ஆர்எம்எஸ்’ முறைமை குறித்து இணையப் பாதுகாப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. ஆகஸ்ட் 30க்கும் 31ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் பெரிய அளவிலான தரவுகள் ஏதும் கசியவில்லை என்று அதன் தடயவியல் ஆய்வில் தெரியவந்துள்ளது.
அந்நிறுவனம், ஆகஸ்ட் 31ஆம் தேதி காவல்துறையிடம் புகார் அளித்ததோடு, தனிநபர் தரவுப் பாதுகாப்பு ஆணையத்திற்கும் தகவல் அளித்தது. இது தொடர்பாக தனிநபர் தரவுப் பாதுகாப்பு ஆணையமும் விசாரணை நடத்தி வருகிறது.
செப்டம்பர் 3ஆம் தேதி ‘பிளாக் பாண்டா’ என்ற இணையப் பாதுகாப்பு நிறுவனத்தை அவெலாஜிக் நியமித்தது. வெள்ளிக்கிழமைக்குள் புதிய முறைமையை மீண்டும் செயல்பாட்டிற்குக் கொண்டுவர இலக்கு நிர்ணயித்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.