எஃப்1 கார் பந்தயம்: சிங்கப்பூர் போக்குவரத்து மாற்றங்கள்
சிங்கப்பூரில் வரும் அக்டோபர் 9, 10, 11 ஆகிய தேதிகளில் ஃபார்முலா ஒன் (எஃப்1) கார்ப் பந்தயம் நடைபெறவுள்ளது.
அதனையொட்டி மரினா பே, பாடாங் ஆகிய வட்டாரங்களில் குறிப்பிட்ட சில சாலைகள் அக்டோபர் 7ஆம் தேதி முதல் தற்காலிகமாக மூடப்படும் என நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
ராஃபிள்ஸ் அவென்யூ, ராஃபிள்ஸ் பூலேவார்ட், எஸ்பிளனேட் டிரைவ், செயிண்ட் ஆண்ட்ரூஸ் ரோடு ஆகியவை பாதிக்கப்பட்ட சாலைகளில் அடங்கும் என ஆணையம் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 4) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
பந்தயத்திற்கான முன்னேற்பாடுகள், சாலை உள்கட்டமைப்புகளை அமைக்கும் பணிகள் காரணமாக, அக்டோபர் 7ஆம் தேதி பின்னிரவு 12.01 மணி முதல் அக்டோபர் 13ஆம் தேதி அதிகாலை 5.30 மணி வரை குறிப்பிட்ட சில சாலைகள் தற்காலிகமாக மூடப்படும்.
பந்தயம் முடிவடைந்த பிறகு, மூடப்பட்ட சாலைகள் அனைத்தும் கட்டம் கட்டமாக மீண்டும் போக்குவரத்திற்காகத் திறக்கப்படும்.
பொதுமக்களின் பயண வசதிக்காக, பந்தயம் நடைபெறும் நாள்களில் பேருந்து, ரயில் சேவைகள் கூடுதல் நேரம் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 9,10 ஆகிய தேதிகளில் பின்னிரவு 12.30 மணி வரையிலும் அக்டோபர் 11ஆம் தேதி பின்னிரவு 12.45 மணி வரையிலும் அனைத்து பெருவிரைவு ரயில் சேவைகளும் நீட்டிக்கப்படும்.