📅 Sunday, 18 October 2026 IST | ஐப்பசி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu October 18, 2026 02:01 PM

Exclusive

Exclusive

சென்னை: இசையமைப்பாளர் தேவா மாரடைப்பு காரணமாக நேற்று உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் இழப்பு. இயக்குநர் வசந்த்துக்கு அது பேரிழப்பாக இருக்கும். ஏனெனில் வசந்த் இயக்கத்தில் தேவா ஒவ்வொரு பாடலையும் காலங்கடந்து ஒலிக்கும் வகையில் கொடுத்திருக்கிறார். இந்நிலையில் தேவாவுடனான நினைவுகளை ஃபில்மிபீட் தமிழுக்கு பகிர்ந்துகொண்டார் இயக்குநர் வசந்த்.

தேனிசை தென்றல் என கொண்டாடப்படுபவர் இசையமைப்பாளர் தேவா. அவர் மாரடைப்பு காரணமாக நேற்று உயிரிழந்தார். தேவாவின் உயிரிழப்பு பலருக்கும் பேரிழப்பாக பார்க்கப்படுகிரது. அவர் எத்தனையோ இயக்குநர்களுடன் பணியாற்றியிருந்தாலும் வசந்த்தோடு பணியாற்றியபோது பாடல்கள் எல்லாம் ஸ்பெஷலாக வந்தன. ஆசை, நேருக்கு நேர், அப்பு உள்ளிட்ட படங்களின் பாடல்கள் இன்றுவரை எல்லோருக்கும் ஃபேவரைட்தான்.

வசந்த் பேட்டி: இந்நிலையில் தேவாவுடனான நினைவுகள் குறித்தும், பணியாற்றிய அனுபவங்கள் குறித்தும் பகிர்ந்துகொள்ள முடியுமா என வசந்த்திடம் ஃபில்மிபீட் தமிழ் சார்பாக கேட்டோம். அவரும் உடனே பேச தொடங்கினார். அவர் பேசுகையில், "தேவா பழகுவதற்கு இனிமையான மனிதர். ரொம்பவே எளிமையான மனிதர். சென்னை தூர்தர்ஷனில் அவர் வேலை செய்யும்போதிருந்து அவரை தெரியும். எம்எஸ் பெருமாள் சாருக்காக நிறைய பாரதியார் பாடல்களை எல்லாம் அவர் செய்திருப்பார். அதற்கு பிறகு பல வெற்றி திரைப்படங்கள் இணைந்து கொடுத்திருக்கிறோம்.

தேவா ஒரு உழைப்பாளி: கடுமையான உழைப்பாளி. மனிதர்களை மதிக்கக்கூடியவர். தலையில் எதையும் ஏற்றிக்கொள்ளாதவர். அவ்வளவு பிஸியாக இருந்தபோதும் ஒரு படத்தைகூட வேண்டாம் என்று சொன்னதே கிடையாது. நேருக்கு நேர் எங்கெங்கே பாடல் கம்போசிங்கின்போது அவரிடம், 'இவ்வளவு படங்கள் பணியாற்றுகிறீர்களே' என அவரிடம் ஒருமுறை கேட்டதற்கு, 'எப்படி வசந்த் நோ சொல்வேன். இந்த வேலை வேண்டும் என்றுதானே நான் விருப்பப்பட்டேன். எவ்வளவு நாட்கள் இந்த வேலை கிடைக்காமல் இருந்திருக்கிறேன். அதெல்லாம் நான் மறந்துவிட்டு பிஸி என்று சொல்ல முடியுமா?' என கேட்டார். அதையெல்லாம் என்னால் மறக்கவே முடியாது.

அவர் அப்படித்தான் சொல்வார்: பிளாக்‌ஷீப் எடுத்த விழாவில்தான் அவரை கடைசியாக சந்தித்தேன். அப்போதுகூட என்னுடைய கைகளை தூக்கி, 'ரொம்ப ராசியான கை' என சொன்னார். அதுகூட வைரலானது. அதற்கு பிறகு அவரை பார்க்கவில்லை ஃபோனில் பேசினேன். ஒரு பாடல் மிகச்சிறந்த பாடலாக உருவாக வேண்டும் என கேட்டுக்கொண்டே இருப்பேன். நான் எத்தனை கேட்டாலும் அவர் கொடுத்துக்கொண்டே இருப்பார். இது நம் பாடல்தானே. எனக்கும் நல்ல பாடல் வர வேண்டும் என்றுதானே பெஸ்ட் கேட்கிறீர்கள் என சொல்வார்.

உழைக்க தயாராக இருந்தார்: எங்கெங்கே பாடலை சரிகம நிகழ்ச்சியில் ஒரு குழந்தை பாடியபோது நானும் அவரும் சிறப்பு விருந்தினராக இருந்தோம். அப்போதும்கூட, 'வசந்த் சாருக்கு நான் போட்ட பாடல்கள் இன்னமும் எனக்கு பெயர் வாங்கி கொடுக்கிறது' என சொன்னார். அந்தப் பாடலுக்கு எவ்வளவும் உழைக்க அவர் தயாராக இருந்தார். ஆசை படத்தின் வெற்றிக்கு பிறகு நேருக்கு நேர் படம் செய்தோம்.

தேவாவின் ஆசை: அப்போது அவரிடம், 'ஆசை பாடல்கள் ஹிட்டடித்துவிட்டது. இதில் பாடகர்கள் விஷயத்தில் உங்களுக்கு என்ன வேண்டும் சொல்லுங்கள் செய்து தருகிறோம்' என சொன்னேன். மணிரத்னம்தான் தயாரிப்பாளர். எனது இசையில் ஆஷா போன்ஸ்லே பாட வேண்டும் என கேட்டார். உடனே மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மூலம் ஆஷாவிடம் பேசி பாட வைத்தோம். தேவா கேட்டு அதை நடத்த முடிந்ததில் எனக்கு மகிழ்ச்சி.

நல்ல விஷயங்கள்: அதேமாதிரி, 'வசந்த் படங்கள் வரும்போது யார் இசையமைப்பாளர் என ஆர்வத்துடன் பார்ப்பேன். ஏனெனில் நாம் வேலை செய்யும் பாடல்களுக்கு அவர் கூடவே நிற்பார்' என என்னை பாராட்டி பேசியிருந்தார். அதை மறக்கவே மாட்டேன். அந்த பெருந்தன்மை தேவாவுக்குத்தான் உண்டு. தம்பிகளை அவர் விட்டுக்கொடுக்கவே இல்லை. அவருடைய ஆர்கெஸ்ட்ரேஷனை தம்பிகள்தான் பார்த்துக்கொண்டார்கள். பஞ்ச பாண்டவர்கள் மாதிரி இருப்பார்கள். அண்ணன், தம்பிகள் எப்படி ஒற்றுமையோடு இருக்க வேண்டும் என்பதற்கு தேவா சாரின் குடும்பம்தான் உதாரணம். அவரது வாழ்க்கையிலிருந்து எடுத்துக்கொள்ள நிறைய நல்ல விஷயங்கள் இருக்கின்றன' என கூறினார்.

அந்தப் பாடல்கள்: தொடர்ந்து அவரிடம் அப்பு படத்தின், 'நினைத்தால் நெஞ்சுக்குழி இனிக்கும்' பாடல், புன்னகைக்க நேரம் ஒதுக்கு பாடல்கள் உருவான விதம் குறித்து கேட்டதற்கு, 'மதுரா நகரில் தமிழ்ச்சங்கம் என்ற பாடல் எனக்கு பிடித்த பாடல். அந்த மாதிரி ஒரு பாடல் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டோம். எனவே நிறைய கம்போசிங் செய்து 20, 25 ட்யூன் போட்டு நினைத்தால் ட்யூனை இறுதி செய்தோம். யாரும் ஷூட் செய்யாத இடத்தில் ஷூட் செய்ய வேண்டும் என முடிவு எடுத்தேன்.

ஆஃப்ரிக்கன் சஃபாரி என்ற பிரபலமான படம் ஷூட் செய்யப்பட்ட தென் ஆப்பிரிக்காவின் ஓபன் சஃபாரியில் ஷூட் செய்தேன். அதேபோல் புன்னகைக்க நேரம் ஒதுக்கு பாடலை பொறுத்தவரை, 'அந்தப் பாடல் வேகமாகவும் இருக்க வேண்டும் அதேசமயம் மறக்க முடியாததாகவும் இருக்க வேண்டும்' என முடிவு செய்தோம். நிறைய பிடித்த பாடல்களை பற்றி பேசி பேசித்தான் கம்போஸ் செய்வோம். உடனே ஹார்மோனியத்தை திறந்து கம்போசிங் போய்விட மாட்டோம். அப்படி ஜாலியாக பேசிக்கொண்டே கம்போஸ் செய்த பாட்டுதான் புன்னகைக்க நேரம் ஒதுக்கு' பாடல். எனக்கு அத்தனை பாடல்களையுமே சூப்பராக கொடுத்திருக்கிறார்' என்று முடித்தார்.