"ஹர்திக் பாண்டியாவுக்குப் பின் உருப்படியா..".. கம்பீரின் தேர்வு முறையை விளாசிய பத்ரிநாத்
"ஹர்திக் பாண்டியாவுக்குப் பின் உருப்படியா..".. கம்பீரின் தேர்வு முறையை விளாசிய பத்ரிநாத்
சென்னை: இந்திய கிரிக்கெட் அணியில் முழு உடற்தகுதி இல்லாத வீரர்களைத் தேர்வு செய்வதாகவும், ஆல்-ரவுண்டர்களை உருவாக்குவதில் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தேவையின்றி பிடிவாதம் பிடிப்பதாகவும் முன்னாள் இந்திய வீரர் சுப்பிரமணியம் பத்ரிநாத் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
தனது யூடியூப் பக்கத்தில் பேசிய பத்ரிநாத், ஆப்கானிஸ்தான் தொடருக்கான இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் ஹர்ஷித் ரானா ஆகிய மூன்று வீரர்களும் உடற்தகுதி அனுமதியைப் பெறாமலேயே முன்னதாக சேர்க்கப்பட்டதைச் சுட்டிக்காட்டினார்.
இது குறித்துப் பேசிய அவர், "கௌதம் கம்பீர் எப்படியாவது ஆல்-ரவுண்டர்களை உருவாக்கிவிட வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார். அந்த அவசரத்தில், காயத்தால் அவதிப்படும் வீரர்களைக் கூட தொடர்ந்து அணியில் தேர்வு செய்கின்றனர். வாஷிங்டன் சுந்தர் மற்றும் நிதிஷ் ரெட்டி இயற்கையான ஆல்-ரவுண்டர்கள். ஆனால் ஒரு பந்துவீச்சாளரான ஹர்ஷித் ரானாவை வலுக்கட்டாயமாக ஆல்-ரவுண்டராக மாற்ற முயற்சிக்கின்றனர்" என்று கூறினார்.
மேலும், "ஹர்திக் பாண்டியாவுக்குப் பிறகு இந்திய அணியில் நிரூபிக்கப்பட்ட தரமான ஒரு ஆல்-ரவுண்டர் கூட உருவாகவில்லை. அணியில் 7 அல்லது 8 பந்துவீசுபவர்கள் இருக்க வேண்டும் என்ற கம்பீரின் எண்ணத்தால், குல்தீப் யாதவ் போன்ற தலைசிறந்த மேட்ச்-வின்னர் வீரர்கள் அணியில் இருந்து ஓரங்கட்டப்படுகின்றனர். பேட்டிங் வரிசையை நீட்டிக்க வேண்டும் என்பதற்காக உடற்தகுதி இல்லாதவர்களுக்கு முன்னுரிமை அளிப்பது சரியல்ல" என்று பத்ரிநாத் கடும் விமர்சனத்தை முன் வைத்தார்.
ஆப்கானிஸ்தான் தொடருக்கு தேர்வு செய்யப்பட்ட பின், செப்டம்பர் 7 அன்று நடந்த பயிற்சியின் போது மீண்டும் காயமடைந்த ஹர்ஷித் ரானா, ஆப்கானிஸ்தான் தொடர் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ளார். அவருக்குப் பதிலாக மாற்று வேகப்பந்து வீச்சாளராக யாஷ் தாக்கூர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இது போன்ற சம்பவங்கள் சமீப காலமாக இந்திய அணியில் அதிகரித்து வருவதையே பத்ரிநாத் சுட்டிக் காட்டி இருக்கிறார். ஒரு வீரர் முழு உடற்தகுதி பெறும் முன்பே அணியில் தேர்வு செய்ய வேண்டிய அவசியம் என்ன? என்ற கேள்வியுடன், ஏன் ஆல்-ரவுண்டர்களை மட்டுமே அதிக அளவில் தேர்வு செய்ய வேண்டும்? என்ற கேள்வியும் எழுகிறது.