சிங்கப்பூர் வரி வருவாய் 97.3 பில்லியன் வெள்ளி: பொருளாதாரம் வளர்ச்சி
சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையம் கடந்த நிதியாண்டில் (2025/2026) திரட்டிய வரி வருவாய் 9.4 விழுக்காடு அதிகரித்து 97.3 பில்லியன் வெள்ளியை எட்டியுள்ளது.
வலுவான பொருளியல் நடவடிக்கைகள், பயனீட்டாளர் செலவுகள் அதிகரித்ததே இந்தச் சாதனை அளவுக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.
2002 ஆம் ஆண்டு முதல் உள்ள தரவுகளின் அடிப்படையில் பார்க்கும்போது, இதுவே இதுவரை வசூலிக்கப்பட்ட ஆகப் பெரிய வரித் தொகையாகும்.
இந்த வரி வருவாய் அரசாங்கத்தின் மொத்த செயல்பாட்டு வருவாயில் 74.8 விழுக்காடாகவும், சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 12.3 விழுக்காடாகவும் உள்ளது.
நிறுவன வருமான வரி தொடர்ந்து மிகப்பெரிய வருவாய் மூலமாகத் திகழ்கிறது. இது முந்தைய நிதியாண்டில் வசூலிக்கப்பட்ட 30.9 பில்லியன் வெள்ளியிலிருந்து 34.4 பில்லியன் வெள்ளியாக உயர்ந்துள்ளது. இது மொத்த வரி வசூலில் 35.4 விழுக்காடாகும்.
இரண்டாவது பெரிய வருவாய் மூலமாகப் பொருள், சேவை வரி அமைந்துள்ளது. பயனீட்டாளர் செலவு அதிகரித்ததால் அதன் வசூல் 20 பில்லியன் வெள்ளியிலிருந்து 21.7 பில்லியன் வெள்ளியாக உயர்ந்துள்ளது.
தனிநபர் வருமான வரி வசூல் 19.1 பில்லியன் வெள்ளியிலிருந்து 20.9 பில்லியன் வெள்ளியாக அதிகரித்துள்ளது.
சொத்து வரி 6.9 பில்லியன் வெள்ளியையும், முத்திரைத் தீர்வை 7.3 பில்லியன் வெள்ளியையும் ஈட்டித் தந்துள்ளன.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
மேலும், சூதாட்ட வரி 3.6 பில்லியன் வெள்ளியைத் தொட்டுள்ளது.
வரி ஏய்ப்பு தொடர்பாக 8,560 வழக்குகளை உள்நாட்டு வருவாய் ஆணையம் விசாரித்து வருகிறது. அதுதொடர்பாக கிட்டத்தட்ட 589 மில்லியன் வெள்ளி வரியையும் அபராதத்தையும் மீட்டுள்ளது.
மேலும், பல்வேறு ஆதரவுத் திட்டங்கள் மூலம் 126,200 வணிக நிறுவனங்களுக்குக் கிட்டத்தட்ட 1.2 பில்லியன் வெள்ளி மதிப்பிலான மானியங்களையும் ஆணையம் வழங்கியுள்ளது.
வரும் 2028 ஏப்ரல் முதல், பொருள், சேவை வரி பதிவு செய்துள்ள அனைத்து வணிகங்களும் இன்வாய்ஸ்நவ் (InvoiceNow) கட்டமைப்பில் இணைந்து, தங்களுடைய விவரங்களை ஆணையத்திடம் நேரடியாகச் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்தப் புதிய நடைமுறை 2031 ஏப்ரல் வரை கட்டம் கட்டமாகச் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.