📅 Thursday, 17 September 2026 IST | புரட்டாசி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil September 17, 2026 08:34 PM

எஸ்ஐஏ விமானம் மருத்துவ அவசரநிலையால் இஸ்தான்புல்லிற்குத் திருப்பிவிடப்பட்டது

எஸ்ஐஏ விமானம் மருத்துவ அவசரநிலையால் இஸ்தான்புல்லிற்குத் திருப்பிவிடப்பட்டது

கடந்த செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 15) லண்டனிலிருந்து சிங்கப்பூர் நோக்கிப் புறப்பட்ட சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) விமானம், பயணி ஒருவருக்கு ஏற்பட்ட மருத்துவ அவசரநிலை காரணமாகத் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள விமான நிலையத்திற்குத் திருப்பிவிடப்பட்டது.

பிரிட்டன் தலைநகர் லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து எஸ்கியூ305 விமானம், உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை காலை 9.38 மணிக்குச் சிங்கப்பூருக்குப் புறப்பட்டது. அதே நாளில் உள்ளூர் நேரப்படி மாலை 5.07 மணிக்கு இஸ்தான்புல் விமான நிலையத்தில் அது தரையிறங்கியதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனப் பேச்சாளர் தெரிவித்தார். வியாழக்கிழமை, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

விமானம் தரையிறங்கியதும், மருத்துவ உதவி தேவைப்பட்ட பயணியைச் சந்தித்த மருத்துவக் குழுவினர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அந்தப் பயணியின் மருத்துவ நிலை குறித்த விவரங்களை எஸ்ஐஏ வெளியிடவில்லை.

அந்த ஏர்பஸ் ஏ350-900 வகை விமானத்தில் பயணிகள் 197 பேரும் சிப்பந்திகள் 16 பேரும் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

விமானச் சிப்பந்தியினரின் சட்டபூர்வப் பயண நேர வரம்பைத் தாண்டியதால், அந்த விமானம் செப்டம்பர் 16ஆம் தேதி உள்ளூர் நேரப்படி பிற்பகல் 12.10 மணிக்கு இஸ்தான்புல்லிலிருந்து புறப்படுமாறு மாற்றியமைக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பயணிகளுக்குத் தங்குமிடம், மாற்று விமானப் பதிவுகள் உட்பட தேவையான உதவிகள் வழங்கப்பட்டன.

பின்னர் அந்த விமானம் எஸ்கியூ9391 என்ற சேவை எண்ணின்கீழ், இஸ்தான்புல்லிலிருந்து புறப்பட்டு, செப்டம்பர் 17ஆம் தேதி சிங்கப்பூர் நேரப்படி அதிகாலை 3.33 மணிக்குச் சாங்கி விமான நிலையத்தை வந்தடைந்தது.

இச்சம்பவத்தால் பயணிகளுக்கு நேர்ந்த சிரமத்திற்குச் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மன்னிப்பு கேட்டுக்கொண்டது.