📅 Thursday, 15 October 2026 IST | புரட்டாசி 29, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News October 15, 2026 02:03 PM

சவுதியில் போர் அச்சுறுத்தல்... இந்தியர்களை காக்கத் திட்டம் என்ன?

சவுதியில் போர் அச்சுறுத்தல்... இந்தியர்களை காக்கத் திட்டம் என்ன?

சவுதியில் போர் அச்சுறுத்தல்... இந்தியர்களை காக்கத் திட்டம் என்ன?

சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்திலுள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தின் மீது அக்டோபர் 8-ம் தேதி நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில், சவுதி விமான நிறுவனத்துக்குச் சொந்தமான பயணிகள் விமானம் சேதமடைந்தது. விமானி ஹமூத் அலி அல்-கல்தாமி உயிரிழந்தார். இதற்கு முந்தைய நாள்களில் ரியாத், அப்ஹா விமான நிலையங்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அந்தத் தாக்குதல்களில் மூன்று பேர் உயிரிழந்ததாகவும், 36 பேர் காயமடைந்ததாகவும் சவுதி விமானப் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் எதிரொலியாக, ஏர் இந்தியா உள்ளிட்ட விமான நிறுவனங்கள் ரியாத்துக்குச் செல்லும் சில விமான சேவைகளைத் தற்காலிகமாக நிறுத்தின.

இந்தத் தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்றதாக ஹூதி அமைப்பு தெரிவித்திருக்கும் நிலையில், சவுதி அரேபியாவில் வசிக்கும் லட்சக்கணக்கான இந்தியர்களின் பாதுகாப்பு குறித்த கவலை அதிகரித்திருக்கிறது. 27 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் அங்கு வசிப்பதாக கணிக்கப்படும் நிலையில், `அவர்களைப் பாதுகாக்க இந்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துவருகிறது?’ என்ற கேள்வி முக்கியத்துவம் பெறுகிறது.

விமான நிலையங்களுக்கே அச்சுறுத்தல்!

ஏமனை மையமாகக்கொண்டு செயல்படும் ஹூதி ஆயுதக்குழுவுக்கும், சவுதி அரேபியாவுக்கும் இடையிலான மோதல் நீண்டகாலப் பின்னணியைக்கொண்டது. ஏமன் உள்நாட்டுப் போரில் சவுதி அரேபியாவின் தலையீடும், ஹூதிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளும் இரு தரப்புக்கும் இடையிலான பகைமைக்கு முக்கியக் காரணங்களாக உள்ளன. ஈரானின் ஆதரவைப் பெறும் ஹூதிகள், ஏவுகணைகள், ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல்களை நடத்திவருகின்றனர்.

தற்போதைய தாக்குதல்கள் விமான நிலையங்களைத் தாண்டி, பிராந்தியத்தின் பாதுகாப்புக்கும், விமானப் போக்குவரத்துக்கும் அச்சுறுத்தலாக மாறியுள்ளன. விமான சேவைகள் ரத்தாவது, பயணங்கள் தடைப்படுவது போன்ற பாதிப்புகள் அங்கு பணிபுரியும் இந்தியர்களையும், அவர்களின் குடும்பங்களையும் நேரடியாக பாதிக்கக்கூடும்.

இந்தியர்களின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு?

சவுதி அரேபியாவில் கட்டுமானத் தொழிலாளர்கள், ஓட்டுநர்கள், பொறியாளர்கள், மருத்துவப் பணியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், வணிகர்கள் எனப் பல்வேறு துறைகளில் இந்தியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களின் வருமானத்தை நம்பி இந்தியாவில் ஏராளமான குடும்பங்கள் வாழ்கின்றன. குழந்தைகளின் கல்வி, பெற்றோரின் மருத்துவச் செலவு, வீட்டுக் கடன் எனப் பல குடும்பப் பொறுப்புகளை அவர்கள் வெளிநாட்டு உழைப்பின் மூலம் நிறைவேற்றுகின்றனர்.

இந்தியர்களின் பாதுகாப்பில் சவுதி அரேபிய அரசுக்கு முதன்மையான பொறுப்பு இருக்கிறது. அதேவேளையில், இந்திய அரசும் தனது தூதரகங்கள் வழியாக நிலைமையைக் கண்காணித்து, அவசர உதவியையும், தேவையான பயண ஏற்பாடுகளையும் ஒருங்கிணைக்க வேண்டும்.

தாக்குதல்களைத் தொடர்ந்து, ரியாத்திலுள்ள இந்தியத் தூதரகம் இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும், வீடுகளுக்குள் பாதுகாப்பாக இருக்கவும் உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும் கேட்டுக்கொண்டிருக்கிறது. இந்த அறிவுறுத்தல்களுடன், அவசர உதவி எண்கள் முறையாகச் செயல்படுவதையும், பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக உதவி பெறுவதையும் உறுதிப்படுத்துவது அவசியம்.

இது அவசியமான நடவடிக்கை என்பதோடு, நிலைமை மேலும் மோசமடைந்து வரும் நிலையில், விமான சேவைகள் தொடர்ந்து நிறுத்தப்பட்டால் மாற்றுப் பயண ஏற்பாடுகள் என்னென்ன... இந்தியர்களை அவசரமாக வெளியேற்றவேண்டிய சூழல் ஏற்பட்டால் அதற்கான திட்டம் தயாராக இருக்கிறதா... இத்தகைய சூழலில் யாரைத் தொடர்புகொள்ள வேண்டும், எங்கு பாதுகாப்பாகத் தங்க வேண்டும் என்பதற்கான தெளிவான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டிருக்கின்றனவா?

மத்திய அரசு உற்று நோக்குகிறதா?

சவுதி அரேபியாவில் பணிபுரியும் இந்தியர்கள் அனுப்பும் பணம், இந்தியக் குடும்பங்களின் வாழ்வாதாரத்துக்கும், நாட்டின் வெளிநாட்டுப் பணவரவுக்கும் முக்கியப் பங்களிப்பை வழங்குகிறது. எனவே, அவர்களின் பாதுகாப்பு என்பது வெறும் வெளிநாட்டுக் கொள்கை சார்ந்த விவகாரம் மட்டுமல்ல; இந்தியக் குடும்பங்களின் பொருளாதார நலனையும் சார்ந்தது.

இந்திய அரசு சவுதி அரேபிய அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து, அவசர உதவி மையங்கள், நம்பகமான தகவல் பரிமாற்றம், மாற்றுப் பயண ஏற்பாடுகள், தேவைப்பட்டால் பாதுகாப்பான வெளியேற்றத்துக்கான முன்னேற்பாடுகள் குறித்துத் தெளிவுபடுத்த வேண்டும். இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன, நிலைமை மோசமடைந்துவரும் நிலையில் செயல்படுத்தப்படவிருக்கும் திட்டம் என்ன என்பதையும் அரசு வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்.

வெளிநாடுகளில் உழைக்கும் இந்தியர்களின் பங்களிப்பைப் போற்றுவதோடு மட்டுமல்லாமல், நெருக்கடி நேரத்தில் அவர்களின் உயிரையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பதற்கான பொறுப்பையும் இந்திய அரசு உறுதியாக ஏற்க வேண்டும். இதுதான் ஜனநாயக நாட்டின் கடமையும்கூட!