📅 Sunday, 20 September 2026 IST | புரட்டாசி 4, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 20, 2026 01:01 PM

இளையராஜா பாடல் சர்ச்சை: ‘உரிமை யாரிடம் உள்ளதோ, அது அவர்களுக்கே’

இளையராஜா பாடல் சர்ச்சை: ‘உரிமை யாரிடம் உள்ளதோ, அது அவர்களுக்கே’

இளையராஜா பாடல் சர்ச்சை: ‘உரிமம் யாரிடம் இருக்கிறதோ, அது அவர்களுக்கே உரியது’ - ஹிப்ஹாப் தமிழா ஆதி கருத்து

இளையராஜாவின் சட்ட ரீதியான ஒப்பந்தங்களை அறியாமல் கருத்து கூற முடியாது என்றும் ஹிப்ஹாப் தமிழா ஆதி கூறியுள்ளார்.

Published : September 20, 2026 at 12:23 PM IST

கோயம்புத்தூர்: பாடலின் உரிமை யாரிடம் உள்ளதோ, அது அவர்களுக்கே என இளையராஜா பாடல் உரிமை சர்ச்சை குறித்து ஹிப்ஹாப் தமிழா ஆதி கருத்து தெரிவித்துள்ளார்.

கோவையில் 'மீசைய முறுக்கு 2' திரைப்பட குழுவினர் இன்று (செப்டம்பர் 20) செய்தியாளர்களைச் சந்தித்தனர். திரைப்படத்தின் நடிகரும், இயக்குநருமான ஹிப்ஹாப் தமிழா ஆதி, நடிகைகள் கேதிகா சர்மா, சைத்ரா ஆச்சர், ரம்யா ரங்கநாதன் மற்றும் நடிகை குஷ்புவின் மகள் அனந்திதா ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர்.

அப்போது பேசிய ஹிப்ஹாப் தமிழா ஆதி, மீசைய முறுக்கு 2 திரைப்படம் குறித்து பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது, "இந்த திரைப்படம் பாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 80களில் தொடங்கி இப்போது வரையிலான ட்ரெண்டிங்கான கானா பாடல்களின் தொகுப்பாக இது இருக்கும். குறிப்பாக, 'ஆரா 10க்கு10' பாடலும் கூட கானா பாடலின் அப்கிரேடட் வெர்ஷன்தான்" என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "வயதானவர் முதல் இன்றைய இளம் தலைமுறையினர் வரை என அனைத்து தலைமுறையினரும் தங்களைப் பொருத்திப் பார்க்கும் படமாகவும் மீசைய முறுக்கு 2 இருக்கும். முதல் பாகத்தின் சில கதாபாத்திரங்கள் இதிலும் இடம்பெறும். ஆனால், இரண்டுக்கும் இடையில் தொடர்பு இருக்காது.

திறமையும், உழைப்பும் இருந்தால் மட்டுமே எந்த துறையிலும் நிலைக்க முடியும். நான் அரசியல் குறித்து பேசுவதில்லை என்றாலும், எந்த துறையாக இருந்தாலும் அரசியல் பேசுவது ஆரோக்கியமான விஷயம்தான். பிறக்கும்போதே போராடித்தான் பிறக்கிறோம். ஆளும் வர்க்கம் இருக்கும் வரை இல்லாதவனை அடக்க காசு, சாதி போன்றவற்றை பயன்படுத்துவார்கள். ஆகையால் போராட்டங்கள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்" என்றார்.

அவர்களுக்கே உரிமை

மேலும், இளையராஜா பாடல் உரிமை விவகாரம் நீதிமன்றம் வரை சென்றிருப்பது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், "அவரின் சட்ட ரீதியான ஒப்பந்தங்களை அறியாமல் கருத்து கூற முடியாது. அந்தப் பாடல் உரிமம் யாரிடம் இருக்கிறதோ, அது அவர்களுக்கே உரியது. பெரு நிறுவனங்களை கேள்வி கேட்காமல் கலைஞர்களை கேள்வி கேட்டு வருகிறோம். தற்போது திரையரங்குகளை நோக்கி மக்கள் வருகை அதிகரித்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது" என்றார்.

இதையடுத்து, திரைத்துறை மற்றும் தனது எதிர்கால திட்டங்கள் குறித்து பேசிய அவர், "இசையமைப்பாளராக பல படங்கள் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது. வாய்ப்புகளை உருவாக்கும் இடத்தில் இருந்தால் மட்டுமே தன் கலை மூலம் சொல்ல வேண்டியதைச் சொல்ல முடியும். தமிழ் கருவிகளை மட்டுமே பயன்படுத்தி ஒரு இசைத் தொகுப்பை உருவாக்கி அதனைச் சர்வதேச அளவில் கொண்டு செல்ல வேண்டும் என்ற லட்சியத்துடன் பணியாற்றி வருகிறேன். அது அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது" என தெரிவித்தார்.