"எச்சில் தட்டு கழுவினேன்.. பசிக்காக திருடினேன்".. தங்க நாயகன் அஸ்லம் இனாம்தாரின் கண்ணீர் கதை
"எச்சில் தட்டு கழுவினேன்.. பசிக்காக திருடினேன்".. தங்க நாயகன் அஸ்லம் இனாம்தாரின் கண்ணீர் கதை
ஐச்சி-நகோயா: 2026 ஆசிய விளையாட்டுப் போட்டி ஆடவர் கபடி இறுதிப்போட்டியில் இந்திய அணி 40-34 என்ற கணக்கில் ஈரானை வீழ்த்தி 9வது முறையாக தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றது. இந்த வரலாற்று வெற்றியில் ரெய்டு மற்றும் தடுப்பாட்டம் என இரண்டிலும் கலக்கி, கடைசி நிமிடங்களில் 2 முக்கிய புள்ளிகளை பெற்றுத் தந்த ஆல்ரவுண்டர் அஸ்லம் இனாம்தாரின் ஆட்டம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
மகாராஷ்டிராவின் தக்லிபான் என்ற சிறிய கிராமத்தில் பிறந்து, வறுமையின் கோரப் பிடியில் சிக்கி, இன்று ஆசியாவின் உச்சத்தைத் தொட்டுள்ள அஸ்லம் இனாம்தார், தனது கண்ணீர் நிறைந்த வாழ்க்கைப் பயணத்தையும் போராட்டங்களையும் மனம்திறந்து பேசியுள்ளார்.
"என் தந்தை மறைந்த போது, என் அம்மா குடும்பப் பொறுப்பை முழுமையாக ஏற்றுக்கொண்டார். ஐந்து குழந்தைகளையும் அவரே கவனித்து வளர்த்தார். பின்னர் என் அண்ணன் காவல்துறையில் சேர்ந்து குடும்பப் பொறுப்பை சுமந்தார். எந்த சூழலிலும் எதிர்த்து நின்று எப்படி போராட வேண்டும் என்பதை நான் என் குடும்பத்திடம் இருந்துதான் கற்றுக்கொண்டேன்."
"ரயில்களில் டிக்கெட் எடுக்காமல் தான் பயணம் செய்வேன். என்னிடம் கையில் காசே இருக்காது. சில நேரங்களில் எதுவும் சாப்பிடாமல் குடிக்காமல் பட்டினியாகவே இருப்பேன். அப்போது எனக்கு சுமார் 14 அல்லது 15 வயது இருக்கும். போட்டிகளில் விளையாட தனியாகவே வெளியூர்களுக்குப் போவேன். எனக்கு கபடி மீது அவ்வளவு வெறி இருந்தது."
"டீக்கடைகளிலும், பழச்சாறு கடைகளிலும் வேலை பார்த்தேன். விவசாய நிலங்களில் கூலி வேலை செய்தேன். என் வயிற்றுப் பசிக்காக நான் எல்லாவற்றையும் செய்தேன். டீக்கடைகளில் பாத்திரங்களை கழுவினேன், மக்களின் கழிவறைகளைக் கூட சுத்தம் செய்தேன். என் வாழ்க்கையில் நான் எல்லா வகையான வேலைகளையும் செய்து பார்த்துவிட்டேன்."
"என் வயிற்றுப் பசிக்காக நான் சில சமயங்களில் திருடவும் செய்தேன். தெருக்களில் கிடக்கும் சிறிய பாட்டில்களை எடுத்து பழைய இரும்பு கடைகளில் விற்பேன். தவறான நோக்கத்தில் நான் எதையும் செய்யவில்லை. எனக்கு பசிக்கு சாப்பாடு தேவைப்பட்டது என்பதால் மட்டுமே அப்படி செய்தேன். அன்றைக்கு என் வாழ்க்கை சூழல் அப்படி இருந்தது."
"இரவு முழுவதும் வேலை செய்வேன், காலையில் எழுந்து பயிற்சிக்கு செல்வேன். பகலில் பிறரின் விவசாய நிலங்களில் வேலை செய்வேன், மாலையானதும் கபடி மைதானத்திற்கு ஓடுவேன். அந்த அளவுக்கு கபடி மீதான வெறி என் வாழ்க்கையில் எப்போதுமே இருந்தது."
"என் அண்ணன் மிகச்சிறந்த கபடி வீரர். எங்கள் பகுதியில் அவருக்கு நல்ல பெயர் இருந்தது. இரண்டு, மூன்று மாவட்டங்களில் உள்ள மக்கள் அவரை நன்றாக அறிந்து வைத்திருந்தார்கள். ஒருநாள் மக்களிடம் என் பெயரும் இதேபோல் பேசப்பட வேண்டும் என்று நான் நினைப்பேன். அதற்காகத்தான் நான் தொடர்ந்து விடாமல் போராடினேன்."
"புரோ கபடியில் எனது முதல் சீசன் ஒப்பந்தம் 8 லட்சம் ரூபாய். என்னை பொறுத்தவரை அந்த 8 லட்சம் ரூபாய் என்பது 8 கோடி ரூபாய் போல தெரிந்தது. அந்த பணம் கைக்கு வந்ததும், என் தாய்க்கு ஒரு தங்க சங்கிலி வாங்கி கொடுத்தேன். அன்று நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை."
புரோ கபடியில் புனேரி பல்தான் அணியில் தனது திறமையை மெருகேற்றி, 2026 ஆசிய போட்டியிலும் தங்கம் வென்றுள்ள அஸ்லம் இனாம்தாரின் இந்த தன்னம்பிக்கைப் பயணம், சாதிக்கத் துடிக்கும் ஒவ்வொரு இளைஞனுக்கும் மிகப்பெரிய பாடமாக அமைந்துள்ளது.