"எல்லா கிரெடிட்டையும் நீயே எடுத்துகிட்ட..".. வைபவ் சூர்யவன்ஷியை கலாய்த்த கேப்டன் இஷான் கிஷன்!
"எல்லா கிரெடிட்டையும் நீயே எடுத்துகிட்ட..".. வைபவ் சூர்யவன்ஷியை கலாய்த்த கேப்டன் இஷான் கிஷன்!
சென்னை: 2026 துலீப் டிராபி கிரிக்கெட் தொடரில் தென் மண்டலத்தை வீழ்த்தி கிழக்கு மண்டல அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் பிசிசிஐ வெளியிட்ட வீடியோவில், கிழக்கு மண்டல அணியின் கேப்டன் இஷான் கிஷன் மற்றும் 15 வயது துணை கேப்டன் வைபவ் சூர்யவன்ஷி இடையே நடந்த ஜாலியான உரையாடல் இணையத்தில் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது.
இந்த தொடரின் இறுதிப் போட்டியில், நடுவர் நாட்-அவுட் கொடுத்த சில முடிவுகளை வைபவ் சூர்யவன்ஷி தான் கேப்டன் இஷான் கிஷனை வற்புறுத்தி டிஆர்எஸ் ரிவ்யூ எடுக்க வைத்தார். அந்த முடிவுகள் துல்லியமாக விக்கெட்டுகளாக மாறவே, சமூக வலைதளங்களில் 'ரிவ்யூ மன்னன் வைபவ்' என ரசிகர்கள் புகழத் தொடங்கினர். இதை வைத்து இஷான் கிஷன் வைபவை வம்புக்கு இழுத்தார்.
வீடியோவில் வைபவை பக்கத்தில் வைத்துக் கொண்டு பேசிய இஷான் கிஷன், "பார்த்தீங்களா மக்களே.. எல்லா இடத்திலேயும் டிஆர்எஸ் ரிவ்யூ எடுத்ததுக்கான மொத்த கிரெடிட்டையும் இவரே தட்டிப் பறிச்சிட்டாரு.. நானே மனசுக்குள்ள ரிவ்யூ எடுக்கலாம்னு யோசிச்சு வச்சிருப்பேன். ஆனா இவரு சட்டுனு ஓடி வந்து என் பக்கத்துல நின்னு, 'நான் சொல்றேன் எடுங்க'ன்னு ரொம்ப கெத்தா பேசுவாரு. அப்புறம் இன்டர்நெட்ல எல்லாரும் 'வைபவ் தான் மாஸ், அவர்தான் விக்கெட் எடுத்து கொடுத்தாரு'ன்னு பேச ஆரம்பிச்சிடுவாங்க. ஆனா உண்மையிலேயே இந்த வேலையை இவரு ரொம்ப கச்சிதமா செஞ்சாரு, எனக்கு ரொம்ப சந்தோஷம்" என்று கலாய்த்தார்.
கேப்டன் தன்னை கிண்டலடிப்பதை ரசித்த வைபவ் சூர்யவன்ஷி சற்றும் அசராமல் நச் என்று ஒரு பதிலடி கொடுத்தார். "அண்ணே... நீங்க காயம் பட்டு மைதானத்தை விட்டு வெளிய போயிருந்தீங்களே, அப்போ யார் கேப்டன்சி பண்ணி ரிவ்யூ எடுத்து விக்கெட் வாங்கிக் கொடுத்தது? அதையும் கொஞ்சம் உலகத்துக்குச் சொல்லுங்க பார்ப்போம்" என்று சிரித்தபடியே கேட்டார்.
வைபவின் இந்த தக் லைஃப் பதிலைக் கேட்டு வாய்விட்டுச் சிரித்த இஷான் கிஷன், "ஆமாம்பா, அது உண்மைதான்.. அன்னைக்கு ரிவ்யூ எடுத்தது நம்ம வைபவ் தான். ஒருவேளை இந்திய அணியின் வருங்கால கேப்டன் இவர்தானோ என்னவோ, மேட்ச் கமெண்ட்ரில கூட, 'இனிமே கிழக்கு மண்டல அணிக்கு ரிவ்யூ எடுக்கணும்னா நேரா வைபவ்கிட்ட தான் போகணும்'னு சொல்லிட்டாங்க" என்றார்.
தொடர்ந்து வைபவை பாராட்டிய இஷான் கிஷன், "இவர் மிகச் சிறந்த பேட்ஸ்மேன் மட்டுமல்ல, அணியில் உள்ள சீனியர், ஜூனியர் என எல்லாரையும் நன்றாக கவனித்துக் கொள்ளும் நல்ல பையன்... அட இருங்க, அணியிலேயே கடைசி ஜூனியர் நீங்க தானே.. சாரி சாரி மறந்துட்டேன்! வைபவின் இந்த சுட்டித்தனம் எனக்கு ரொம்ப பிடிக்கும். தற்போது இருப்பதை விட எதிர்காலத்தில் இன்னும் மிக ஆபத்தான ஆட்டக்காரராக இவர் உருவெடுப்பார்" என்று மனதாரப் பாராட்டினார். மைதானத்தில் மட்டுமல்லாமல் வெளியிலும் இந்த அண்ணன் - தம்பி ஜோடி அடித்த லூட்டி தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.