Dorothy Review: டோரதி விமர்சனம்.. கார்த்திக் சுப்புராஜின் சூப்பர் படமா? குப்பைப் படமா?
சென்னை: ஜிகர்தண்டா படத்தின் ஆரம்பத்தில் வரும் வசனத்தை வைத்தே இந்த படத்தை இந்த சமூகம் கொண்டாடும் மற்றும் திட்டித் தீர்க்கும். ஆனால், ஒரு சினிமா படைப்பாக கார்த்திக் சுப்புராஜ் தான் சொல்ல வந்த கருத்தை கிராஃப்ட்டாக ஆணி அடித்தாற் போல சொல்லியுள்ளார். இது அவரோட மாஸ்டர் பீஸ் படம் என்றே சொல்லலாம்.
ஆரம்பத்திலேயே இளையராஜாவின் அறிமுக டைட்டில் கார்டுடன் படம் ஆரம்பிப்பது முதல் கடைசியாக வர் குரலில் வரும் அந்த "வண்ணக்கிளி" பாடல் அன்னக்கிளி நாயகனை கொண்டாடி தீர்க்க அனைத்து காரணங்களையும் அவரது இசை மூலமாகவே அடுக்கி வைத்துள்ளது.
தனது கமர்ஷியல் படங்களில் ஏதாவது ஒரு பிரச்னையை கையிலெடுத்து படமாக்கி வரும் கார்த்திக் சுப்புராஜ் வெற்றி, தோல்விகளை சந்தித்தாலும் இறைவி படத்துக்குப் பிறகு அவரது பெயரை இறுதி வரை சொல்லும் படமாக இந்த டோரதி என்றைக்கும் நிலைத்திருக்கும்.
டோரதி கதை: ஆண் நெடில்.. பெண் குறில் சின்னது "பொட்டச்சி" போட்டுத்தள்ளிட்டு போயிட்டே இருக்கணும். நம்ம மானம், கெளரவம் தான் முக்கியம் என தனது மனைவியையும் மகளையும் கொன்று விட்டு தனது 3 மகன்களுடன் வாழ்ந்துக் கொண்டிருக்கும் வீரய்யாவ்வின் (முத்துகுமார்) கடைக்குட்டி மகன் தான் சுப்பு (சனந்த்). சிறு வயதிலேயே புதிதாக வந்த கார்த்தியை (ரிஷிகாந்த்) சில மாணவர்கள் அடிக்க பள்ளிக் கூடத்திலேயே புரூஸ் லீ போல சண்டைப் போட்டுக் காப்பாற்றி நட்பாகிறான்.
சம்பவக்கார்களின் வீட்டில் வளர்வதால் இருவரும் சம்பவக்காரர்களாகவே மாறுகின்றனர். 2வது அண்ணன் திடீரென டோரதியை (கீர்த்தி சுரேஷ்) திருமணம் செய்துக் கொண்டு வீட்டுக்கு வருகிறான். மலையாளியான அவருடன் சனந்த் நெருக்கமாக பழக இடைவேளைக்கு முன்பு ஒரு சம்பவம் நிகழ்கிறது.
அதன் பிறகு கார்த்தியே சுப்புவை கொலை செய்யும் சூழலுக்குத் தள்ளப்பட இறுதியில் என்ன ஆனது என்பது தான் டோரதி படத்தின் கதை.
படம் எப்படி இருக்கு?: கண்டிப்பாக சனந்த்துக்கு இந்த படத்திற்காக தேசிய விருது கிடைக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. மனுஷன் அந்தளவுக்கு அப்படியொரு கதாபாத்திரத்தை ஏற்று நடித்து மிரட்டியுள்ளார். முதல் பாதியில் கிராமத்து இளைஞர்களாக இருவரும் அடிதடி, சண்டை என செல்ல, கீர்த்தி சுரேஷ் வந்ததும் படத்தில் சில கலர் தென்பட அந்த நிறங்கள் மீண்டும் வெளுத்து பிளாக் அண்ட் ஒயிட் மோடுக்குச் செல்ல, 2வது பாதியில் ஒரு ரோடு டிராவல் படமாக கார்த்திக் சுப்புராஜ் ரிஷிகாந்தையும் சனந்தையும் நடிக்க வைத்துள்ள விதமும் அவர்களுடைய நடிப்பும் மெய் சிலிர்க்க வைக்கிறது.
இவன் தான் எனக்கு வில்லன் என சனந்த் அப்பாவாக நடித்துள்ள முத்துகுமாரை பார்த்து சொல்ல படம் முழுவதும் முத்துகுமார் ஆணவ வெறி பிடித்த மனிதனாக வாழ்ந்துள்ளார். கண்டிப்பாக அந்த காலத்தில் நம்பியார் வாங்கிய அனைத்து திட்டுகளையும் ஒரே படத்தில் முத்துகுமார் வாங்கிவிடுவார் என்பது உறுதி. அதிலும் அந்த விசில் ஊதிக்கொண்டே அவர் செய்யும் வில்லத்தனம் வேறலெவல்.
பிளஸ்: கார்த்திக் சுப்புராஜ் போல்டான கதையை கையில் எடுத்த நிலையில், எந்த இடத்திலும் படம் தொய்வாகி விடக் கூடாது என்றும் போர் அடித்து விடக் கூடாது என்பதையும் பார்த்து ஸ்க்ரீன்பிளேவை செதுக்கிய விதம் சிறப்பு. ஒட்டுமொத்த படத்துக்கும் பெரிய பலம் என்றால் அது இளையராஜாவின் இசை தான். டேப்ரிகார்டரில் ஓடும் அந்த பழைய பாடல்களும், சேவச்சண்டை, ஆடு சண்டை, வெட்ட வெளியில் சனந்த் மற்றும் ரிஷிகாந்த் இருவரும் ஒருவரை கொல்லும் காட்சிகள், கிளைமேக்ஸ் காட்சிகள் படமாக்கிய விதம், திருநங்கை ஜீவாவின் போர்ஷன் என ஏகப்பட்ட பிளஸ்கள் படத்தை தூக்கி நிறுத்துகின்றன. அந்த கிணத்துக்குள் இடம்பெற்ற காட்சிகளும் அதை ஒளிப்பதிவாளர் திரு படமாக்கிய விதமும் மலைக்க வைக்கிறது.
மைனஸ்: படத்தின் பெரிய பிரச்னையே கிளைமேக்ஸ் தான். நட்புக்குள் எப்படி காதல் மலர்கிறது என்கிற கேள்வி எழத்தான் செய்கிறது. நட்பை கொச்சைப் படுத்தும் விதமாக படம் இருக்கு என விவாதங்கள் வெடிக்க கடைசியில் "இன்னும் பத்து ஆண்டுகளில்" என்கிற ஒரு வசனத்தையும் கார்த்திக் சுப்புராஜ் வைத்துள்ளார். கீர்த்தி சுரேஷ் காட்சியிலும் ஒரு தெளிவு இல்லாமல் படம் பார்க்கும் நாமே ஊகித்துக் கொள்ளும் படி செய்துள்ளது லேசாக இடிக்கிறது. மனிதர்களில் உள்ள குறைகளை சொல்லும் படத்தில் சில குறைகளை வேண்டுமென்றே கார்த்திக் சுப்புராஜ் வைத்துள்ளாரா? என்கிற கேள்விகளும் எழத்தான் செய்கிறது. ஆனாலும், இது கார்த்திக் சுப்புராஜின் மாஸ்டர்பீஸ் படம் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. ஆணவம், ஆண் என்கிற அகங்காரம், பெண்களுக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் உள்ளிட்டவற்றை போல்டாக பேசியுள்ள படத்தை தாராளமாக தியேட்டருக்குச் சென்று பார்க்கலாம். ஏ சான்றிதழ் படம் என்பதால் குழந்தைகளை அழைத்துச் செல்ல வேண்டாம்.