இலங்கை கிரிக்கெட் அணிக்கு வெண்கலம்.. வங்கதேசத்தை சுருட்டி ஆசிய விளையாட்டில் வெற்றி
இலங்கை கிரிக்கெட் அணிக்கு வெண்கலம்.. வங்கதேசத்தை சுருட்டி ஆசிய விளையாட்டில் வெற்றி
நிஷின்: 2026 ஆசிய விளையாட்டுப் போட்டி ஆடவர் கிரிக்கெட்டின் 3வது இடத்திற்கான வெண்கலப் பதக்க ஆட்டத்தில், இலங்கை அணி வங்கதேசத்தை 63 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. தரிந்து ரத்நாயக்காவின் அதிரடி அரைசதம் மற்றும் துல்லியமான பந்துவீச்சால் இலங்கை அணி வெண்கலப் பதக்கத்தை தட்டிச் சென்றது.
ஜப்பானின் நிஷின் நகரில் உள்ள கோரோகி ஸ்போர்ட்ஸ் பார்க் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி தொடக்கத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 21 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் என கடும் சரிவை சந்தித்தது. கேப்டன் சஹான் ஆராச்சிகே நிதானமாக ஆடி 33 ரன்கள் சேர்த்தார்.
கடைசி கட்டத்தில் 7வது வரிசையில் களமிறங்கிய தரிந்து ரத்நாயக்கா புயல் வேகத்தில் சுழன்றடித்தார். வெறும் 32 பந்துகளில் 7 பவுண்டரிகள், 5 வானளாவிய சிக்சர்களுடன் 65 ரன்கள் விளாசி இலங்கை அணியின் ஸ்கோரை உயர்த்தினார். முடிவில் இலங்கை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் என்ற சவாலான இலக்கை நிர்ணயித்தது. வங்கதேசம் தரப்பில் மஹிதி ஹசன், முஸ்தபிசுர் ரஹ்மான் மற்றும் சைப் ஹசன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணிக்கு தொடக்கத்திலேயே மரண அடி விழுந்தது. சைப் ஹசன் (0), தன்சித் ஹசன் (0), கேப்டன் லிட்டன் தாஸ் (0) ஆகிய முதல் மூன்று பேட்டர்களும் அடுத்தடுத்து டக் அவுட் ஆகி வெளியேறினர். வங்கதேசம் 4 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து நிலைகுலைந்தது.
பர்வேஸ் ஹுசைன் எமன் (20), யாசிர் அலி (21) மற்றும் நசும் அகமது (26) ஆகியோர் மட்டுமே ஓரளவு ரன் சேர்த்தனர். இலங்கை பந்துவீச்சாளர்களின் துல்லிய தாக்குதலை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்த வங்கதேச அணி, 17.3 ஓவர்களில் வெறும் 102 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வி அடைந்தது.
இலங்கை அணி தரப்பில் நுவான் துஷாரா 4 ஓவர்களில் 18 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார். பேட்டிங்கில் அசத்திய தரிந்து ரத்நாயக்கா பந்துவீச்சிலும் 18 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். விஜயகாந்த் வியாஸ்காந்த் மற்றும் வனுஜா சஹான் தலா 2 விக்கெட்டுகளையும், துஷன் ஹேமந்தா மற்றும் சஹான் ஆராச்சிகே தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். 63 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இலங்கை அணி, ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்றது.