📅 Monday, 05 October 2026 IST | புரட்டாசி 19, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema October 05, 2026 04:03 AM

ஏழைகளுக்கு ஏற்றம் தரும் தங்க மோதிரம் திட்டம்!

ஏழைகளுக்கு ஏற்றம் தரும் தங்க மோதிரம் திட்டம்!

தமிழகத்தில், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு, 'தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம்' கடந்த மாதம், 28ம் தேதி மதுரையில் தொடங்கப்பட்டது. மதுரை ராஜாஜி மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சியில், திட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்.

இந்த ஆண்டு ஜூன் 22ம் தேதி முதல், அரசு மருத்துவமனைகளில் பிறந்த, பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும், 1 கிராம் எடையில், 'ஹால்மார்க்' முத்திரை பதித்த, 22 காரட் தங்க மோதிரம் வழங்கப்படும்.

திட்டத்தில் பயன் பெற உள்ள குழந்தையின் தாய், தமிழகத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். மோதிரம் பெறுவதற்காக தனியாக விண்ணப்பிக்க தேவையில்லை. மருத்துவமனை மற்றும் பிறப்பு பதிவுகளின் அடிப்படையில், தகுதி சரிபார்க்கப்பட்டு நேரடியாக வழங்கப்படும்.

இத்திட்டமானது, முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று. திட்டத்திற்காக தமிழக அரசு ஆண்டுக்கு, 755.83 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. முதற்கட்டமாக, 1.28 லட்சம் தங்க மோதிரங்கள் கொள்முதல் செய்யப்பட்டு, பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

அரசு மருத்துவமனைகளில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்படும் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு, பச்சிளங்குழந்தையின் பெயரில் 1 கிராம் தங்கம் வழங்கப்படுவது பெரிய நிதியுதவியாகவே கருதப்படுகிறது. அதனால், பொதுமக்களிடையே இத்திட்டமானது, சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

அதுமட்டுமின்றி, அரசு மருத்துவமனைகள் மீதான நம்பகத்தன்மையையும் அதிகரிக்கும். அங்கு நடக்கும் பிரசவங்களின் எண்ணிக்கை மேலும் உயரும். கர்ப்பிணி பெண்களுக்கான மருத்துவ கண்காணிப்பு மற்றும் பிரசவ கால பாதுகாப்பு மேம்படும் என்றும் கூறப்படுகிறது. அத்துடன், பிரசவத்தில் ஒரு பெண்ணுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தால், அந்த இரண்டு குழந்தைகளுக்கும் தனித்தனியாக தங்க மோதிரம் வழங்கப்படும் என்பதும் கூடுதல் சிறப்பு.

தமிழர்களின் கலாசாரத்தில் தங்கத்திற்கு முக்கிய இடமுண்டு. அதனால், முதல்வர் துவக்கிவைத்த இத்திட்டம் குழந்தைகளின் எதிர்காலத்திற்கான ஒரு சிறிய முதலீடாக அல்லது அவசர தேவைகளுக்கான சேமிப்பாகவும் பார்க்கப்படுகிறது.

அதேநேரத்தில், இத்திட்டத்திற்காக ஆண்டுதோறும் ஒதுக்கப்படும், 755.83 கோடி ரூபாயை, அரசு மருத்துவமனைகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், நவீன மருத்துவ கருவிகள் வாங்கவும் பயன்படுத்தி இருக்கலாம் அல்லது பச்சிளங்குழந்தை மற்றும் தாயின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஊட்டச்சத்து உணவுகள் மற்றும் மருத்துவ பராமரிப்பிற்கு நேரடியாக பணமாகவோ அல்லது ஊட்டச்சத்து பொருட்களாகவோ வழங்கியிருக்கலாம் என்றும் விமர்சிக்கப்படுகிறது.

தமிழ் கலாசாரத்தில் தாய் மாமன் உறவானது, மிகவும் உயர்வாக மதிக்கப்படுகிறது. குழந்தை பிறந்ததும் தொட்டில் வாங்குவது, குழந்தைக்கு முதன் முதலில் மொட்டை அடித்து காது குத்துவது போன்ற சுப நிகழ்ச்சிகளை தாய் மாமனே தன் மடியில் குழந்தையை அமரவைத்து முன்னின்று நடத்துவார்.

பெண் குழந்தைகள் பருவம் அடையும் போது, அவர்களுக்கான தற்காலிக பந்தல் அமைப்பது முதல், விழாவிற்கான சீர்வரிசைகள் கொண்டு வருவது வரை, அவரே முதன்மை பொறுப்பேற்பார்.

தன் சகோதரி மற்றும் அவரது குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக தனது பொருளாதார நிலையை தாண்டி சீர் செய்வது தாய் மாமன்களின் வழக்கம். இது, பெண்ணிற்கு தன் பிறந்த வீட்டில் உள்ள உரிமையையும், புகுந்த வீட்டில் அவருக்கு இருக்கும் சமூக பாதுகாப்பையும் உறுதி செய்வதாக உள்ளது.

இப்படி தமிழ் சமூகத்தில் உன்னத உறவாக போற்றப்படும் தாய் மாமன் பெயரிலான திட்டத்தை முதல்வர் துவக்கி வைத்திருப்பது, ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தினருக்கு மிகவும் மகிழ்ச்சி தரும் விஷயமாகும். மேலும், குடும்பத்தின் பொருளாதாரத்திற்கு உதவும் உன்னதமான திட்டம் என்றும் சொல்லலாம். இத்தகைய திட்டத்தை செயல்படுத்திய முதல்வர் விஜயை பாராட்டலாம்.