📅 Monday, 21 September 2026 IST | புரட்டாசி 5, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
World News September 21, 2026 08:04 AM

சவூதி-ஹூதி போர்: விரிவடையும் அபாயம்

சவூதி-ஹூதி போர்: விரிவடையும் அபாயம்

வாஷிங்டன்: சவூதி அரேபியாவுக்கும் ஹூதி போராளி அமைப்புக்கும் இடையே மூண்டுள்ள போர் விரிவடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கா சனிக்கிழமை (செப்டம்பர் 19) எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதேவேளையில் கேம்ப் டேவிட் என்ற தனிப்பட்ட அதிபர் வளாகத்தில் வாரயிறுதியை கழிக்கத் திட்டமிட்டிருந்த அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், அங்கிருந்து எதிர்பாராதவிதமாக வெள்ளை மாளிகைக்கு அன்றைய தினம் திரும்பிவிட்டார்.

இதற்கிடையில், ஈரான் ஆதரவுடன் இயங்கும் ஹூதி போராளி அமைப்பு, சவூதி அரேபியத் தலைநகரான ரியாத்தைக் குறிவைத்து, ஏவுகணைகள், ஆளில்லா வானூர்திகள் ஆகியவற்றைக் கொண்டு தாக்குதல் நடத்தியதாக அறிவித்துள்ளது.

ரியாத்தில் அந்தத் தாக்குதல் சனிக்கிழமை நடத்தப்பட்டதாக அனைத்துலக ஊடகங்கள் காணொளிகளை வெளியிட்டுள்ளன. செங்கடலின் கடற்கரையோரங்களில் செயல்படும் சவூதி அரேபியாவின் எரிபொருள் உற்பத்தி ஆலைகளும் தாக்குதல்களில் குறிவைக்கப்பட்டதாக ஹூதி போராளி அமைப்பினர் தெரிவித்தனர்.

ரியாத்தை நோக்கி சனிக்கிழமை அனுப்பப்பட்ட ஏவுகணை ஒன்றைத் தடுத்து அழித்துவிட்டதாக சவூதி அரேபிய அரசாங்க அமைப்பு கூறியது. வேறு ஏதேனும் தாக்குதல்கள் நடந்தனவா, யாருக்கும் காயங்கள் ஏற்பட்டனவா என்பதை அது உறுதிப்படுத்தவில்லை.

சவூதி அரேபியத் தலைநகரின் அனைத்துலக விமான நிலையத்தில் பயணங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. விமான நிலையம் அருகில் உள்ள எண்ணெய்க் கிடங்குகளில் இருந்து கறும்புகை கிளம்புவதைக் காணொளிகள் காட்டின.

சவூதி அரேபியாமீது ஜூலை மாதம் ஹூதி போராளி அமைப்பு தாக்குதலைத் தொடங்கியது. இப்போதுதான் முதன்முறையாக ஆகாயத் தாக்குதலுக்கான எச்சரிக்கைப் பேரொலி தலைநகரில் எழுப்பப்பட்டது.

வெளியுறவு அமைச்சு எச்சரிக்கை

அமெரிக்க வெளியுறவு அமைச்சு, மத்திய கிழக்கில் உள்ள அதன் குடிமக்களுக்கு அபாய அறிவிப்பை விடுத்துள்ளது.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

விழிப்புணர்வுடன் இருக்கும் அதே வேளையில் விமானப் பயணங்கள் தடைப்படுவது போன்ற பயண இடையூறுகளை எதிர்பார்க்கும்படி அதன் அறிக்கையில் அது கூறியுள்ளது. மத்தியக் கிழக்கிற்குப் பயணம் மேற்கொள்வதைக் கவனமாகப் பரிசீலிக்கும்படியும் அதன் அறிக்கையில் அமெரிக்கர்களை அது கேட்டுக்கொண்டது.

சவூதியின் ஆகாயத் தற்காப்புக் கூட்டணி

குடிமக்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்திய எதிரிகளின் முயற்சிகளை முறியடித்துவிட்டதாக சவூதி அரேபியத் தலைமையில் செயல்படும் ஆகாயத் தற்காப்புக் கூட்டணியின் பேச்சாளர் அறிக்கையொன்றில் தெரிவித்தார். பிஷ், தையிஃவ், ஃபரசான், யான்பூ போன்ற நகர்களை அவர் குறிப்பிட்டார்.

ஹூதி பேச்சாளர் விளக்கம்

இணையத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில் ஹூதி ராணுவப் படைப் பேச்சாளர் யாஹ்யா அல் சரியா, பற்பல கண்டம்விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளும் ஆளில்லா வானூர்திகளும் பாய்ச்சப்பட்டதாகத் தெரிவித்தார். அவை ரியாத் நகர் உட்பட சவூதி அரேபியாவின் அரசாங்க நிறுவனமான அராம்கோ எண்ணெய் எரிவாயு உற்பத்தி வளாகம் அமைந்துள்ள யான்பூ கடற்கரைப் பகுதி ஆகியவற்றைக் குறிவைத்து அனுப்பப்பட்டன என்றும் அவர் விளக்கினார்.

தற்போது, ஹூதி போராளி அமைப்பின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ள ஏமனின் தலைநகரான சானாவை சவூதி அரேபியா தாக்கியதற்குப் பதிலடியாக இது நடந்தது என்று அவர் கூறினார்.

கடந்த வாரம் முழுவதும் 300க்கும் மேற்பட்ட தாக்குதல்களை சவூதி அரேபியா ஏமனின் பல பகுதிகளில் மேற்கொண்டது எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.