📅 Sunday, 04 October 2026 IST | புரட்டாசி 18, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News October 04, 2026 04:03 AM

இளைய தலைமுறையினர்: சிங்கப்பூரின் நல்லிணக்கத்தின் அடுத்த தலைவர்கள்

இளைய தலைமுறையினர்: சிங்கப்பூரின் நல்லிணக்கத்தின் அடுத்த தலைவர்கள்

சிங்கப்பூரின் பல்லினக் கட்டமைப்பில் இன, சமய நல்லிணக்கத்தைக் கட்டிக்காப்பதில் இளைய தலைமுறையினர் வெறும் பங்கேற்பாளர்களாக மட்டுமின்றி, அதனை முன்னெடுத்துச் செல்லும் முதன்மைத் தலைவர்களாக உருவெடுத்து வருகின்றனர் என்று ‘ஒன்பீப்பள்.எஸ்ஜி’ அமைப்பின் தலைவர் டாக்டர் ஜனில் புதுச்சேரி தெரிவித்துள்ளார்.

கல்வி, நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணை அமைச்சருமான அவர், சனிக்கிழமை (அக்டோபர் 3) மாலை நடைபெற்ற ‘ஒன்பீப்பள்.எஸ்ஜி’ அமைப்பின் தொண்டூழியர்களைப் பாராட்டும் தேநீர் விருந்தில் உரையாற்றினார்.

இனத்தைப் பற்றிய ஆய்வு, பண்பாட்டைப் பற்றிய பார்வை போன்ற உரையாடல்களை வழிநடத்துவது, இளையோருக்கான நல்லிணக்க மாநாடு, ‘ஒன்பீப்பள் மாதிரி ஐக்கிய நாடுகள் மாநாடு’ போன்றவற்றை முன்னெடுப்பது எனப் பல வடிவங்களில் தொண்டூழியர்கள் உழைப்பதாக விவரித்தார் டாக்டர் ஜனில்.

‘‘தொண்டூழியர்களின் செயல்பாடு ஆற்றல்மிக்கதாய் உள்ளது. இந்த ஆண்டு 21வது நல்லிணக்க மாநாட்டைக் கொண்டாடுவது இளைய தலைமுறையினர் இந்த உரையாடலைத் தாங்களே முன்னெடுக்கிறார்கள் என்பதற்குச் சான்று,’’ என்று அவர் தெரிவித்தார்.

இளையர், சமூக, சமய குழுக்களின் பிரதிநிதிகள், கூட்டாளி அமைப்புகளைச் சேர்ந்தோர் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் சமூக நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதில் சிறப்பாகப் பங்காற்றிய 39 தொண்டூழியர்கள் கெளரவிக்கப்பட்டனர். அவர்களுக்கு நல்லிணக்க விருது, உறவுப் பாலம் அமைப்போர் விருது, நீண்டகாலச் சேவை விருது என மூன்று பிரிவுகளில் விருதுகளை வழங்கினார் டாக்டர் ஜனில்.

நிகழ்ச்சியின் முடிவில் தற்போதைய சமூக ஊடகச் சூழலில் பல ஆண்டுகளாகப் பேணப்பட்டுவரும் நம்பிக்கை, இருபது நொடிகளில் சிதைந்துபோகக்கூடிய சவால் நிலவுவது குறித்த கேள்வியும் அவரிடம் முன்வைக்கப்பட்டது.

‘‘கடந்த இருபது ஆண்டுகளாக ஒரே மாதிரியான அணுகுமுறையை மட்டும் நாம் பின்பற்றவில்லை’’ என்று அவர் அதற்குப் பதிலளித்தார்.

இணையப் பதிவுகள், குறுங்காணொளிகள் முதல் சிறு குழுக் கலந்துரையாடல்கள் வரை பல்வேறு தளங்களை ‘ஒன்பீப்பள்.எஸ்ஜி’ பயன்படுத்தி வந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

‘‘பகிரப்பட்ட அதே விழுமியங்களிலும் நோக்கங்களிலும் அடுத்த தலைமுறையினர் கவனம் செலுத்தும் வரை, காணொளியைப் பயன்படுத்தினாலும் நேருக்கு நேர் உரையாடினாலும் அது சமுதாயத்திற்கு நன்மையே பயக்கும்.

‘‘நல்லிணக்க உரையாடல்களின் போக்கைத் தாங்களே தலைமையேற்று நடத்தும் அளவுக்குப் பொறுப்புடன் இளையர் திறம்படச் செயல்படுவது மிகவும் ஊக்கமளிக்கிறது,” என்று டாக்டர் ஜனில் குறிப்பிட்டார்.

மூத்தோர் விலகவில்லை, வழிகாட்டுகின்றனர்

நாட்டின் சமுதாய நல்லிணக்கத்திற்கான அடித்தளம் பல ஆண்டுகளாய் வலுவாகக் கட்டப்பட்டுள்ளது என்றாலும் சமூகங்களுக்கு இடையிலான நம்பிக்கையை எப்போதும் மேம்படுத்த வேண்டியது அவசியம் என்றும் அவர் நினைவூட்டினார்.

சமுதாயப் பிணைப்பை வலுப்படுத்துவது என்பது பல தலைமுறைகள் இணைந்து செய்யும் தொடர் பணி என்ற அவர், ‘‘இளையரிடம் தலைமைத்துவப் பொறுப்புகளை ஒப்படைப்பது என்பது மூத்த நிர்வாகிகள் விலகிவிடுவதாகப் பொருள்படாது; அவர்கள் தொடர்ந்து வழிகாட்டிகளாகவும் இருப்பதோடு பிற சமுதாயப் பணிகளிலும் பங்காற்றுவர்,’’ என்றார்.