📅 Saturday, 12 September 2026 IST | ஆவணி 27, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 12, 2026 12:30 PM

அஞ்சலி: சாலமன் பாப்பையா

அஞ்சலி: சாலமன் பாப்பையா

மதுரை: புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவரும் தமிழ் மொழியில் ஆளுமை பெற்றவருமான பேராசிரியர் சாலமன் பாப்பையா, தனது 90-வது வயதில் உடல் நலக்குறைவால் காலமானார். மதுரை​யில் அவரது உடலுக்கு தமிழ் ஆர்​வலர்​கள், அறிஞர்​கள், அரசி​யல் கட்​சி​யினர், பொது​மக்​கள், திரளானோர் அஞ்​சலி செலுத்தி வரு​கின்​றனர்.

மதுரை அரசரடி ஞானஒளிவுபுரத்​தைச் சேர்ந்​தவர் சாலமன் பாப்​பை​யா. மதுரை​யில் 1936-ம் ஆண்டு பிப். 22-ம் தேதி பிறந்​தார். இவரது மனைவி ஜெய​பாய், ஆசிரிய​ராக பணி​யாற்றி ஓய்வு பெற்​றவர். கடந்த 2025-ம் ஆண்டு இவர் கால​மா​னார்.

மில் தொழிலாளி சுந்​தரத்​துக்கு மகனாகப் பிறந்த சாலமன் பாப்​பை​யா, ஆரப்​பாளை​யம் கிராஸ் ரோட்​டில் அமைந்​துள்ள மாநக​ராட்சி வெள்​ளிவீ​தி​யார் பள்​ளி​யில் படித்து தியாக​ராசர் கல்​லூரி​யில் கல்​லூரி படிப்பை முடித்​து, அமெரிக்​கன் கல்​லூரி​யில் பேராசிரிய​ராக பணி​யாற்​றி, தான் கற்ற தமிழை உலகமெல்​லாம் கொண்டு சென்ற பெரு​மைக்​குரிய​வர்.

உடல் நலக்​குறை​வால் மதுரை தனி​யார் மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்டு இருந்​தார். சிகிச்சை பலனின்றி தனது 90-வது வயதில் நேற்று பிற்​பகலில் கால​மா​னார். இவருக்கு தியாகமூர்த்தி என்ற மகனும், விமலா என்ற மகளும் உள்​ளனர்.

சாலமன் பாப்​பையா பட்​டிமன்ற நடு​வ​ராக பணி​யாற்​று​வதற்கு முன்​பு, பட்​டிமன்​றங்​கள் மக்​களு​டைய பொழுதுப்​போக்கு நிகழ்​வாக மட்​டுமே பார்க்​கப்​பட்​டது.

இவர் நடு​வ​ராக பணி​யாற்ற தொடங்​கிய காலத்​துக்​குப் பிறகே பட்​டிமன்​றங்​கள், மக்​களு​டைய அறிவு தளமாக மாறத் தொடங்​கியது. பட்​டிமன்​றங்​களில் தமிழ் இலக்​கி​யங்​களுக்​கும், இதி​காசங்​களுக்​கும் முக்​கி​யத்​து​வம் கொடுத்து பேசி வந்த சூழலில், சாமானிய மக்​களின் வாழ்க்​கையை பேசி​ய​வர் சாலமன் பாப்​பை​யா.

அதன்​பிறகு, பட்​டிமன்​றங்​கள் என்​றாலே, அது சாலமன் பாப்​பை​யா​வின் முக​மாக மாறியது. முற்​போக்கு கருத்​துகளை மக்​களு​டைய கிராமத்து மொழி நடை​யில் நகைச்​சுவை​யாக பேசி, மிகப்​பெரிய சமூக மாற்​றங்​கள் ஏற்பட விதை​யாக இருந்​தவர். சமூகத்​தி​லும், அன்​றாடம் வீடு​களி​லும் நடக்​கும் சுவாரசிய நிகழ்​வு​களை பட்​டிமன்​றங்​களில் ஆழமான சமூக கருத்​துகளைத் தன்​னுடைய பேச்​சாற்​றலால் நகைச்​சுவை​யுடன் சொல்​லி, மக்​கள் மனங்​களை கவர்ந்​தவர்.

பல்​லா​யிரம் பட்​டிமன்​றங்​கள் மூலம் மக்​களை சிரிக்​க​வும், சிந்​திக்​க​வும் வைத்​தார். தொலைக்​காட்​சிகள் மட்​டும் பிரபல​மாக இருந்த காலத்​தில் தீபாவளி, பொங்​கல் உள்​ளிட்ட பண்​டிகை நாட்​களில் அவரது பட்​டிமன்​றம் இல்​லாமல் நிகழ்ச்​சிகள் இருக்​காது. அந்​தளவுக்கு பட்​டமன்ற நடு​வர்​களில் புகழின் உச்​சத்​தில் இருந்​தவர்.

தமிழ் மொழிக்கு அவர் ஆற்றிய தொண்டை பெரு​மைப்படுத்தும் வகையில் கடந்த 2000-ம் ஆண்​டு தமிழக அரசின் கலை​மாமணி விருதும், 2021-ம் ஆண்டு மத்​திய அரசின் பத்மஸ்ரீ விருதும் அவருக்கு வழங்கப்பட்டது. பார​தியார் மீது மிகுந்த பற்​றுக்கொண்ட இவர், பாரதியார் நினைவு நாளி​லேயே நேற்று (செப்​.11) கால​மானது குறிப்​பிடத்​தக்​கது.

மதுரை தத்தனேரி மின் மயானத்தில் அவரது உடல் இன்று தகனம் செய்யப்பட இருப்பதாக உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. அவரது உடலுக்கு பொது​மக்​கள், தமிழ் அறிஞர்​கள், பல்​வேறு அமைப்​பினர் உள்​ளிட்ட திரளானோர் அஞ்​சலி செலுத்திவரு​கின்​றனர்.